Last Updated : 05 Apr, 2024 10:10 AM

17  

Published : 05 Apr 2024 10:10 AM
Last Updated : 05 Apr 2024 10:10 AM

திமுக Vs பாஜக Vs அதிமுக: தமிழ் மண் கண்ணுறும் புதிய களம் | மக்களவை மகா யுத்தம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த பல பத்தாண்டுகளில், தேர்தல் களம் என்றாலே அது திமுக - அதிமுகவை மையப்படுத்தியதாகத்தான் இருக்கும். இக்கட்சிகள் ஏதாவது ஒரு தேசிய அணியில் இடம்பிடித்திருந்தாலும், மாநிலத்தில் ஒன்றையொன்று எதிர்த்துதான் களமாடும்.

ஆனால், 2024 மக்களவைத் தேர்தல் களத்தில் பெருமளவு மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. திமுக முன்னெடுக்கும் பிரச்சாரங்களில் பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான விமர்சனத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதிமுக வழக்கம்போல திமுக எதிர்ப்பை மட்டுமே முன்னிறுத்தி வருகிறது. பாஜகவோ மறைந்த அதிமுக தலைவர்களைப் பாராட்டியும் திமுகவைச் சரமாரியாக விமர்சித்தும் பிரச்சாரம் செய்துவருகிறது.

மோடிதான் முக்கிய இலக்கு: நாடு முழுவதும் மோடி அலை வீசப்பட்டதாகக் கருதப்படும் 2014 மக்களவைத் தேர்தலில் ‘மோடியா, லேடியா?’ என்கிற கேள்வியை எழுப்பித் தமிழ்நாடு அரசியல் களத்தைத் தன்வசப்படுத்தினார் ஜெயலலிதா. ஏறத்தாழ அதே பாணியில் ‘மோடியா, ஸ்டாலினா?’ என்கிற பிரச்சாரத்தைத் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பதைப் பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டில் ‘இண்டியா’ கூட்டணிக்கு ஸ்டாலின் தலைமை வகிப்பதால், இக்கூட்டணிக்கு வெற்றி தேடிவரும் வகையில் ‘மோடியா - ஸ்டாலினா?’ என்று களத்தை அமைக்க திமுக கட்டமைப்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில், அண்ணாமலை தலைமையிலான மாநில பாஜகவைப் பொருட்படுத்தாமல் மோடியையும் பாஜக ஆட்சியையும் மட்டுமே மையப்படுத்தி இந்தப் பிரச்சாரத்தை திமுக முன்னெடுக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் நோட்டாவைத் தாண்டாத கட்சி என்று பாஜகவை இப்போதும் திமுக பகடி செய்தாலும், தேர்தல் பிரச்சாரத்தில் வெளிப்படும் அம்சங்கள் அதை எதிரொலிக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியையும் மத்திய பாஜக அரசையும்தான் மிகக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்.

பாஜக அரசினால் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் அம்சங்களைப் பட்டியலிட்டுத் தன் வாதங்களுக்கு வலிமை சேர்க்க முயல்கிறார். மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள கட்சி என்கிற வகையில் பாஜகவை விமர்சித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவது இயல்பானதுதான்.

ஆனால், மோடியை எதிர்ப்பதில் திமுக வேகம் காட்டுவதால், மாநிலத்தில் மூன்றாண்டுகளாக அரசின் சாதனைகள் என்று திமுக முன்னெடுத்த அம்சங்கள் கூடப் பிரச்சாரத்தில் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனவோ என்கிற கேள்வி எழாமல் இல்லை. அந்த அளவுக்கு மோடிக்கும் பாஜகவுக்கும் எதிர்வினையாற்றும் வகையிலேயே ஸ்டாலினின் பிரச்சாரம் வடிவமைக்கப்படுகின்றது. பிரச்சாரத்தின் இறுதியில்தான் திமுக அரசின் சாதனைகள், பிரச்சாரம் செய்யும் தொகுதியில் நிறைவேற்றப்படும் அம்சங்கள் குறித்து ஸ்டாலின் பேசுகிறார்.

