Last Updated : 02 Jan, 2016 10:44 AM

 

Published : 02 Jan 2016 10:44 AM
Last Updated : 02 Jan 2016 10:44 AM

இணையம் யார் கையில்?

ஃபேஸ்புக் நிறுவனம் கொண்டுவரத் துடிக்கும் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம் ஒரு மாயவலை

‘ஃப்ரீ பேஸிக் இன்டர்நெட்’ என பேஸ்புக் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஒரு பிரச்சாரம் இன்று ‘ஃபிரீ பேசிக்ஸ்’ என்ற பெயரில் உலாவுகிறது. ரூ. 100 கோடி செலவில் பேஸ்புக் நிறுவனம் செய்துவரும் இந்தப் பிரச்சாரம் இந்தியாவைப் பிடித்தாட்டுகிறது. இணையமும் நாளிதழ்களும் பண்பலை வானொலிகளும் இதைப் பரப்பிக்கொண்டிருக்கின்றன.

ஆனால் இணையச் சமவாய்ப்புக்காகக் குரல்கொடுப்பவர்கள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். முதலாவதாக, ‘ஃபிரீ’, ‘பேசிக்ஸ்’ ஆகிய இரண்டும் பொதுச் சொற்கள். இந்திய விளம்பரச் சட்டப்படி பொதுச் சொற்களை நுகர்வுப் பொருட்களுக்கு வர்த்தகப் பெயர்களாகச் சூட்டுவது குற்றம். அதிலும் 12 கோடியே 50 லட்சம் இந்தியர்கள் பேஸ்புக்கின் சந்தாதாரர்களாக இருந்தாலும், தான் ஒரு அமெரிக்க நிறுவனம் என்பதால், இந்தியச் சட்டத்துக்கும் கட்டுப்படத் தேவை இல்லை என்று சொல்லிவருகிறது பேஸ்புக்.

எங்கிருந்து தொடங்கியது?

சில மாதங்களுக்கு முன்பு ‘இண்டர்நெட்.ஓஆர்ஜி’ என ஃபேஸ்புக் நிறுவனம் பற்றவைத்த திரியின் வேறு ரூபம் தான் இது. இந்தியாவின் மொபைல் நிறுவனங்களில் ஆறாவது இடத்திலிருக்கும் ரிலயன்ஸும் ஃபேஸ்புக்கும் இணைந்து குறிப்பிட்ட சில இணையதளங்களுக்கு மட்டும் இலவச டேட்டா சேவைகள் வழங்கலாம் எனும் திட்டத்தை முன்வைத்தன. இதைப் பொதுமக்களின் பரிசீலனைக்கும் கொண்டுசென்றது இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய். இந்நிலையில்தான் மக்களைத் தன் வசம் இழுக்க தொடர்ந்து இந்த ஃபிரீ பேசிக்ஸ் பிரச்சாரத்தைச் செய்துவருகிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

இதில் இணையத்தில் சமவாய்ப்பு கோருபவர்கள் முன்வைக்கும் விவாதப் புள்ளிகள் சரியா அல்லது ஃபேஸ்புக்கின் பிரச்சாரம் சரியா என்பதைப் பிரித்தறியத் தொழில்நுட்ப விமர்சகர் எவ்கனி மோரொசவின் சிந்தனை கைகொடுக்கிறது. எந்நேரமும் தொடர்பு கொள்ளும் சேவை, போக்குவரத்தைச் சுலபமாக்கும் தொழில்நுட்பம் போன்ற பல சேவைகளை அளிப்பதாக உறுதியளித்து தேசத்தின் ஒட்டுமொத்த அரசையே கபளீகரம் செய்யத் திட்டம் தீட்டியுள்ளது சிலிக்கான் பள்ளத்தாக்கு என்கிறார் எவ்கனி மோரொசவ்.

