Published : 28 May 2019 08:23 AM
Last Updated : 28 May 2019 08:23 AM

360: பாஜகவின் வெற்றியால் உத்வேகம் அடையும் ஸ்டெர்லைட்!

பாஜகவின் வெற்றியால் உத்வேகம் அடையும் ஸ்டெர்லைட்!

தூத்துக்குடியில் பாஜகவின் வேட்பாளர் தமிழிசை தோல்வியடைந்திருக்கலாம்; மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் விளைவாக ஸ்டெர்லைட் விவகாரத்தில் புதிய சாத்தியங்கள் திறக்கும் என்ற நம்பிக்கையை அடைந்திருக்கிறது வேதாந்தா குழுமம். மோடி மீண்டும் ஆட்சியமைத்திருப்பதால் உற்சாகம் அடைந்திருக்கும் வேதாந்தா நிறுவனத் தலைவர் அனில் அகர்வால், இந்திய நிறுவனங்களுக்கு மோடி அரசின் மறுவருகை உற்சாகம் அளிக்கும் என்று தெரிவித்திருக்கிறார். “இந்தியா உற்பத்திசெய்வதை உலகம் விரும்பவில்லை; இந்திய நிலங்களைக் குப்பைக்கிடங்காகப் பயன்படுத்துவதையே உலகம் விரும்புகிறது என்பதை மோடி அறிந்திருக்கிறார். இந்த எண்ணங்களைத் தகர்த்து, இந்தியா உற்பத்திசெய்ய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். நாங்களும் எங்கள் வேலையைத் தொடங்குவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” என்று சொல்லியிருக்கிறார் அனில் அகர்வால்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயிர்ப் போராட்டம்

பாஜக கூட்டணியுடனான போராட்டம் தேர்தலோடு முடிந்துவிடவில்லை எதிர்க்கட்சிகளுக்கு; ஆட்சி அதிகாரத்துக்காகப் போராடித் தோற்றவர்கள் அடுத்து  கட்சியையே காப்பாற்றிக்கொள்ளப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு உதாரணம். இன்னும் ஆறு மாதங்களில் மகாராஷ்டிரத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகள் பாஜகவுக்கோ, சிவசேனைக்கோ தாவுவதை எப்படித் தவிர்ப்பது என்றே தெரியாமல் தவிக்கிறது. முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சிங் மோஹித் படேல் பாஜகவில் இணைந்துவிட்ட நிலையில், அடுத்து சட்டமன்ற உறுப்பினர் ஜெய்தத் ஷீர்சாகர் சிவசேனையில் இணைந்துவிட்டார். இன்னும் ஒரு பெருங்கூட்டம் நாள் பார்த்துக் காத்திருக்கிறது. சரத் பவாரும் மகள் சுப்ரியாவும் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

வெளுத்ததெல்லாம் பால் அல்ல!

பால் கலப்படம் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்திருக்கும் உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள பல பால் பண்ணைகள் முழு மூச்சாகக் கலப்படத்தில் இறங்கியிருப்பதைச் சமீபத்திய செய்தி ஒன்று சொல்கிறது. பால் எனும் பெயரில் சலவைத்தூள், சோடா, குளுகோஸ், வெள்ளை நிறமி என்று கண்டதையும்  கலப்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் பால் பொருட்களில் 68.7% நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்கிறது இந்திய விலங்கு நல வாரியம் வெளியிட்ட அறிக்கை. பாலில் தண்ணீர் கலப்பதாக நாம் பால்காரர்களைப் புறக்கணித்தோம்; இப்போது எப்படியாவது உள்ளூர் பால்காரரைப் பிடித்துவிடும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகின்றன பால் பண்ணைகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x