Published : 25 Feb 2019 07:52 AM
Last Updated : 25 Feb 2019 07:52 AM

360: செல்ஃபி ஒரு நோய்- ரகு ராய்!

செல்ஃபி ஒரு நோய்: ரகு ராய்!

செல்ஃபி, இன்ஸ்டாகிராம் என்று ஒளிப்படங்கள் மலிந்துவிட்ட நிலையில், புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்கள் பலர் அவற்றிலிருந்து விலகியே இருக்கிறார்கள்.

ரகு ராய் ஓர் உதாரணம். 1992-ல் சிறந்த புகைப்படக் கலைஞர் விருதை அமெரிக்க அரசிடமிருந்து பெற்றவர் இவர். இந்தியாவின் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இவரது கேமராவின் வழியே காலத்தின் சாட்சியமாகியிருக்கின்றன. 1984-ல் போபால் விஷவாயுக் கசிவின் பாதிப்புகளைப் படமெடுத்து, உலகின் பார்வைக்கு வைத்தவர். இன்றைக்கு செல்ஃபோன் மூலம் எடுக்கப்படும் படங்கள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைக்கும் ரகு ராய், சமீபத்தில் ‘டெலிகிராப்’ இதழுக்கு அளித்த பேட்டியில், ‘செல்ஃபி என்பது ஒரு நோய்’ என்று விமர்சித்திருக்கிறார். இன்றைக்கு நல்ல கேமராவின் விலையைவிட செல்ஃபோன்களின் விலை அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். டிக்டாக் வரைக்கும் வந்துவிட்ட தலைமுறை, அனுபவஸ்தர்களின் வார்த்தைகளைக் கருத்தில்கொள்வது நல்லது!

பாகிஸ்தான் மீதான நடவடிக்கையால் வருவாய் குறையும்

புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானை ‘மிகவும் வேண்டப்பட்ட நாடு’ என்ற அந்தஸ்திலிருந்து விலக்கியிருக்கிறது இந்தியா. பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கை என்றாலும், இதனால் பாகிஸ்தானுக்குப் பெரிய இழப்பு ஏற்படாது. இந்தியாவுக்குத்தான் வரி வசூலில் இழப்பு அதிகமாகும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.  இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு விலை குறைவாக விற்கப்படும் பொருட்களில் பெரும்பகுதி, பாகிஸ்தான் சந்தைகளுக்குத்தான் வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரபூர்வ வர்த்தகம் 2011-12 முதல் 2017-18 வரையிலான காலத்தில் 194 கோடி டாலர்களிலிருந்து 241 கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது. இதில் இந்திய ஏற்றுமதியின் பங்கு 80%. கணக்கில் வராத வர்த்தகம் 2012-13-லேயே 471 கோடி டாலர்களாக இருந்தது. இதில் கணக்கில் வராத ஏற்றுமதி மதிப்பு 400 கோடி டாலர்கள். இறக்குமதி என்று பார்த்தால் 71 கோடி டாலர்கள்தான். இந்தியா தடுத்தாலும் கடத்தல் வழியாகவும் ஆப்கானிஸ்தான், துபாய், சிங்கப்பூர் வழியாகவும் இவை பாகிஸ்தானுக்குச் செல்லப்போகின்றன. அதைவிட முக்கியம், இந்தியாவைத் தவிர வேறு எந்த தெற்காசிய நாட்டிடமிருந்து இவற்றை வாங்கலாம் என்று பாகிஸ்தான் இனி ஆராயும். நிரந்தரமாக நாம் சந்தையை இழக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும், பாகிஸ்தான் பொருட்களுக்கு 200% வரிவிதிப்பால், சட்டவிரோதமாக அதிகளவில் கடத்தல் நடக்கும். இந்திய அரசுக்குக் கிடைத்துவந்த வரி வருவாயும் குறைந்துவிடும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

பழங்குடிகளின் விவசாயத்துக்கு உதவிய சொட்டு நீர்ப்பாசனம்!

ஒடிஷா பழங்குடிகளின் வருமானம் உயர்வதற்கு வழிவகுத்திருக்கிறது சொட்டு நீர்ப்பாசன முறை. கியாஞ்சோர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கிரியாபால் கிராமவாசிகள் சொட்டு நீர்ப்பாசனத்தால் மகசூல் பெருக்கி, விளைச்சலை அருகில் உள்ள வேளாண் விற்பனைக் கிடங்கில் விற்று லாபமடைந்துவருகிறார்கள். மின் இணைப்பு, போக்குவரத்து வசதி இல்லை. வானம்பார்த்த பூமிதான். இந்நிலையில், டாடா அறக்கட்டளையைச் சேர்ந்த தொண்டு நிறுவனம், இக்கிராமங்களுக்கு வந்தது. மின்இணைப்பு இல்லாத கிராமங்களில் சூரியஒளி மின்சாரம் அல்லது டீசல் பம்புசெட்டுகள் மூலம் கிணற்று நீரை மேலே இறைக்கவும், அதைப் பூமியில் பதித்த குழாய்கள் வழியாகச் செடிகளின் வேர்களுக்கு சொட்டுச் சொட்டாக நேராகப் பாய்ச்சவும் கற்றுத்தந்தார்கள். ஒரு ஏக்கரில் சொட்டு நீர்ப்பாசன ஏற்பாடு செய்ய ரூ.1 லட்சம் செலவாகிறது. இதில் பாதியை அறக்கட்டளை ஏற்கிறது. எஞ்சிய பாதியை விவசாயிகள் ஏற்கின்றனர். இப்போது ஆண்டுக்கு மூன்றுமுறை சாகுபடியாகிறது. முன்பெல்லாம் ஆண்டு முழுக்க உழைத்தாலும் ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் ரூ.15,000 முதல் ரூ.40,000 தான் கிடைத்தது. இப்போது ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் மேல் கிடைக்கிறது ஒரு குடும்பத்துக்கு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x