2019 தேர்தலைப் பொறுத்தவரை - மத்தியில் பாஜக ஆட்சியும், மாநிலத்தில் அதிமுக ஆட்சியும் இருந்ததும், இந்த இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்ததும் திமுகவுக்குப் பிரச்சாரம் செய்ய வசதியாக இருந்தது. இப்போது அதிமுக - பாஜக கூட்டணி உடைந்து தனித்தனி அணியாக இருப்பதால், இரண்டு கூட்டணிகளையும்தான் திமுக தனித்தனியாக விமர்சித்திருக்க வேண்டும்.

ஆனால், ‘பாஜகவுடன் அதிமுக கள்ளக் கூட்டணி வைத்துள்ளது’ என்கிற குற்றச்சாட்டை முதன்மைப்படுத்தியே ஸ்டாலின் பேசுகிறார். அதாவது, அதிமுக - பாஜகவை ஓரணியாகக் கருதியே திமுக பிரச்சாரங்களை மேற்கொள்கிறது. திமுகவின் அடுத்தகட்டத் தலைவர்கள்தான் திமுக - அதிமுக இடையே போட்டி என்கிற கருத்துகளை முன்வைக்கிறார்கள். திமுகவின் இந்தப் பாணி, வழக்கமான அதிமுகவுடன் போட்டி என்கிற இடத்தில் பாஜகவை இந்த முறை நிறுத்தியிருக்கிறதோ என்கிற கேள்வியை எழுப்புகிறது.

அதிமுகவின் வியூகங்கள்: இரட்டைத் தலைமையை ஒழித்துவிட்டுப் பொதுச் செயலாளராக பழனிசாமி ஆன பிறகு, தன் தலைமையை நிரூபிக்க வேண்டிய இடத்தில் அவர் இருக்கிறார். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, அந்த விலகலை முழு மனதுடன் செய்ததையும் சேர்த்தே நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரையும் விமர்சிப்பதிலேயே பழனிசாமி நேரத்தைச் செலவிடுகிறார். பாஜகவை ஏன் விமர்சிக்கவில்லை என்பதற்கு, ‘கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்ட பிறகு, அவர்களை விமர்சிக்க என்ன இருக்கிறது? தவிர, நாங்கள் எதிர்க்கட்சிதானே?’ என்கிறரீதியில் விளக்கம் அளித்துவந்த பழனிசாமி, திமுகவின் தொடர் விமர்சனங்களால்தான் பாஜகவையும் தொட்டுப் பேசும் நிலைக்கு இறங்கியிருக்கிறார்.

எனினும், மோடியின் பெயரை அவர் மறந்தும் உச்சரிப்பதில்லை. இந்தத் தேர்தலில் பெறும் குறிப்பிடத்தகுந்த வெற்றியே 2026இல் அதிமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால், ஆளுங்கட்சியான திமுகவை எதிர்த்தே அதிமுக களமாடி வருகிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வாக்குறுதிகள் அளித்து நிறைவேற்றாதது, போதைப் பொருள் விவகாரம், லஞ்சம்-ஊழல் என அதிமுக பிரச்சாரம் செய்துவருகிறது. அதே நேரத்தில், திமுகவினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிப்பதிலும் பழனிசாமி தனிக் கவனம் செலுத்துகிறார்.

‘அதிமுக - பாஜக கள்ள உறவு’ என்று திமுக வைக்கும் குற்றச்சாட்டுக்கு ‘திமுக - பாஜக உறவு’ என்று பழனிசாமி செய்யும் எதிர்ப் பிரச்சாரம் ஓர் உதாரணம். ஆனால், அதை நிரூபிக்க அலுவல்ரீதியாக மோடியும் - ஸ்டாலினும் சந்தித்த ஒளிப்படங்களைக் காட்டுவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிக்குப் பதில் அளிக்கும் வகையிலும் பழனிசாமி பேசிவருகிறார்.

அன்றைய அரசியலில் - கருணாநிதியின் மகனான ஸ்டாலினுக்கு ஜெயலலிதா தராத முக்கியத்துவம் இது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் 10%கூட நிறைவேற்றவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக பழனிசாமி பதிவுசெய்கிறார். ஆனால், பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க அதிமுகவின் அழுத்தமே காரணம் என்று இன்னொரு இடத்தில் முரணாகப் பேசுகிறார்.

