Last Updated : 30 Apr, 2024 05:40 PM

 

Published : 30 Apr 2024 05:40 PM
Last Updated : 30 Apr 2024 05:40 PM

மும்முனைப் போட்டியில் ஒடிசா - முன்னணியில் இருப்பது யார்? | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, கடந்த கால தேர்தல்களில் அக்கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் எத்தனை, அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த தேர்தல் வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய கள சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஒடிசா மாநிலத்தின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்ப்போம்.

நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பரப்பளவில் 8வது பெரிய மாநிலம் ஒடிசா. இந்த மாநிலத்தில் 30 மாவட்டங்கள், 147 சட்டப்பேரவை தொகுதிகள், 21 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாநிலத்தில் 4,19,74,218 மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில், 3,49,70,562 பேர் கிராமப்புறங்களிலும், 70,03,656 பேர் நகர்ப்புறங்களிலும் வசிக்கிறார்கள். ஆண்களின் விகிதம் 50.54 ஆகவும், பெண்களின் விகிதம் 49.46 ஆகவும் உள்ளது.

ஒடிசாவின் அலுவல் மொழி ஒடியா. கூடுதல் அலுவல் மொழி ஆங்கிலம். ஒடிசாவின் எழுத்தறிவு 72.90%. ஆண்களின் எழுத்தறிவு 82% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 64% ஆகவும் இருக்கிறது. ஒடிசாவில் 93.63% இந்துக்கள் வாழ்கிறார்கள். இஸ்லாமியர்கள் 2.17% ஆகவும், கிறிஸ்தவர்கள் 2.77% ஆகவும் இருக்கிறார்கள்.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து காங்கிரஸ் கட்சியே ஒடிசாவை அதிக காலம் ஆட்சி செய்திருக்கிறது. இரண்டாம் இடத்தில் பிஜு ஜனதா தளம் உள்ளது. ஹரேகிருஷ்ணா மகாதாப், நபாகிருஷ்ணா சவுத்ரி, பிஜு பட்நாயக், பிஸ்வநாத் தாஸ், நந்தினி சத்பதி, ஜானகி பல்லப் பட்நாயக், ஹேமானந்த பிஸ்வால் என பலர் இம்மாநிலத்தின் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். பிஜு ஜனதா தளத்தின் தலைவரான நவீன் பட்நாயக் கடந்த 2000ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முதல்வராக இருந்து வருகிறார். அந்த வகையில், நாட்டின் அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெயரை நவீன் பட்நாயக் எடுத்திருக்கிறார்.

மக்களவைத் தேர்தலோடு ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறும் என்றும், மொத்தம் 21 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், மே 13ம் தேதி 4 தொகுதிகளுக்கும், மே 20ம் தேதி 5 தொகுதிகளுக்கும், மே 25ம் தேதி 6 தொகுதிகளுக்கும், ஜூன் 1ம் தேதி 6 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல், இதே தேதிகளில் ஒடிசாவின் சட்டப்பேரவைக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஒடிசாவில் 147 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், மே 13ம் தேதி 28 தொகுதிகளுக்கும், மே 20ம் தேதி 35 தொகுதிகளுக்கும், மே 25ம் தேதி 42 தொகுதிகளுக்கும், ஜூன் 1ம் தேதி 42 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

ஒடிசாவில் 40-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளபோதிலும், பிஜு ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளே செல்வாக்கோடு உள்ளன. ஒடிசாவின் தற்போதைய தேர்தல் கள நிலவரத்தை அறியும் முன்பாக கடந்த சில தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம். மக்களவைத் தேர்தலோடு, ஒடிசாவின் சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்ட 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.

2014 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில், பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பாஜக ஆகியவை மொத்தமுள்ள 147 தொகுதிகளுக்கும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தன. இதில், 43.35% வாக்குகளுடன் பிஜு ஜனதா தளம் 117 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் பிஜு பட்நாயக் மீண்டும் முதல்வரானார். 25.74% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 18.02% வாக்குகளைப் பெற்ற பாஜக, 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: மாநிலத்தின் 3 முக்கிய கட்சிகளும் மொத்தமுள்ள 21 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நிலையில், பிஜு ஜனதா தளம் 44.77% வாக்குகளுடன் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 21.88% வாக்குகளைப் பெற்ற பாஜக, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. 26.38% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

அடுத்ததாக, மக்களவைத் தேர்தலோடு, ஒடிசாவின் சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்ட 2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.

2019 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் பிஜு ஜனதா தளம், பாஜக ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சி, சிபிஐ, சிபிஎம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. வாக்குப்பதிவுக்கு முன்பாக பட்குரா தொகுதியின் பிஜு ஜனதா தள வேட்பாளர் பேத் பிரகாஷ் அகர்வாலா உயிரிழந்ததை அடுத்து, 146 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. இதில், பிஜு ஜனதா தளம் 112 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து, பிஜு பட்நாயக் மீண்டும் முதல்வரானார். இந்த தேர்தலில் காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பாஜக மாநிலத்தின் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இக்கட்சி, 32.49% வாக்குகளுடன் 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 138 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 16.12% வாக்குகளுடன் 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: 21 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட பிஜு ஜனதா தளம், 43.32% வாக்குகளுடன் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக, 38.88% வாக்குகளுடன் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 18 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 13.99% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஒடிசாவின் தற்போதைய தேர்தல் களம் குறித்து தற்போது பார்ப்போம்.

