Last Updated : 01 Apr, 2015 10:39 AM

 

Published : 01 Apr 2015 10:39 AM
Last Updated : 01 Apr 2015 10:39 AM

மண்ணைப் பொன்னாக்கிய பண்ணையாட்கள்

அப்போதெல்லாம் ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டால் கீழத்தஞ்சை அறிவது இரண்டே சாதிகள்தான். சடங்காகக் காலையில் குளிக்கும் ஆண்டைகள். சேற்றிலிருந்து கரையேறி, உடம்பில் படிந்திருக்கும் சேடையைக் கழுவிக்கொள்ள அந்தியில் குளிக்கும் பண்ணையாட்கள். வரப்பிலேயே நிற்பவர்களும், வயலில் இறங்குபவர்களும் என்றுகூடச் சொல்லலாம். வேலையின் மும்முரம் என்ற ஒரே கோடுதான் சமுதாயத்தை இரண்டாகக் காட்டும். தண்ணீர் காலத்து வயல் வேலையில் இடுப்பு வேட்டி, ஆட்களுக்கு எப்போதும் முண்டாசாக இருக்கும். அரையை மறைப்பது கோவணம். ஈரத் துணியைக் காயவைக்கும் வேலை இல்லை. ஆட்கள் வீட்டுப் பெண்கள் நடவாட்கள். விளக்குவைக்கும் நேரம் வயலிலிருந்து கரையேறுவார்கள். வரும் வழியில் தண்ணீரில் விழுந்து எழுந்த ஈரத்தோடு வீடு திரும்புவார்கள். உடம்புச் சூட்டிலும் உலைவைத்து எரிக்கும் நெருப்புச் சூட்டிலும் ஈரப் புடவை காய்ந்துவிடும். எத்தனையோ வேலைகளைச் செய்தாலும் நடவு அவர்களின் அடையாளமாகி, நடவாட்களானார்கள்.

சொற்களின் போக்கும்வரத்தும்

பொன்னியின் புனலோடு வரும் வண்டலைப் பொன்னாகவே மாற்றிக் காட்டிய இவர்கள், நில உடைமை யாளரை ஆண்டை என்பார்கள். பண்ணையில் நிரந்தரமாக வேலை செய்தவர்கள் பண்ணையாட்கள். கிடைத்த இடத்தில் வேலை செய்து சஞ்சாயக் கூலி பெறுவதைவிட, பண்ணை யாட்களாக இருப்பதை விரும்பிய காலமும் இருந்தது.

ஆண்டையை மற்றவர்கள் மிராசுதார் என்பார்கள். அவருக்குச் சில கிராமங்களே சொந்தமாக இருக்கலாம். அவர் குடும்பம் இருக்கும் கிராமம் உள்கிராமம். கிராமத்தில் இருக்கும் மற்றவர்கள் குடிபடைகள். பிற்காலத்தில், தங்கள் வசமிருந்த நிலத்துக்குப் பட்டா பதிவு செய்து மிராசுதாரர்கள் பட்டாதாரர்களானார்கள். புவி அமைப்பில், மண்ணின் தரத்தில், பயிர் வகையில், கீழத்தஞ்சையின் காவிரிப் பகுதியும் வெண்ணாறு பகுதியும் வெவ்வேறானவை. நில உடைமையின் பெருக்கமும் சுருக்கமும் இதை ஒட்டியே. வெண்ணாறு பகுதியில் மன்னார்குடிக்குக் கிழக்கே ஒரு மிராசுதாரருக்கு உள்கிராமம் மட்டும் மூவாயிரம் ஏக்கர் என்பார்கள். ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பாசனமுள்ள கோரையாறு எட்டே குடும்பத்துக்கு இருந்ததாகச் சொல்வ துண்டு. மூன்று ஏக்கரானாலும், மூவாயிரம் ஏக்கரானாலும் அவர் மிராசுதாரர்தான். மன்னனாகவே இருந்தாலும் தஞ்சையை ஆண்டவர்களை ராஜா மிராசுதார் என்று சொல்வதுண்டு.

