Last Updated : 29 Nov, 2023 06:16 AM

 

Published : 29 Nov 2023 06:16 AM
Last Updated : 29 Nov 2023 06:16 AM

பொதுப் பட்டியல் சர்ச்சை: புரிதலும் தீர்வும்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள பொதுப் பட்டியல் குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்திருக்கிறது; 1950 இலிருந்தே தொடரும் சர்ச்சை இது. அரசமைப்பு நிர்ணயசபை உறுப்பினர்களிடையே இது குறித்து மாறுபட்ட கருத்துகள் இருந்தன. பொதுப் பட்டியல் என்று ஒரு பிரிவு இடம்பெறுவதன் மூலம் மாநிலங்களின் கொல்லைப்புறத்தை, மத்திய அரசு நுழைவதற்குத் திறந்துவைப்பது போலாகிவிடும் என்று வாதிட்டவர்களும் உண்டு. அப்படி எச்சரித்தும் அரசமைப்பை உருவாக்கியவர்கள், பொதுப் பட்டியலை இடம்பெறச் செய்ததன் மூலம், மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைக்கும்படியான நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

பறிக்கப்படும் மாநில உரிமை: மாநில அரசுகள் சட்டம் இயற்றிச் செயல்படுத்தச் சில இனங்கள் அடங்கிய மாநிலப் பட்டியல், மத்திய அரசு சட்டம் இயற்றிச் செயல்படுத்தச் சில இனங்கள் அடங்கிய மத்தியப் பட்டியல், இரண்டுக்கும் பொதுவான அதிகாரங்களைக் கொண்டதாகச் சில இனங்களை உள்ளடக்கிய பொதுப் பட்டியல் எனப் பட்டியல்கள் வகைப்படுத்தப்பட்டன. பொதுப் பட்டியலில் கண்ட இனங்கள் குறித்து மாநில அரசுகளும் சட்டம் இயற்றலாம்; மத்திய அரசும் சட்டம் இயற்றலாம். ஆனால், அந்தச் சட்டங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றபோது, மத்திய அரசின் சட்டம்தான் செல்லும். மாநில அரசுகளும் அதை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டியது கட்டாயம்.

இந்த நிலையில், மாநில அரசுகளின் அதிகாரம் மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டதாகிவிடுகிறது. அது மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டக்கூறு 249இன்படி ஆட்சியாளர்கள் நினைத்தால், தேவையான நேரத்தில் மாநிலப் பட்டியலில் உள்ள இனம் குறித்துத் தாமாகவே முன்வந்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றலாம். இதன் மூலம் மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இனங்கள் நிரந்தரமானவையா என்றால் அதுவும் இல்லை. உதாரணமாக, 1976இல் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்ட 42ஆவது திருத்தத்தின் மூலமாக மாநிலப் பட்டியலில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான இனங்கள் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன.

நெருக்கடிநிலையின்போது செய்யப்பட்ட அந்தத் திருத்தத்தின் மூலம் மாற்றப்பட்ட இனங்களில் ஒன்றுதான் மாநிலப் பட்டியலில் இருந்துவந்த கல்வி. பின்னால் ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாய், அப்படி மாற்றப்பட்ட இனங்கள் சிலவற்றை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்த்தபோதும், கல்வியைப் பொதுப் பட்டியலிலேயே நீடிக்கவிட்டுவிட்டார். மத்திய அரசில் யார் ஆட்சிப் பொறுப்பேற்றாலும், அதிகாரங்களை மத்திய மையத்தில் குவிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது: இதன் விளைவுதான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கம்; நாடாளுமன்ற விவாதத்துக்கு உட்படுத்தாமலேயே, புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்க நடக்கும் முயற்சி; உயர் கல்வியை மத்தியப் பட்டியலுக்குக் கொண்டுபோக ஏற்பாடுகள். தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இரண்டும் இதில் ஒத்த கருத்துடையவையாகவே இருக்கின்றன. உயர் கல்வி பயில தேசிய தகுதித் தேர்வு கட்டாயம் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. ஆனால், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது உயர்கல்வி படிக்கும் மாணாக்கர்கள் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகம் என்பதால், மத்திய அரசால் திட்டமிடப்பட்டிருக்கும் தேசிய தகுதித் தேர்வு நமது மாநிலத்தைப் பொறுத்தவரை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அது தேவையில்லாத ஒன்று என்பதே நமது வாதம்.

இதன் காரணமாகத்தான் மாநிலங்களுக்கென்று தனிக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சட்டம் இயற்றுவதில் பொதுப் பட்டியலைப் பொறுத்தவரை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், சம அதிகாரம் இருப்பதாகத்தான் பொருள். ஒரு பொருள் குறித்த சட்டம் மாநில அரசாலும், மத்திய அரசாலும் இயற்றப்பட்டாலும், சட்டங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறபோது மத்திய அரசு நிறைவேற்றும் சட்டம்தான் செல்லும் என்ற நிலை இருப்பது மாநில அரசுகளின் சட்டம் இயற்றும் உரிமையைத் தரம் தாழ்த்துவதாக இருக்கிறது. மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அடிபணிந்து போவது போன்ற தோற்றம் வெளிப்படுவதாக அமைகிறது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.

