Published : 13 Jul 2015 09:03 AM
Last Updated : 13 Jul 2015 09:03 AM

நவாஸ் - மோடி சந்திப்பின் நன்மைகள்

ரஷ்யாவின் உஃபா நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைச் சந்தித்துப் பேசியது கவனிக்கத் தக்கது. இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் தூதரக விவகாரங்கள் குழப்பமடைந்திருக்கும் நிலையில், இந்தச் சந்திப்பு பல தடைகளைத் தகர்க்கும் என நம்பலாம்.

அத்துடன், 2016-ல் இஸ்லாமாபாதில் நடக்கவிருக்கும் சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள நவாஸிடம் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். சார்க் மாநாட்டுக்கு மோடி வருகை தந்தால், அது நிச்சயம் ஆக்கபூர்வமான சமிக்ஞையாக இருக்கும். முன்னாள் இந்தியப் பிரதமரான மன்மோகன் சிங் தனது 10 ஆண்டு ஆட்சியில் ஒரு முறைகூட சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் பாகிஸ்தானுக்குச் செல்ல அவர் மிகவும் விரும்பினார்.

இம்முறை மோடி சார்க் உச்சி மாநாட்டில் நிச்சயம் கலந்துகொள்வார் என நம்பலாம். ஏனெனில், கடந்த காலங்களில் பாகிஸ்தானை விலக்கி வைக்க முயற்சித்திருந்தாலும் பிற சார்க் நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கைகளில் எப்போதுமே நேசக் கரம் நீட்டிவருகிறார் மோடி. ஒருவேளை, சார்க் மாநாட்டில் மோடி கலந்துகொள்ள மறுத்தால் அது அந்த அமைப்புக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். இப்படி கைக்கும் வாய்க்கும் இடையில் நழுவி விழும் நிலையில்தான் இந்திய-பாகிஸ்தான் உறவு ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

மும்பை தாக்குதல் வழக்கை விரைவாக நடத்தி முடித்து, அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை இருதரப்பும் பரிமாறிக்கொள்ள வேண்டும். எல்லை தாக்குதல்கள் தொடர்பாக இருதரப்பு எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இரு நாட்டுச் சிறைகளில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் 15 நாட்களுக்குள் விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்தச் சந்திப்பில் அறிவிக்கப்பட்டன.

இவை நிறைவேற்றப்பட்டால், அடுத்தகட்ட வளர்ச்சிகளை எதிர்பார்க்கலாம். தன் மீதான இந்தியாவின் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவரும் சூழலில் பாகிஸ்தான் சற்றே எச்சரிக்கை அடைந்திருக்கிறது. மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ராவல்பிண்டியில் நடந்துவரும் வழக்கின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்துவது; அந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களின் குரல் மாதிரியை வழங்குவது உள்ளிட்ட ஆக்கபூர்வமான முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதற்கு முன்னர், இவ்விஷயத்தில் பாகிஸ்தான் மேலும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தியாவும், இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாததால் இவ்வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்று பாகிஸ்தானும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டிருந்தன.

இறுதியாக, பாகிஸ்தான் ரேஞ்சர்ஸின் டைரக்டர் ஜெனரல் மற்றும் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆகியவை இருநாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு ஆகியவற்றில் பதற்றத்தைக் குறைக்க உதவும். நீண்டகாலமாக, சர்வதேச எல்லையில் இருதரப்புக்கும் இடையே நடந்துவரும் பதிலடித் தாக்குதல்களை நிறுத்த நிதானமான அணுகுமுறை தேவை.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியா-பாகிஸ்தான் உறவில் இருதரப்பிலும் உள்ள அரசியல் தலைமை எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறதோ அந்த அளவுக்குத்தான் முன்னேற்றம் ஏற்படும். பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு இவ்விஷயத்தில் அக்கறை இருக்கிறது. எனினும், சம்பந்தப்பட்ட துறைகளின் - குறிப்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஒத்துழைப்பைப் பெறுவதில் அவர் தனது திறனைக் காட்டவில்லை.

உலக நாடுகளின் பார்வைக்காகப் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் காட்டிக்கொண்டு மட்டும் இல்லாமல், உண்மையாகவே பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவும் பாகிஸ்தானும் முன்வர வேண்டும்.

பாகிஸ்தான் நாளிதழ்

- தமிழில் சுருக்கமாக: ம. சுசித்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x