அந்தக் கால மொழியில் சொல்வதானால், கீழத்தஞ்சை யின் வெண்ணாறு பகுதியில் முக்காலே மூணு வீசம் (பதினாறில் பதினைந்து) ஆட்கள் தாழ்த்தப்பட்டவர்கள். இந்த நிலைமையோடு பண்ணையாட்களாக இருந்ததும் சேர்ந்துகொண்டு அவர்களின் இன்னல் நமது அன்றைய சமுதாயத்தில் உச்சத்தை எட்டியது. ‘ஆள்’, ‘ஆண்டை’ என்ற சொற்கள் ஏற்றத்தாழ்வு சமுதாயத்தைக் கட்டமைத்தவை. இவற்றின் இடத்தை ‘விவசாயத் தொழிலாளி’, ‘விவசாயி’ என்பவை வென்று கைப்பற்றின. விளைவாக, ஏற்றத்தாழ்வின் அடையாளமான ‘ஆள்-ஆண்டை’ என்பது மறைந்து, ‘வேலை-சம்பளம்’ என்ற இதர சிக்கல்களற்ற புதிய சமன்பாடு வந்தது. வரலாற்றின் போக்கே சொற்களின் போக்கும் வரத்தும்தானே!

ஆனி, ஆடி மாதங்களில் ஆட்களுக்கு நின்று பேச நேரமிருக்காது. புது மாடுகளை வாங்கிக் கயிறு மாற்றி, ஜோடி ஜோடியாக ஓட்டிவருவார்கள். மண்வெட்டிக்குப் புதுக்கழி வாங்கிப் பூண் போடுவார்கள். புது மண்வெட்டிக்குக் கொல்லுப் பட்டறையில் வாய் துவைக்க வேண்டும். பழைய மண்வெட்டிக்கு வாய் தட்ட வேண்டும். ஏர்க்காலுக்குக் கழி மாற்ற வேண்டும். வயலுக்கு வெங்கார் பாய்ச்சி, உழுது சேறாக்க வேண்டும். கையில் லாந்தரோடு, கண்விழித்து தண்ணீர் கொண்டுவர வேண்டும். சேறான வயலைக் காயவிடக் கூடாது. விதை முளைக்காமல் பழுதாகக் கூடாது. விதைத்த விதைக்கு மழைபெய்து பகையாகக் கூடாது. கணு ஏறுவதற்குள் நட்டு நாற்றைப் பயிராக்க வேண்டும். நிலம் நடாமல் கிடந்தால், நிலமடந்தையைத் துணியில்லாமல் போட்டுவிட்டதைப் போல் இன்னும் “மூடவில்லையே” என்று கவலைப்படுவார்கள். கொத்துவதற்கு, உழவுக்கு, நாற்றுப் பறிக்கு என்று சரியான அளவில் தண்ணீர் வைப்பார்கள். இவையெல்லாம் ‘நீராணிக்கம்’ என்ற உபரி வேலை.

காலத்தைத் துரத்தித் தோற்கடித்தார்கள்

சாண் அகலத்துக்கும் குறைவான மண்வெட்டியின் இலையைக் கொண்டே காவிரியின் வெளி முழுதும் ரசமட்டம் பார்த்ததுபோல் தண்ணீர் நிற்கும்படி நிரவியிருக்கிறார்கள் இந்தப் பண்ணையாட்கள். மூன்று விரல் அகலமுள்ள கொழுமுனையால் கீறிப் பழைய நஞ்சை முழுதும் சேறாக்கியிருக்கிறார்கள். ஏருக்கு மசியாத இடங்களில் ஆட்களைச் சேர்த்துக்கொண்டு பத்தி பிடித்துக் கொத்த வேண்டும். கொத்தும்போது, மண்வெட்டிகள் ஒரே நேரத்தில் மேலே சென்று, சரேலென்று தண்ணீரைக் கிழித்து ஒரு தாளகதியில் சேற்றில் இறங்கும். உழவு மாடுகள் சேற்றில் அழுந்திய அடியைப் பெயர்த்துவைப்பதும் ஒரு தாளம். தண்ணீரில் உட்கார்ந்து பட்டம்பட்டமாக நாற்றைப் பறித்துக் கொண்டே ஆட்கள் முந்துவார்கள். பறிக்கப் பறிக்க ஒரு சரசரப்பு. தூர் அலசும்போது நீரின் ஓசை. பறித்த நாற்றை முடியாக முடிந்து புறத்தே வீசினால் இன்னொரு ஓசை. தண்ணீர் பரந்த வயல் வெளியில் இதைக் காதால் கேட்டவர்களுக்கு இதுதான் சங்கீதம். தங்களுக்கென்று இலக்கே வைத்துக்கொள்ள இயலாத காலத்தில், இப்படித் துரத்தித் துரத்திக் காலத்தைத் தோற்கடித்தார்களே!