பாஜக பிரச்சாரம்: 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில்கூடத் தமிழ்நாட்டிலிருந்து பாஜக வெற்றியை எதிர்பார்த்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், 10 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து குறிப்பிடத்தகுந்த வெற்றியை பாஜக எதிர்பார்க்கிறது.

பிரதமர் மோடி தொடர்ந்து தமிழ்நாட்டுக்குப் படையெடுப்பது அதை உணர்த்துகிறது. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் அக்கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பிடத்தகுந்த வெற்றியையும் வாக்கு சதவீதத்தையும் பெற்றால்தான் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்கிற கூற்றுக்கு அக்கட்சி வலுவூட்ட முடியும். அது தேசியத் தலைமைக்கும் புரியாமல் இல்லை.

அதனால்தான் அதிமுக வாக்குகளைக் கவரும் வகையில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவைப் புகழ்ந்துபேசுவது, ‘இண்டியா’ கூட்டணியின் முக்கிய அங்கமான திமுகவுக்கு எதிராக காரசாரமான புகார்களை முன்வைப்பது என மோடியின் பிரச்சாரங்கள் மாறியிருக்கின்றன.

தமிழ் மொழி, கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் பேசுவதற்கும் மோடிமுன்னுரிமை அளிக்கிறார். தேசிய அளவில் ஒரு விஷயத்தைப் பேசுபொருளாக்கி, எதிர்க்கட்சிகளையும்கூட அதைப் பற்றியே பேசவைப்பது பாஜகவின் பிரச்சாரப் பாணிகளில் ஒன்று. அதைத் தமிழ்நாட்டிலும் அரங்கேற்றும் வகையில் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்திருப்பதைச் சொல்லலாம்.

ஒரே நாளில், டெல்லி முதல் சென்னை வரை கச்சத்தீவு விவகாரத்தைப் பேசுபொருளாக்குவதில் பாஜக வெற்றி கண்டிருக்கிறது. 50 ஆண்டு கால சர்ச்சை பற்றி இப்போது பேசுவதன் மூலம் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் ஒன்றாக நெருக்கடி தர நினைக்கிறது பாஜக. இதன் விளைவாக அருணாசலப் பிரதேசம் சீனாவின் அத்துமீறல் குறித்துப் பேசும்அளவுக்குத் திமுகவும் இறங்கியிருக்கிறது.

வெள்ளம் வந்தபோதுபிரதமர் ஏன் வரவில்லை, வெள்ள நிவாரணம் ஏன் தரவில்லை என்பது போன்ற அம்சங்களை திமுக மேடைகளில் பேசிவரும் நிலையில், கச்சத்தீவுக்குப் போட்டியாக அருணாசலப்பிரதேசம் விவகாரத்தைப் பேசிய திமுக, சேலம் பிரச்சாரத்தில் பெண்சக்தி குறித்துப் பிரதமர் மோடி பேசியதற்கு மாற்றாக மணிப்பூர் விவகாரத்தைப் பேச நேர்ந்திருக்கிறது. ஆக, மாநிலப் பிரச்சினைகளுக்கு மாற்றாக தேசியப் பிரச்சினைகளைத் தமிழ்நாட்டிலும் பேசும்அளவுக்கு பாஜகவின் பிரச்சாரப் போக்கு அமைந்திருக்கிறது.

திமுக-அதிமுக-பாஜகவின் பிரச்சாரப் பாணிகள் இப்படி அமைந்திருந்தாலும் திமுகவும் அதிமுகவும் தாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் குறித்துப் பிரச்சாரத்தில் பெரிதாகப்பேசுவதில்லை. இதேபோல பாஜகவும் மோடியின் உத்தரவாதங்கள் குறித்தும் பெரிதாகப் பேசுவதில்லை. தமிழகம் இதுவரை கண்டிராத இந்தப் புதிய தேர்தல் களம், யாருக்கு வெற்றி மாலையைச் சூட்டும் என ஜூன் 4இல் தெரிந்துவிடும்!

- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

To Read in English: Now it’s DMK vs BJP vs AIADMK: TN witnesses a new political equation

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x