2024 தேர்தல் களம்: இந்த தேர்தலில், பிஜு ஜனதா தளமும் பாஜகவும் தனித்து போட்டியிடுகின்றன. சிபிஎம் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இதன் காரணமாக ஒடிசாவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

கருத்துக் கணிப்புகள்: இம்மாநிலத்தில் இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் பிஜு ஜனதா தளமே முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் இக்கட்சி குறைந்தபட்சம் 11 தொகுதிகளிலும், அதிகபட்சம் 15 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. இண்டாம் இடத்தில் இருக்கும் பாஜக குறைந்தபட்சம் 5 தொகுதிகளிலும், அதிகபட்சம் 10 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. காங்கிரஸ் கூட்டணி அதிகபட்சம் ஒரு தொகுதியில் மட்டுமே வெல்லக்கூடும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பிரச்சாரம்: ஒடிசாவின் தேர்தல் பிரச்சாரம் தற்போது தமிழர் ஒருவரை மையமாக வைத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆம், தமிழகத்தைச் சேர்ந்த வி.கே. பாண்டியன்தான் அவர். ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனி செயலராக 12 ஆண்டுகள் இருந்து அவரது நம்பிக்கையைப் பெற்றவர். நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சமீபத்தில், அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜு ஜனதா தளத்தில் அவர் இணைந்திருக்கிறார்.

இதையடுத்து, மாநிலத்தின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்ட 5T (Transparency, Technology, Teamwork, Time and Transformation)-ன் தலைவராக வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார். அமைச்சர் பதவிக்கு நிகரான அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கட்சியிலும், நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. மாநில அளவில் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும் வி.கே.பாண்டியன் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.28) கேந்திரபாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, "ஒடிசாவின் முதல்வராக நவீன் பட்நாயக் பெயரளவிலேயே இருக்கிறார். உண்மையான அதிகாரம் வி.கே.பாண்டியனிடம்தான் இருக்கிறது. பிஜு ஜனதா தளமும் பாஜகவும் எதிரெதிராக பிரச்சாரம் செய்தாலும் திரைக்குப் பின்னால் அவர்கள் இணைந்து செயல்படுகிறார்கள். பாண்டியன், அமித் ஷா, நரேந்திர மோடி, நவீன் பட்நாயக் ஆகியோர் ஒடிசாவின் வளத்தை கொள்ளையடித்துள்ளார்கள். அவர்களிடம் இருந்து ஒடிசாவை விடுவிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.28) பெர்ஹாம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, "ஒடிசாவை மண்ணின் மைந்தர் ஆளவில்லை. வெறொரு மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒருவர்தான் மாநிலத்தை ஆள்கிறார். இதன்மூலம், வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒருவரை, ஒடிசாவின் தலைவராக திணிக்க நவீன் பட்நாயக் முயல்கிறார். நவீன் பட்நாயக் அரசு, வெளியாட்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இது கவலைக்குரிய விஷயம்.

ஒடிசாவின் 20 லட்சம் மக்களிடம் 160 சிட் கம்பெனிகள் ரூ.32 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்திருக்கின்றன. அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மிகப் பெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். ஒடிசா அரசு தற்போது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. 24 ஆண்டு காலமாக இருக்கும் பிஜு ஜனதா தள ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, "ஒடிசாவின் அடையாளம், மொழி, இலக்கியம் ஆகியவை தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன. மாநிலத்தின் நிலையை பிஜு ஜனதா தள அரசு மோசமானதாக மாற்றி இருக்கிறது. ஒடிசா மக்கள் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இம்முறை ஒடிசாவில் மாற்றம் நிகழும்" என தெரிவித்துள்ளார்.

தேசிய கட்சியான பாஜக, தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியனை வெளியாள் என கூறுவது அதன் சித்தாந்தத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. பாஜகவின் இந்த விமர்சனத்துக்கு பதில் அளித்துள்ள வி.கே.பாண்டியன், "நான் வெளியாளா இல்லையா என்பதை ஒடிசா மக்கள் தீர்மானிப்பார்கள் என பதில் அளித்துள்ளார். தீவிர தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே, ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள வி.கே.பாண்டியன், "எனது கடவுள் ஜகந்நாதர். எனது குரு நவீன் பட்நாயக். எனது கர்மபூமி ஒடிசா. எனது இரண்டு குழந்தைகளுக்கும் ஒடியாதான் தாய்மொழி, ஒடிசாதான் தாய்நாடு. நான் வெளியாளா இல்லை ஒடிசா மக்களில் ஒருவனா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என என்னை குறிப்பிடுவது குறித்து கேட்கிறீர்கள். நவீன் பட்நாயக்கின் உயர் மதிப்பீடுகளின் வாரிசுகளாக ஒடிசா இளைஞர்கள் இருக்கிறார்கள். நானும் அவர்களில் ஒருவன். தனது அரசியல் வாரிசு யார் என்பதை ஒடிசா மக்கள் தீர்மானிப்பார்கள் என்று முதல்வர் நவீன் பட்நாயக் தெளிவுபடுத்தி இருக்கிறார். அவர் எனது குரு. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தீர்மானிப்பார்.

2014, 2019 தேர்தல்களின்போதும் எதிர்க்கட்சிகள் என்னை குறிவைத்து தாக்கின. அவர்கள் என்னை தாக்குவது புதிதல்ல. 2014 தேர்தலுக்குப் பிறகு முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அடுத்து அதிகம் தாக்குதலுக்கு உள்ளானவன் நான்தான். இத்தனைக்கும் அப்போதெல்லாம் நான் அரசியலில் இல்லை. 2019-லும் இதுதான் நடந்தது. எனது வீடும் தாக்கப்பட்டது. இவை என்னை பாதிக்கவில்லை, பிஜு ஜனதா தளத்தின் மீதான மக்களின் அன்பும் குறையவில்லை. மாறாக, அவை வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், அதில் வி.கே.பாண்டியனின் தாக்கம் இம்முறை அதிகம் இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x