நீராகாரத்தைக் குடித்துவிட்டு வயலில் இறங்கினால், பொழுது சாய்ந்துதான் கரையேறலாம். கருவை மரத்து நிழல்தான் ஒதுங்கும் நிழல். உட்கார்ந்து உண்பது வரப்பு. ஒருவேளை, இருவேளை வெற்றிலை போடலாம். அந்திக் கடையில் வெற்றிலைப் பாக்கு, சுருட்டு, கத்தைக்காம்பு வாங்கிக்கொள்வார்கள். பொட்டலம் புகையிலை எட்டாத சொகுசு. கூலி நெல்லைக் கடையில் விற்று, நடவாட்கள் அங்கேயே புளி, மிளகாய், பூண்டு, சீரகம் வாங்குவார்கள். நண்டுச்சாறுதான் குழம்பு.

சட்டத்தால் மறைந்தது

பண்ணையாட்களுக்கு நெல்லாகக் கூலி கிடைக்கும். சஞ்சாய ஆட்கள்கூட நெல்லாகக் கூலி கொடுக்கும் இடத்தில்தான் வேலை கேட்பார்கள். சஞ்சாய வேலைக்குப் பணம்தான் கூலி. முக்கால் மரக்கால், பின்னர் ஒரு மரக்கால் என்று நாள் கூலி இருந்தது. கோடைக்காலத்தில் கூலி கம்மி. பணமாகக் கொடுத்தால் இரண்டு ரூபாய். அரையாளுக்கு ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய் கொடுத்தார்கள். நடவாளுக்குக் கூலி முக்கால் மரக்காலாக இருந்தது. சஞ்சாயக் கூலி கொஞ்சம் கூடுதலான வீதம். ஆனால், பண்ணை வேலை இருக்கும்போது சஞ்சாய வேலைக்குப் பண்ணையாட்கள் போகக் கூடாது. அறுவடையின்போது கலத்துக்கு ஒன்றரை மரக்காலாக இருந்த கூலி, பின்னர் இரண்டு மரக்காலானது. இதனோடு, பண்ணையின் கண்டுமுதலில் கலத்துக்கு அரை மரக்கால் வீதம் பண்ணையாட்களுக்குச் சிலர் கொடுத்துவந்தார்கள்.

இவையெல்லாம் தன்னால் நடந்தவையல்ல. 1952-ல் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் வந்தது. அதற்கு முன்பு மாயவரம் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. அதற்கு முன்பிருந்தே கூலிப் பிரச்சினையில் அரசாங்கம் அக்கறை காட்டி, சில ஒப்பந்தங்கள் உருவாகியிருந்தன. பண்ணையாட்களுக்கு வேலை கொடுக்காமல் நிறுத்திவிட்டால் பண்ணை நஷ்டஈடு தர வேண்டும் என்பது 1952-ம் வருடத்துச் சட்டம். இதன் பிறகு, பண்ணையாள் ஏற்பாடு சட்டென்று மறைந்துபோனது.

