Last Updated : 15 Nov, 2023 07:05 AM

 

Published : 15 Nov 2023 07:05 AM
Last Updated : 15 Nov 2023 07:05 AM

கணை ஏவு காலம் 34 | ஹமாஸ் ஆதரவு அறக்கட்டளை முடக்கம் @ இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

கோப்புப்படம்

பாலஸ்தீனத்தில் நடைபெற்ற இரண்டாவது இண்டிஃபாதா என்பது அல் அக்ஸா மசூதி வளாகத்துக்கு ஏரியல் ஷரோன் வந்து சென்றதன் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டதுதான் என்பதைப் பார்த்தோம் அல்லவா? அம்மக்கள் எழுச்சிக்கு ‘அல் அக்ஸா இண்டிஃபாதா’ என்று பெயர் வரக் காரணமாக இருந்தது ஹமாஸ். ஜெருசலேத்தை எப்படியாவது இஸ்ரேலின் பிடியிலிருந்து மீட்பது என்பதை ஒவ்வொரு பாலஸ்தீனருக்கும் வாழ்நாள் லட்சியமாக்குவதை அவர்கள் தங்களது முக்கியமான செயல்திட்டமாகக் கொண்டார்கள்.

அதனால்தான் ஃபத்தாவை உள்ளடக்கிய பி.எல்.ஓ.வின் அத்தனை இயக்கங்களும் தலையெழுத்தே என்றாவது இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரித்து, ‘நீ பாதி நான் பாதி கண்ணே' என்று பாட ஆரம்பித்த பிறகும், முடியவே முடியாது; இஸ்ரேலின் இருப்புக்கே நியாயமில்லை என்று ஹமாஸ் தீர்மானமாக நின்றது.

பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்று காலெத் மஷல் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றபோதாவது அவர்கள் சற்று இறங்கி வரக்கூடும் என்று மேற்கு நாடுகள் எதிர்பார்த்தன. ஆனால் பொறுப்பேற்ற பிறகு வெளியிட்ட முதல் அறிவிப்பிலேயே கிழக்கு ஜெருசலேத்தைத் தலைநகரமாகக் கொண்ட சுதந்தர பாலஸ்தீனம் என்றுதான் மஷல் ஆரம்பித்தார். மொத்தமாக வெறுத்துப் போய் அவர்கள் தங்களது நிதி உதவிகளை நிறுத்த முடிவு செய்ததன் அடிப்படை அதுதான்.

ஆனால் ஹமாஸ் அதை ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. காரணம், நாடுகளின் உதவி ஒரு புறமிருந்தாலும் அதற்குக் கிட்டத்தட்ட சம அளவில் அவர்களுக்குப் பல அமைப்புகளின் உதவி கிடைத்துக் கொண்டிருந்தது. மத்தியக் கிழக்கு முழுவதும் இருந்த பல்வேறு பொதுநல அமைப்புகள், ஹமாஸுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிக் கொண்டிருந்தன. ஆண்டுக்கு இவ்வளவு என்று கணக்கு வைத்துக்கொண்டு நன்கொடை வழங்கும் அமைப்புகள். இந்த அமைப்புகளின் பின்னணியில் பல பெரிய எண்ணெய் நிறுவனங்கள், இதர தொழில் நிறுவனங்கள் இருந்தன. இது போக அல் அக்ஸா அறக்கட்டளை என்ற பெயரில் பகிரங்கமாகவே பல்வேறு நாடுகளில் நேரடியாக மக்களிடம் நிதி வசூல் செய்யப்பட்டது.

இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த இரண்டு விஷயங்களுக்கு மட்டும் சுத்தமாகவே ஆதாரம் கிடையாது. முதலாவது ஆப்பிரிக்காவில் ஹமாஸின் நிதி ஆதாரங்களின் ஒரு பகுதி உள்ளதாகச் சொல்லியிருந்தது. அடுத்தது மத்தியக் கிழக்கு நாடுகள் நீங்கலான இதர ஆசிய நாடுகளில் நிதி திரட்டப்படுவதாகச் சொல்லியிருந்தது.

தனிப்பட்ட நட்பு, ஜிஹாத் சித்தாந்தம், இஸ்லாமிய சகோதரத்துவ சித்தாந்தம் உள்ளிட்ட சில பொதுவான காரணங்களின் அடிப்படையில் அன்றைக்கு அல்-காய்தா, ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுடன் ஹமாஸுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது உண்மை. அவர்கள் மூலமாக இந்நாடுகளில் நிதி திரட்டப்படுவதாக இஸ்ரேல் சொன்னது. ஆனால் அல்-காய்தாவும் ஹிஸ்புல்லாவும் ஹமாஸுக்காக நிதி சேகரித்து அளித்திருக்கும் என்று நம்புவதற்கான முகாந்திரம் ஏதுமில்லை.

அமெரிக்காவில் ‘தி ஹோலிலேண்ட்’ என்றொரு அறக்கட்டளை இருந்தது. அதேபோல டென்மார்க், ஹாலந்து, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் அல் அக்ஸா அறக்கட்டளைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இந்த அறக்கட்டளைகளின் மூலம் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களிடையே நிதி திரட்டப்பட்டு ஹமாஸுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கன் இதர கிழக்கு-தென் கிழக்காசிய நாடுகளில் இந்த இயக்கமோ, அறக்கட்டளைகளோ செயல்பட்டதற்கான ஆதாரங்கள் கிடையாது.

2006-ம் ஆண்டு ஹமாஸ் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் அமெரிக்கா மேற்படி அறக்கட்டளைகளையும் அவற்றின் கிளைகளையும் நாடுதோறும் தேடி முடக்கும் பணியில் தீவிரமாக இயங்க ஆரம்பித்தது. அப்போது தான் ஆப்பிரிக்காவிலும் ‘The Holy Foundation' என்ற பெயரில் ஹமாஸ் ஆதரவு அறக்கட்டளை ஒன்று இயங்கி வருவது கண்டறியப்பட்டது. உடனடியாக 'தி ஹோலிலாண்ட்' அறக்கட்டளை, ‘அல்-அக்ஸா இஸ்லாமிய வங்கி' மற்றும் ‘Beit el-Mal Holdings' என்ற அமைப்பின் அமெரிக்கச் சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. ஹமாஸ் ஒரு தீவிரவாத இயக்கம்; அதற்கு உதவி செய்வது சட்டப்படி குற்றம் என்று தனது குடையின் கீழ் இருக்கும் ஒவ்வொரு நாட்டின் அரசையும் அறிவிக்கச் செய்தது அமெரிக்கா.

இதில் ஒரு வினோதம் என்னவென்றால் ஹமாஸின் சரித்திரத்திலேயே இல்லாத ஒரு சம்பவம் 2004-ம் ஆண்டு நடந்தது. இண்டிஃபாதா முடிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயம் அது. தேர்தல் குறித்தெல்லாம் சிந்திக்கத் தொடங்காத சமயமும் கூட. அடுத்த 10 வருடங்களுக்கு ஹமாஸ் இனி போர் செய்யாது என்று அறிவித்தார்கள். அதற்குப் பிறகுதான் மேற் சொன்ன நிதி முடக்க நடவடிக்கைகள் தொடங்கின.

(தொடரும்)

முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 33 | நிதி நெருக்கடியிலும் தாக்குப்பிடித்த ஹமாஸ் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x