இதற்கு இவர்கள் கேட்கும் விலை மக்களின் தனிப்பட்ட தகவல்கள். குடிநீர், போக்குவரத்து சேவை முதல் தகவல்தொடர்புவரை அனைத்தையும் அளிக்க வேண்டியது அரசு என்பதுபோய் சிலிக்கான் பள்ளத்தாகில் இருக்கும் சில முதலாளிகளே அத்தனையும் கொடுத்துவிடுவார்கள் என மக்களை நம்பவைக்கும் முயற்சி இது.

சிலிக்கான் பள்ளத்தாக்கின் மெச்சத் தக்க சேவைகளில் மயங்கி இணையதளத்தைக் கையகப்படுத்தியிருக்கும் பெரும்புள்ளிகளிடம் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை நாமும் ஒப்படைக்கிறோம். மேம்போக்காகப் பார்க்கும்போது இது இலவசமான சேவையாக நமக்குத் தோன்றலாம். ஆனால் உண்மை என்னவென்றால் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள்தான் அவர்களுக்கு மூலதனம்.

21-ம் நூற்றாண்டில் தகவல்கள்தான் எரிபொருள். இந்திய வாடிக்கையாளர்கள் மூலமாக மட்டும் ஆண்டுக்கு ரூ. 6,600 கோடி சம்பாதிக்கிறது பேஸ்புக். ஆனால் இந்திய அரசுக்கு வரி செலுத்துவதில்லை. ஆக, ஃபேஸ்புக்கும் கூகுளும் நமது சுய தகவல்களைத்தான் விளம்பரதாரர்களிடம் விற்கிறார்கள்.

பண்டமான தகவல்

அடுத்து தெரிந்துகொள்ள வேண்டியது, ஃபிரீ பேசிக்ஸ் என்பதற்காக அது இலவச இணைய சேவை என நம்பிவிடக் கூடாது. ஃபேஸ்புக்கையும் அதனோடு கைகோக்கவிருக்கும் சில தனியார் நிறுவனங்களின் இணையதளத்தை மட்டுமே இதன் மூலமாகப் பயன்படுத்த முடியும். இன்றைய நிலவரப்படி 100 கோடி இணையதளங்கள் இருக்கின்றன. மொத்தம் 350 கோடி இணையப் பயனாளர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொண்டால் அதில் 3.5-ல் ஒருவர் புதிய தகவலைப் பரிமாறுகிறார்.

குறுகிய காலத்தில் இணையம் மாபெரும் வெற்றி அடைய முக்கியக் காரணம் இதுதான். யாரையும் எப்போதும் யாராலும் தொடர்புகொள்ள முடியும் என்பது மட்டுமல்ல. எக்கச்சக்கமான தகவல்களை இணையம் பயனாளி களுக்கு வழங்குகிறது என்பது மட்டுமல்ல. பயனாளிகள் எண்ணிலடங்காத் தகவல்களை இணையத்தில் பதிவு செய்வதன் மூலம் அவர்களே மூலதனமாக விளங்குகிறார்கள் என்பதே!

ஆனால், இணைய சேவை வழங்குவோர் (ISP) தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் மட்டும் இணையம் வந்துவிட்டால் இணையம் பொதுவழியாக ஒருபோதும் இருக்காது. குறிப்பிட்ட இணையதளங்களை மட்டுமே குறிப்பிட்டவர்கள் பயன்படுத்தும் நிலை உருவாகும். இதைத்தான் இணையத்தில் சமவாய்ப்பு கேட்டுப் போராடுபவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இத்தனை காலம் கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் இணையத்தில் பொங்கி வழியக் காரணம் அங்கு காவலாளிகள் இல்லை என்பதுதான் என சமவாய்ப்பு கருத்தியலை முன்வைத்த டிம் வூ கூறுகிறார். வானொலி, தொலைக்காட்சி போன்ற வெகுஜன ஊடகங்கள் சாதிக்க முடியாததை இணையம் சாதிப்பது இதனால்தான்.