லோக்பாலும் லோக் ஆயுக்தாவும்: ‘லோக்பால்’ சட்டம் மத்திய அரசு சம்பந்தப்பட்டது; ‘லோக் ஆயுக்தா’ சட்டம் மாநில அரசு சம்பந்தப்பட்டது. ‘லோக்பால்’ சட்டத்தை மத்திய அரசு உருவாக்கியபோது, ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தையும் சேர்த்துக் கொண்டுவந்துவிட்டார்கள். அந்தச் சட்டம் நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு வந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அந்த நிலைக் குழுவில் நான் இடம்பெற்றிருந்ததால், “லோக் ஆயுக்தா சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரக் கூடாது. மாநில அரசுகள் அதை உருவாக்கி நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், அந்தந்த மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு விட்டுவிட வேண்டும்” என்று எனது கருத்தைப் பதிவுசெய்தேன்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, ‘லோக் ஆயுக்தா’ சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்படாமல் தடுக்கப்பட்டது. ‘லோக்பால்’ சட்டத்தை மட்டுமே நாடாளுமன்ற இரு அவைகளும் நிறைவேற்றின. ‘லோக் ஆயுக்தா’ சட்டம் இயற்றும் உரிமை மாநிலங்களுக்கு விடப்பட்டது. விலங்குகளைக் காட்சிப்படுத்தக் கூடாது என்ற பொதுப் பட்டியலில் இடம்பெற்றிருந்த சட்டத்தின் அடிப்படையில், காளைகள் சேர்க்கப்பட்டதால் ஜல்லிக்கட்டுக்குத் தடை ஏற்பட்டது. பலத்த போராட்டங்களுக்கு இடையில், தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் கொண்டுவந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது; மத்திய சட்டத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அனைத்து மாநிலங்களும் ஒன்றுசேரும் மையப்புள்ளிதான் மத்திய அரசு. பல மாநிலங்களை உள்ளடக்கிய மத்திய அரசாக, மத்திய அரசு இருப்பதால் அனைத்து மாநிலங்களின் நிலைமைகள், உணர்வுகள், உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள ‘யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்’ என்பதன் பொருள். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நம் முன்னோர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காகப் பொதுப் பட்டியலும் இடம்பெற வேண்டும் என்று முடிவெடுத்து, அதைச் சட்டத்தில் இடம்பெறச் செய்திருந்தாலும், மாநில அரசுகளும் மத்திய அரசும் இணக்கமாக இருக்க வேண்டும் என்றால், பொதுப் பட்டியல் குறித்த சர்ச்சைகள் தொடராமல் இருப்பது நல்லது. மாநிலங்களின் நலன் கருதி எந்த ஒரு சட்டத்தையும் திட்டத்தையும் மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. அதுபோலவே, கொள்கை முடிவை மாற்றவும் மத்திய அமைச்சரவைக்கு வழிவகை உள்ளது.

முற்றுப்புள்ளிக்கான தருணம்: ஆரம்ப காலகட்டத்தில் மத்திய அரசில் இடம்பெற்றிருந்த கட்சியே மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் அப்போது பிரச்சினை பெரிதாகத் தெரியவில்லை. தற்போது பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றன. மாநிலத்தில் ஆளும் கட்சிகள் அந்தந்த மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இதில் மத்திய அரசோடு மோதும் போக்கு என்ற விமர்சனம் வேறு. இந்தச் சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், அரசமைப்புச் சட்டத்தின் அட்டவணை பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இனங்கள் குறித்த மத்திய அரசின் சட்டங்கள் மாநிலங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளட்டும்.

மாறுபாடு தென்பட்டால், அந்தந்த மாநிலங்கள் அதே பொருள் குறித்து தனியாகச் சட்டங்களை இயற்றிக்கொண்டு நடைமுறைப்படுத்திக்கொள்ளும் வகையில், மாநிலங்களால் இயற்றப்படும் சட்டத்துக்கு மத்திய அரசு சம்மதம் தெரிவிக்க வேண்டும்; அத்துடன் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தந்து அந்தந்த மாநிலங்களின் நிலைமைகளுக்கு ஏற்ப, அவற்றைச் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். அப்படிச் செய்கிறபோது நாட்டின் கட்டமைப்பு உறுதிப்படும். பொதுப் பட்டியல் சர்ச்சைக்குச் சிறந்த ஒரே தீர்வு இதுதான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x