Published : 23 Jan 2020 08:05 AM
Last Updated : 23 Jan 2020 08:05 AM

சேலம் சம்பவத்தின் பின்விளைவுகள்

திராவிடர் கழகம் தங்களுடைய ‘மூட நம்பிக்கை ஒழிப்பு' மாநாட்டின் ஒரு பகுதியாக சேலத்தில் ஜனவரி 24-ல் நடத்திய மதநிந்தனை ஊர்வலத்தையும் அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களையும் தமிழக அரசு கையாண்டுள்ள விதம் இம்மாநிலத்தின் நிர்வாக வரலாற்றில் ஒரு களங்கமான அத்தியாயமாக இடம் பெற்றுவிட்டது. இந்த மாநாட்டை நடத்தியவர்களின் உள்நோக்கம், அருவெறுக்கத்தக்க செயல்பாடு ஆகியவை குறித்து திமுக அரசுக்கு முழுக்க முழுக்க ஏதும் புரிதல் இல்லையென்றோ, மக்களுடைய மத நம்பிக்கை தொடர்பாக இதைவிட அலட்சியமாக ஓர் அரசால் நடந்துகொள்ள முடியாது என்றோதான் புரிந்துகொள்ள வேண்டும்.

தி.க. எந்த மாதிரி ஊர்வலம் நடத்தப் போகிறது என்று அரசுக்குத் தெரியவே தெரியாது என்று கூறிவிட முடியாது. மாநாட்டுக்குச் சில நாள்களுக்கு முன்னால் சேலம் நகர மக்களால் அரசு அதிகாரிகளிடம் தரப்பட்ட மனுவில், இந்துமதக் கடவுளர்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெறப் போவதை சுட்டிக்காட்டி ஊர்வலத்துக்கு அனுமதி தர வேண்டாம் என்றே மன்றாடியிருக்கிறார்கள். மதத்தை இழிவுபடுத்தும் அந்த ஊர்வலத்தைத் தடுக்காததுடன், ஊர்வலத்தில் வந்தவர்கள் கத்திகள், லத்திகள், பட்டாக்கத்திகள், வாள்கள் போன்ற ஆயுதங்களை எடுத்துவரவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ‘தெய்வங்களை அவமதிப்பு செய்கிறீர்களே..’ என்று ஆட்சேபித்த மக்களைப் பார்த்து இந்த ஆயுதங்களைக் காட்டி மிரட்டியபோதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்த்திருக்கிறார்கள்.

மக்களிடம் கடும் கண்டனத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவங்கள் நடந்த பிறகு, மாநாட்டையும் ஊர்வலத்தையும் ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்த பிறகு முதலமைச்சர் கூறுகிறார், “சேலத்தில் நடந்தது என்ன என்று பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன், வருத்தப்படுகிறேன்” என்று. ‘‘காவல்துறை அதிகாரிகளிடமிருந்து அறிக்கை கேட்டிருக்கிறேன்’’ என்கிறார். ‘‘எந்த மத அமைப்புகள் மீதும் அரசியல் கட்சிகள் மீதும் எந்தவிதத் தடையையும் விதிக்க அரசு விரும்பவில்லை, அப்படி விதித்தால் அது அவர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்தும் என்பதால் அந்த முடிவு’’ என்கிறார்!

ஆனால் ஊர்வலத்தில் எடுத்த புகைப்படங்கள், ‘துக்ளக்’ பத்திரிகையில் இடம்பெறுகிறது என்றதும் அரசு மிகுந்த சுறுசுறுப்போடு செயல்பட்டிருக்கிறது. காவல்துறையினர் அந்தப் பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருக்கும் இதழ்களைப் பறிமுதல் செய்கின்றனர், பத்திரிகை ஆசிரியர் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் 292-ஏ பிரிவின் கீழ் (ஆபாசமான, இழிவான புகைப்படங்கள் விற்றல் உள்ளிட்ட) வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஊர்வலம் தொடர்பாக சேலத்தில் மூன்று அல்லது நான்கு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று முதலமைச்சர் பிப்ரவரி 14-ல் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடந்த ஊர்வலம் தொடர்பான புகைப்படங்களைப் பிரசுரித்ததற்காக சமூக அக்கறையுடன் நடவடிக்கை எடுத்ததாகக் கூறும் அரசு, சேலத்தில் ஊர்வலம் நடந்தபோதே இப்படிச் செயல்பட்டிருந்தால் அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர்கள், பொது அமைப்புகள், மதக் குழுக்களிடையே அரசின் நோக்கம் குறித்து சந்தேகம் தோன்றியிருக்காது. ‘1967-ல் இதேபோன்ற சம்பவம் நடந்தபோது காங்கிரஸ் அரசு மவுனம் சாதித்தது’ என்ற முதலமைச்சரின் வாதம், இப்போதைய அரசின் தோல்வியை நியாயமாக்கிவிடாது. இந்த விவகாரத்தில் கருணாநிதியின் பதில்கள் நல்ல தலைமை நிர்வாகிக்குப் பொருந்துவன அல்ல. அடுத்து வரும் பொதுத் தேர்தலில் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக உண்மையைத் திரித்துப் பேசுகிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது. இரண்டு அல்லது மூன்று அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலால், மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்செயல்களுக்கு காவல்துறையின் கீழ்நிலையில் உள்ள சில அதிகாரிகள்தான் காரணம் என்று மக்கள் நம்பிவிட மாட்டார்கள்.

(17.02.1971-ல் ‘தி இந்து' நாளிதழ் தலையங்கத்தின் சுருக்கம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x