Published : 13 Dec 2019 07:51 AM
Last Updated : 13 Dec 2019 07:51 AM

தொகுதி மறுசீரமைப்பு:  பேசப்படாத இன்னொரு அநீதி!

ரவிக்குமார்

சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் எஸ்சி/எஸ்டி மக்களுக்கான இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வகைசெய்யும் அரசமைப்புச் சட்ட (126-வது) திருத்த மசோதா, தற்போது நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்பது அவர்களது மக்கள்தொகையோடு இணைந்த ஒன்றாகும். மக்கள்தொகையில் அவர்கள் எவ்வளவு விழுக்காடு இருக்கிறார்களோ அவ்வளவு விழுக்காடு அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் கூறு 330 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன் பிரிவு 3 ஆகியவை வகுத்துள்ளன.

மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கியது தொடர்பான வழக்கில் எஸ்சி/எஸ்டி பிரிவினரின் இடஒதுக்கீட்டை இனி உயர்த்தவே முடியாமல் செய்யும் விதமாக 50% உச்சவரம்பை உச்ச நீதிமன்றம் விதித்தது. அது கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கே பொருந்தும். அரசியல் பிரதிநிதித்துவத்துக்குப் பொருந்தாது.

தொகுதி மறுசீரமைப்பு

எஸ்சி/எஸ்டி பிரிவினரின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான தனித் தொகுதிகளின் எண்ணிக்கை தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செய்யப்படுவதால், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதே விதியாக இருந்தது. அந்த விதியைச் சுதந்திரம் அடைந்து முதல் மூன்று முறை சரியாகப் பின்பற்றினார்கள். அதன் பிறகு, தொகுதி மறுவரையறை செய்வதை 30 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட்டுவிட்டார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தொகுதி மறுசீரமைப்பு இதுவரை 1952, 1963, 1973, 2002 ஆகிய நான்கு முறை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.

வாக்காளர்களின் எண்ணிக்கையைச் சமச்சீராக வைப்பதற்கும், தொகுதிகளின் எல்லைகளை வரையறுப்பதற்கும், தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவுசெய்வதற்கும், தனித் தொகுதிகளை நிர்ணயிப்பதற்கும் இந்த மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் தனித் தொகுதிகளைச் சுழற்சி முறையில் தீர்மானிப்பதற்கும் இது தேவைப்படுகிறது. தொகுதிகளின் எல்லைகள் தீர்மானிக்கப்பட்டு, வாக்காளர்களின் எண்ணிக்கையும் முடிவுசெய்யப்பட்ட பின்னர், எந்தெந்த தொகுதிகளில் எஸ்சி/எஸ்டி வாக்காளர்கள் அதிகம் இருக்கிறார்களோ அவை தனித் தொகுதிகள் என அறிவிக்கப்படும். ஒரே தொகுதி மீண்டும் மீண்டும் தனித் தொகுதியாக இருந்தால், அங்கு இருக்கும் பிற சமூகத்தினர் போட்டியிட வாய்ப்பில்லாமல் போய்விடும் என்பதால், மேலிருந்து கீழ் என்ற அணுகுமுறையில் தனித் தொகுதிகள் முடிவுசெய்யப்படுகின்றன. அதனால், எஸ்சி/எஸ்டி வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள் முதலில் தனித் தொகுதிகளாக இருந்தால் அவை மாற்றப்பட்டு, அதற்கு அடுத்து அதிகம் உள்ள தொகுதிகள் தனித் தொகுதிகளாக அறிவிக்கப்படும்.

தொகுதி மறுசீரமைப்புச் சட்டத்தில் 2002-ம் ஆண்டு திருத்தம் கொண்டுவந்த மத்திய அரசு, 2026 வரை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட மாட்டாது எனவும், அதற்கு அடுத்ததாக வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அடுத்த மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துவிட்டது. அதாவது, 2031 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்னர்தான் இனி தொகுதி மறுவரையறை செய்யப்படும். அது 2041-ம் ஆண்டில்தான் நடைமுறைக்கு வரும்.

20 வருடங்கள் காத்திருக்க வேண்டுமா?

1971-ம் ஆண்டில் 14.6% ஆக இருந்த எஸ்சி மக்களின் மக்கள்தொகை 2001-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது 16.2% ஆக உயர்ந்துவிட்டது. அதுபோலவே 6.9% ஆக இருந்த எஸ்டி மக்கள்தொகை 2001-ல் 8.2% ஆகிவிட்டது. அதற்கேற்பவே 2002-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின்போது, நாடாளுமன்றத்தில் எஸ்சி மக்களுக்கான தனித் தொகுதிகளின் எண்ணிக்கை 79-லிருந்து 84 ஆகவும், எஸ்டி மக்களுக்கான தனித் தொகுதிகளின் எண்ணிக்கை 41-லிருந்து 47 ஆகவும் உயர்த்தப்பட்டன. 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் எஸ்சி மக்கள்தொகை 16.63%, எஸ்டி மக்கள்தொகை 8.6% ஆகும். அதன் அடிப்படையில், தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டிருந்தால் நாடாளுமன்றத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு மேலும் 5 இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருக்கும். நாடு முழுவதும் சட்டமன்றங்களிலுள்ள 4,120 இடங்களில், மொத்தத்தில் சுமார் 41 இடங்கள் அதிகரித்திருக்கும். சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிப்போடப்பட்ட ஒரே காரணத்தால், இந்த இடங்களைப் பெறுவதற்கு அவர்கள் இன்னும் 20 வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இடங்களை வழங்க வேண்டும் என திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அப்படி அவர்கள் கேட்பதற்குக் காரணம், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் இருப்பதால்தான். அதைப் போலவே சட்டமன்ற, நாடாளுமன்றங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால்தான் எஸ்சி/எஸ்டி மக்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் உரிய காலத்தில் முறையாகக் கிடைக்கும். இதை தலித் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல; இப்போது பஞ்சாயத்து அமைப்புகளில் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போராடும் அனைத்து அரசியல் கட்சிகளுமே வலியுறுத்த வேண்டிய தருணம் இது.

- ரவிக்குமார், எழுத்தாளர், மக்களவை உறுப்பினர்.

தொடர்புக்கு: writerravikumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x