Published : 05 Apr 2024 08:58 AM
Last Updated : 05 Apr 2024 08:58 AM

“இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி” - கங்கனாவின் கருத்தும், சமூக வலைதள விவாதமும்!

மும்பை: “இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத் பேசியது, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் களமிறங்கியுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். தொடர்ந்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர், அண்மையில் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, “எனக்கு ஒரு விஷயம் தெளிவுபடுத்துங்கள். நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகுதான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்றும் கங்கனா கூறியிருந்தார். இந்த காணொலிகள் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளன.

கங்கனாவுக்கு எதிராக இண்டியா கூட்டணி ஆதரவாளர்களும், அவருக்கு ஆதரவாக பாஜக ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் களமாடி வருகின்றனர். இண்டியா கூட்டணி ஆதரவாளர் ஒருவர் வெளியிட்ட பதிவில், “கங்கனாவின் IQ 110ஐ தாண்டி விட்டது. இதனால் தான் அவருக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது” என்று கிண்டலடித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா தனது பதிவில், “கங்கனாவை இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் பாஜக தலைவர்களையே விஞ்சிவிடுவார்” என்று கூறியுள்ளார். கங்கனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பாஜக ஆதரவாளர்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தன்னைத் தானே இந்தியாவின் பிரதமராக அறிவித்துக் கொண்டதாக சில தரவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x