சேற்று வேலைக்காகவே பிறந்தவர்களாக இவர்களைச் சிலாகிப்பார்கள். மற்றவர்கள் கொத்தினால் மண்ணைப் புண்படுத்துவதுபோல் இருக்கும். இவர்கள் மண்வெட்டி புழங்கினால் மண்ணைக் கொஞ்சுவதாகத்தான் தெரியும். ஒரு கோட்டுச் சேற்றை எடுத்து மடைவாயில் வைத்தால், மடை கனக்கச்சிதமாக அடைபட்டிருக்கும். வயதானாலும் வீட்டில் இருக்காமல் நாற்றுப்பறிக்கும், அறுவடைக்கும் சென்றுவிடுவார்கள். ‘கடப்படாதவன்’ என்று சொல்லிவிடக் கூடாதே!

குனிந்த முதுகு கொப்பளித்துவிடும்

நடவாட்கள் ஆண்டை வீட்டு மாட்டுக் கொட்டிலைப் பெருக்கிச் சாணி அள்ள வேண்டும். பண்ணைக்கு நடவு நட வேண்டும். நடுவது இடுப்பு ஒடியும் வேலை. நாள் முழுவதும் தண்ணீரிலும் சேற்றிலும் நிற்க வேண்டும். குனிந்த முதுகு சுட்டெரிக்கும் வெயிலில் கொப்பளித்துவிடும். பிறகு களையெடுக்க வேண்டும். வளர்ந்த பயிராக இருந்தால் குனியும்போது கண்ணைக் குத்தும்.

ஆளின் வேலையை முழுதாகச் செய்ய இயலாத சிறுவர்களை அரையாளாக அமர்த்துவார்கள். பத்துப் பன்னிரெண்டு கலம் ஆண்டுச் சம்பளம் பேசி அரையாட்களை ஆண்டை வீட்டிலேயே பெற்றோர்கள் விட்டுவிடுவார்கள். அங்கேயே தங்கிச் சாப்பிட்டுக்கொள்ளலாம். அவர்கள் மாடுமேய்க்க வேண்டும். மாட்டுக்குத் தீனி வைக்க வேண்டும். போரிலிருந்து வைக்கோல் பிடுங்கிக் கவணையில் வைக்க வேண்டும். ஏர்பிடிக்க வேண்டும். ஆண்டை வீட்டு ஆச்சியிடம் “பசித்து நிற்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று அரையாட்களின் பெற்றோர்கள் சொல்லிச் செல்வார்கள்.

ஆட்களின் வீடுகள் இருந்தது குட்டைக் கரை, வரப்பைப் பிரித்துப் பரப்பிய இடம், வெள்ளக் கால எக்கல், வயல் சேர்த்தபோது வேண்டாத மண்ணை முட்டாடிய இடம். சுற்றிலும் பயிர் வயலும் தண்ணீருமாக இருக்கும். ஆட்டையோ மாட்டையோ அவிழ்த்துவிட முடியாது. இரண்டு வாய்க்கால் இறங்கித் தாண்டினால் தெருவுக்குச் செல்லலாம். உடம்புக்கு வந்தால் மருத்துவம் கிடைக்காது. காலரா இருந்த காலங்களில் இறந்தவர்களை எடுத்துப்போட யாரும் மிஞ்சாமல் தெருவே அழிந்திருக்கிறது. இதை அப்படியே சொல்லாமல், “காளியம்மாள் புகுந்தால் அங்கே தங்கித்தான் போவாள்” என்பார்கள்.

தவித்துத் தண்ணீர் கேட்டால் பிடித்துக் குடிக்கச் சொல்லிக் கையில் தண்ணீர் ஊற்றிப் பார்த்திருக்கிறேன். செம்பில் தண்ணீர் கொடுத்தால் குடித்துவிட்டுக் கழுவிக் கொடுக்க வேண்டும். அப்படியும், கொஞ்சம் தண்ணீர் தெளித்துத்தான் செம்பை வீட்டுக்குள் எடுத்துக்கொள்வார்கள். அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றிக்கொண்டு ஆண்டை வீட்டுக் குழந்தைகளை நடவாளிடம் தருவார்கள். பிறந்த மேனிக்குக்குத் தீட்டு இல்லை; துணிக்குத்தான் தீட்டு என்பது சாதிய சமூகத்தின் நம்பிக்கை!

