Published : 08 Jun 2015 09:02 AM
Last Updated : 08 Jun 2015 09:02 AM

ஏற்றத்தாழ்வு மிக்க ஏட்டுக் கல்வி

லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. பாகிஸ்தானில் தொடர்ந்து இருக்கும் ஏற்றத்தாழ்வு மற்றும் ஏழ்மையைப் பற்றிய அறிக்கை அது. சராசரி முதல் அதிக அளவிலான பொருளாதார வளர்ச்சி இருந்தபோதும், பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், ஏற்றத்தாழ்வு மிக்க சமூகமாகவே பாகிஸ்தான் இருப்பதுதான் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டும் முக்கியமான விஷயம்.

நகர்ப்புறப் பகுதிகளில்தான் ஏற்றத்தாழ்வு அதிகம் என்பதும் பல தலைமுறைகளாக இது தொடர்கிறது என்பதும் ஆய்வில் தெரியவரும் மற்றொரு முக்கிய விஷயம். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளில் 40% பேர் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதே நிலையில்தான் இருப்பார்கள்; வெறும் 9% பேர்தான் கொஞ்சம் முன்னேறிய நிலைக்கு வருவார்கள் என்கிறது அந்த அறிக்கை.

குளிர்சாதனம், குளிர்பதனப் பெட்டி போன்றவை அதிகமாக விற்பனையாவதை வைத்துப் பொருளாதார வளர்ச்சி சமமாகப் பரவியிருப்பதாக நம்புபவர்களுக்கு இது ஆச்சரியமளிக்கலாம்.

விவசாய நிலங்களைப் பகிர்ந்தளிப்பது, நகர்ப்புற வீடுகள் கட்டுமானத்துக்காகக் குறைந்த வட்டி விகிதக் கடன்களை அளிப்பது, தரமான கல்வியை வழங்குவது என்று மூன்று முக்கியத் திட்டங்கள் அரசிடம் இருந்தன. ஆனால், பல காரணங்களுக்காக முதல் இரண்டு திட்டங்கள் இன்னும் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மூன்றாவது திட்டமும் 80-களில்தான் ஓரளவு பலன் தந்தது.

பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கான உயர்தரப் பள்ளிகள் அதிகம் இருந்தாலும், அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான அழுத்தம் தரப்படுவதில்லை. பாகிஸ்தானைப் பொறுத்தவரை உயர்தரப் பள்ளிகளின் பங்களிப்பை வைத்தே கல்வி மதிப்பிடப்படுகிறது. உயர்தரப் பள்ளிகள் தற்போது அதிக அளவில் இருப்பதைப் பார்க்கும்போது, வசதியான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் அடிப்படைக் கல்விக்காக, அரசுப் பள்ளிகளுக்கோ அல்லது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கோ செல்வதில்லை என்பது தெரியவரும். முன்பெல்லாம் நிலைமை இப்படி இல்லை. உயர்தரக் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அப்போது மிகவும் குறைவு. நகர்ப்புற நடுத்தரக் குடும்பங்களை, குறிப்பாக அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளைத் தவிர, அப்போது வேறு வழியில்லை.

இன்று உயர்தரப் பள்ளிகள் அதிகரித்திருக்கும் நிலையில், அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டியதற்கான அழுத்தத்தைத் தரக்கூடிய சமூகச் சூழல் இல்லை. அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள் போன்றோரின் குழந்தைகளின் கல்வி, அரசுக் கல்வி நிறுவனங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் சூழலில், அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவதுகுறித்து யாருக்கு அக்கறை இருக்கும்?

இந்தக் கேள்விக்கு எல்லோரிடமும் தயாராக ஒரு பதில் இருக்கும். போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் தரமான கல்வியை வழங்குவது தனியார் பள்ளிகள்தான்; இவ்விஷயத்தில் அரசுப் பள்ளிகள் தோல்வியடைந்துவிட்டதால் தனியார் பள்ளிகள் இதைக் கையிலெடுத்திருக்கின்றன என்பதே அந்தப் பதில். இந்தப் பிரச்சினையை ஒரு நேர்க்கோடாக அணுக முடியாது. இது மிகவும் சிக்கலானது. அரசுப் பள்ளிகள் கோலோச்சிய காலகட்டத்திலேயே தனியார் பள்ளிகளின் வியாபாரம் தொடங்கப்பட்டதற்கு, அரசியலும் லாப நோக்கமும்தான் முக்கியக் காரணங்கள்.

இதன் இன்னொரு பாதிப்பு என்னவென்றால், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்குத்தான் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் (அரசு பல்கலைக்கழகங்களும்கூட) அனுமதியில் முக்கியத்துவம் தருகின்றன. இதேதான் வேலைவாய்ப்புச் சந்தையிலும் எதிரொலிக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் தனியார் பள்ளிகளின் பின்னணி உள்ள மாணவர்களுக்குத்தான் வாய்ப்பளிக்கின்றன. இதனால், தனியார் பள்ளிகளில் படிக்க வாய்ப்பு இல்லாத ஏழைக் குழந்தைகள், தங்கள் முன்னேற்றத்துக்கான அனைத்து வாய்ப்புகளையும் இழக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினை இத்துடன் முடிந்துவிடவில்லை. தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஒன்றுக்குத் தலா ரூ. 10,000 வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்தப் பள்ளிகளின் கல்வித்தரம் கேள்விக்கு அப்பாற்பட்டதல்ல. ஜி.சி.எஸ்.இ. மற்றும் ஜி.சி.இ.- போன்ற காலாவதியான கல்வி முறைகள் மாணவர்களுக்கு மிகக் குறைந்த அளவில்தான் புதிய விஷயங்களைத் தருகின்றன. தேர்வுகளில் வெற்றிபெறுவதில்தான் இப்பள்ளிகள் மாணவர்களுக்குப் பயிற்சி தருகின்றன; முழுமையான கல்வியைப் போதிப்பதில்லை. என்னதான் ஆங்கில வழிக் கல்வி என்று சொல்லிக்கொண்டாலும், 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள், (சில விதிவிலக்குகளைத் தவிர்த்து) ஆங்கிலத்தை வாசிக்கவும், பேசவும் எழுதவும் திணறுவதைப் பார்க்க முடியும்.

வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வதற்கான வழிகளில் ஒன்றாகத் தரமான கல்வியும் பார்க்கப்படுகிறது. பிரிட்டன் போன்ற நாடுகளில் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணம் போன்ற விஷயங்கள் முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. நமது அண்டை நாடான இந்தியாவில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் அளவுக்குத் தரமான கல்வி அங்கு வழங்கப்படுகிறது. ஏற்றத்தாழ்வுப் பிரச்சினை மோசமான நிலையை அடைவதற்கு முன்னர், இதுபோன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும்.

தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்

டான் - பாகிஸ்தான் நாளிதழ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x