ஆனால், எல்லாவற்றையும் கபளீகரம் பண்ணவே சமீபகாலமாக கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளை ஃபிரீ பேசிக்ஸ் மூலம் வாரி வழங்குவதாக மார்க் ஸக்கர்பெர்க் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்.

தகவலின் விலை

டேட்டா கட்டணம் அதிகரித்தபோதும் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஆறு கோடி இந்தியர்கள் போன் இணையப் பயனாளர்கள் ஆகியுள்ளனர். அதிலும் ஸ்மார்ட்போன்களின் விலை சரிய, தற்போது ஒட்டுமொத்த இந்தியாவில் 30 கோடி போன் பிராட்பேண்ட் பயனாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு கோடியே 50 லட்சம் பேரை மட்டுமே இந்த ஃபிரீ பேசிக்ஸ் கருத்து சென்றடைந்திருக்கிறது. இதைத் தவிர போன் வைத்திருந்தும் இணைய சேவையை இதுவரை பயன்படுத்தாமல் இருப்பவர்கள் 60 கோடி இந்தியர்கள்.

எல்லாத் தரப்பினரையும் சென்றடைவதுதான் இணைய சேவையாளர்களின் உண்மையான நோக்கம் என்றால், பேஸ்புக்கையும் அதனோடு கூட்டணி சேர்ந்திருக்கும் இணையதளங்கள் மட்டுமே அடிப்படை எனச் சொல்வதற்குக் பதிலாக மக்களுக்கு கட்டுப்படியாகும் செலவில் முழுமையான இணைய சேவை அளிக்க வேண்டும். இந்தியக் தொலைதொடர்பு த் கட்டுப்பாட்டு வாரியம் தலையிட வேண்டிய இடம் இதுதான்.

இணைய சேவை இன்னும் பெருவாரியான இந்தியர்களைச் சென்றடையாததற்கு முக்கியக் காரணம் டேட்டா சேவையின் விலை ஏற்றம்தான். பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இணையத் தொடர்பு பெறுவதற்கான விலை அதிகம்தான். இதுவரை ட்ராய் நிறுவனம் டேட்டா கட்டணத்தை முறைப்படுத்தவில்லை.

ஏழை எளிய மக்களையும் வாடிக்கையாளராக்க அத்தனை நிறுவனங்களும் யத்தனிக்கின்றன. அதற்குத் தேவை இலவசம் அல்லது குறைந்த செலவில் இணைய சேவை ஆகும். அதைக் கொண்டுசேர்ப்பதற்கும் பல வழிகள் இருக்கின்றன. முதலில் டேட்டா இணைப்புடன் இலவச டேட்டா தொகுப்பு கொடுக்கலாம். அடுத்து, இணையப் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் நேரத்தில் குறிப்பிட்ட நேர அட்டவணையை இலவசமாகக் கொடுக்கலாம். அதிலும் போட்ட பணத்தை என்றோ எடுத்துவிட்ட பட்சத்தில் 2ஜி சேவையின் கட்டணத்தைக் கட்டாயமாகக் குறைக்க வேண்டும்.

இத்தனை விஷயங்களை வலியுறுத்தக் காரணம், அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவான இணைய சேவையாக இல்லாமல் ஃப்ரீ பேசிக்ஸ் போன்ற தனியார் அமைப்புகளை மட்டுமே அனுமதிக்கும்போது டிஜிட்டல் உலகிலும் மக்களுக்குள் பிளவு ஏற்படும். ஒரு கட்டத்தில் இத்தகைய தனியார் தளங்களின் பயனாளர்கள் இணையம் என்றால் இது மட்டுமே என நினைத்துக்கொள்வார்கள். பரந்து விரிந்த இணைய சேவையைச் சுருக்கிவிட்டு எல்லோரையும் இணையத்தால் இணைக்கிறோம் என சொல்வது எத்தனை பெரிய பித்தலாட்டம்!

© தி இந்து (ஆங்கிலம்) தமிழில்: ம.சுசித்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x