நாற்றங்காலில் அழுந்த பரம்பு இழுக்க வேண்டுமானால், ஆண்டை வீட்டுப் பிள்ளைகளை சட்டையைக் கழற்றிவிட்டு பாரத்துக்காகப் பலகையில் தூக்கி வைத்துக்கொள்வார்கள். பள்ளிக்கூடத்திலிருந்து வரும் ஆண்டை வீட்டுப் பிள்ளைகள் சட்டையைக் கழற்றித் திண்ணை இறவாணத்தில் செருகிவிட்டுக் குளித்துவிடுவார்கள். மறுநாள் அதைப் போட்டுக்கொண்டு பள்ளிக்குச் செல்லலாம்.

துணிப்பையைத் தவிர்க்கப் புத்தக மூட்டையும் சாக்குப் பையாக இருக்கும். டீக்கடைகளில் கூரையை நீட்டி கங்கில் ஒரு சார்ப்பு போட்டிருக்கும். ஆட்கள் உட்கார்வதற்கு அங்கே நீளமாக மண்ணால் மேடை கட்டியிருக்கும். சுவரில் இருக்கும் சிறிய ஜன்னல் வழியாக டீ வாங்கிக்கொள்ளலாம். கடைக்கு உள்ளே ஆண்டைகள் உட்கார்வதற்கு மட்டும் விசுப்பலகையும் மேசையும் கிடக்கும். குளிக்கும் நேரம் போலவே, புழங்கும் பாண்டங்களும் வர்க்கத்தை அடையாளப் படுத்தியது. கூம்பா என்ற பாத்திரம் எல்லா இடத்திலும் புழங்கினாலும் அதன் கடைசிக் காலத்தில் ஆட்கள் வீட்டில் மட்டுமே காணப்பட்டது. உதடு இல்லாத கட்ரா அல்லது பாத்திரை, ஆட்கள் வைத்துச் சாப்பிடும் பாண்டமாக இருந்தது. பெருத்த பண்டியோடு கொஞ்சம் கொள்ளளவு அதிகமான குடிக்கறிச் சட்டி இருந்ததும் ஆட்களிடமே.

சுருங்கிய பொருள்

“விதி, விசுவாசம் என்பதெல்லாம் ஆண்டைகள் தங்களைக் காத்துக்கொள்ள கற்பித்துவைத்தவை” என்பதைப் புரிய வைப்பதுதான் இங்கு இடதுசாரி இயக்கத்தின் ஆரம்பகால முயற்சியாக அமைந்தது. எவ்வளவுதான் சித்தாந்தம் பேசினாலும், பண்ணையாட்கள் ஆண்டைகளிடம் விசுவாசம் காட்டாமலில்லை. எப்போதாவது கோபம் வந்து விட்டால், பெயரோடு பட்டத்தையும் சேர்த்துக்கொண்டு, “இதெல்லாம் இந்த பிச்சை வாய்க்காரனிடம் பலிக்காது. எனக்கென்ன சுகந்தையா, சுதந்திரமா?” என்று குமுறிக் கொட்டிவிடுவதுண்டு. ‘சுதந்திரம்’ என்பது விடுதலையல்ல, அவர்களே நட்டு அறுவடை செய்துகொள்ளும்படி பண்ணை யாட்களிடம் விட்டுவைக்கும் நிலத்துக்குப் பெயர்தான் சுதந்திரம். தாங்களாகவே உரிமையோடு எடுத்துக்கொள்ளும் சில வரும்படிகளுக்கும் ‘சுதந்திரம்’ என்று பெயர். நாட்டின் விடுதலைப் போராட்டம் சுதந்திரத்தின் பொருளைச் சுருக்கிவிட்டது.

காவிரி தந்த வரத்தை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தஞ்சையையும் வளமாக்கியவர்கள் அந்தப் பண்ணையாட்கள். எனினும், அவர்களுடைய வாழ்க்கை மட்டும் வளமின்றியே கிடந்ததுதான் வேதனை.

- தங்க. ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர், ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர்,

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x