Last Updated : 07 May, 2024 07:05 PM

 

Published : 07 May 2024 07:05 PM
Last Updated : 07 May 2024 07:05 PM

பாஜக Vs இண்டியா கூட்டணி... டெல்லியில் முந்துவது யார்? | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, கடந்த கால தேர்தல்களில் அக்கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் எத்தனை, அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த தேர்தல் வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய கள சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தலைநகர் டெல்லியின் தேர்தல் கள நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.

பரப்பளவில் நாட்டின் மிகப் பெரிய நகராகவும், தனி யூனியன் பிரதேசமாகவும் விளங்கக்கூடியது தலைநகர் டெல்லி. 1,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாநகர், 11 மாவட்டங்கள், 7 மக்களவைத் தொகுதிகள், 70 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாநகரில், ஒரு கோடியே 68 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். டெல்லியில் வசிப்பவர்களில் 97.50% பேர் நகர்ப்புறங்களிலும், 2.50% பேர் கிராமப்புறங்களிலும் வசிக்கிறார்கள். பாலின விகிதாச்சாரத்தை எடுத்துக்கொண்டால், ஆயிரம் ஆண்களுக்கு 868 பெண்கள் இருக்கிறார்கள்.

டெல்லியின் எழுத்தறிவு 86.20%. ஆண்களின் எழுத்தறிவு 90.90% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 80.80% ஆகவும் உள்ளது. டெல்லியில் 80% மக்கள் இந்தி பேசக்கூடியவர்கள். பஞ்சாபி, பெங்காளி, உருது பேசுபவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறார்கள். டெல்லியின் அலுவல் மொழி இந்தி மற்றும் ஆங்கிலம். டெல்லியில் இந்துக்கள் 82% உள்ளனர். இஸ்லாமியர்கள் 11.72%, சீக்கியர்கள் 4.01%, சமணர்கள் 1.12%, கிறிஸ்தவர்கள் 0.94%, பவுத்தர்கள் 0.17% இருக்கிறார்கள்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் டெல்லி பல்வேறு நகராட்சிகளாக இருந்தது. அவற்றின் நிர்வாகத்தை தலைமை ஆணையர் கவனித்துக்கொண்டிருந்தார். பின்னர், 1952 மார்ச் மாதம் டெல்லி ஒருங்கிணைக்கப்பட்டு சட்டப்பேரவை உறுவாக்கப்பட்டது. 48 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தார்கள். டெல்லியின் முதல் முதல்வராக பிராம் பிரகாஷ் பதவி வகித்தார். அவரை அடுத்து, குர்முக் நிஹால் சிங் அப்பொறுப்புக்கு வந்தார்.

எனினும், 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி டெல்லி சட்டப்பேரவையும் அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. மெட்ரோபாலிடன் கவுன்சில்தான் டெல்லியை நிர்வகித்து வந்தது. இதற்கு ஏற்பட்ட எதிர்ப்பை அடுத்து, தேசிய தலைநகர் சட்டம்(National Capital Territory of Delhi Act) 1992ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்த சட்டம், மீண்டும் சட்டசபை மற்றும் அமைச்சரவையை உருவாக்க வழி வகுத்தது. இதையடுத்து, 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு, 1993, டிசம்பர் 2ம் தேதி டெல்லியின் முதல்வராக பாஜகவைச் சேர்ந்த மதன் லால் குரானா பதவியேற்றார்.

பாஜக, காங்கிரஸ் என மாறி மாறி ஆட்சிக்கு வந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. சாஹிப் சிங் வர்மா, சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீக்ஷித் ஆகியோர் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியின் முதல்வராக இருக்கிறார். டெல்லியில் 90க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தாலும், ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளே மக்கள் செல்வாக்கைக் கொண்டிருக்கின்றன. மக்களவைத் தேர்தல் களம் குறித்து பார்ப்பதற்கு முன்பாக, கடந்த சில தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.

2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலின்போது, பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன. இதில், மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. அக்கட்சி, 46.63% வாக்குகளுடன் இந்த வெற்றியை வசப்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சி 33.08% வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 15.22% வாக்குகளையும் பெற்றன.

2015 சட்டப்பேரவைத் தேர்தல்: இந்த தேர்தலின்போதும், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, 54.34% வாக்குகளுடன் 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 69 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 32.19% வாக்குகளுடன் 3 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 9.65% வாக்குகளை மட்டுமே பெற்றது.

2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலின்போதும், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. இதில், 56.85% வாக்குகளைப் பெற்ற பாஜக, மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 18.20% வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 22.63% வாக்குகளையும் பெற்றன.

2020 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலின்போதும், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 53.57% வாக்குகளுடன் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62ல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. 67 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 38.51% வாக்குகளுடன் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 66 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 4.26% வாக்குகளை மட்டுமே பெற்றது.

இந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும், சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கும் மக்கள் அதிக ஆதரவை அளித்திருப்பது தெரிகிறது.

நடப்பு நாடாளுமன்றத் தேர்தல் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 25ம் தேதி நடைபெற உள்ளது.

2024 தேர்தல் களம்: இந்த தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இண்டியா அணி சார்பில் கூட்டணியாக போட்டியிடுகின்றன. இதில், ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. டெல்லி மாநில மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோதியா, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர யாதவ் ஆகியோரும் இதே வழக்கில் சிறையில் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 6 மாத சிறை வாசத்துக்குப் பிறகு தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் எதிரெதிர் துருவங்களாக இருந்து வந்த நிலையில், தற்போது அவை கூட்டணி அமைத்திருப்பதால் அதிருப்தி அடைந்த டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கடந்த மாதம் (ஏப்ரல்) தனது பதவியை ராஜினாமா செய்தார். அதோடு, அவர் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

அதேநேரத்தில், காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டு, தேர்தல் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த இரு தேர்தல்களில் வாக்குகள் பிரிந்தது போல் இம்முறை பிரியாது என்பதால் தங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்திருப்பதாக இண்டியா கூட்டணித் தலைவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி உள்பட பாஜக தலைவர்கள் பலரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

கருத்துக் கணிப்புகள்: டெல்லியில் இதுவரை நடத்தப்பட்ட 7 கருத்துக் கணிப்புகளிலும், பாஜகவே அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்சி குறைந்தது 5 இடங்களிலும், அதிகபட்சம் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. இண்டியா அணி அதிகபட்சம் 2 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x