Last Updated : 11 Nov, 2023 07:35 AM

 

Published : 11 Nov 2023 07:35 AM
Last Updated : 11 Nov 2023 07:35 AM

கணை ஏவு காலம் 31 | நிதி இல்லாமல் ஹமாஸ் ஆட்சி @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

மேற்குலக நாடுகளுக்கும், அவர்கள் அரசியல் - பொருளாதாரக் காரணங்களுக்காக அவர்களது சகாயம் தேவைப்படும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம். பாலஸ்தீனர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஹமாஸ் அன்றைய தேதியில் மீதமிருந்த ஒரே நம்பிக்கை.

யாசிர் அர்ஃபாத் காலமாகிவிட்ட பின்பு மம்மூத் அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன தேசிய ஆணையகம் (PNA) என்ன செய்யப் போகிறது, எப்படி இயங்கப் போகிறது என்பதில் அவர்களுக்கு நிறையக் குழப்பங்கள் இருந்தன. ஊழல் திலகங்கள், ஏதோ அர்ஃபாத்தின் ஆளுமைக்குக் கொஞ்சம் பயந்து ஓரளவேனும் வாலைச் சுருட்டி வைப்பார்கள். எப்போதும் இல்லாவிட்டாலும் எப்போதாவது. இனி அவர்களுக்குத் தடுப்பு சக்தி என்ற ஒன்று இல்லை. எனவே இதர ஜனநாயக நாடுகளின் கனியுண்ட அரசியல்வாதிகளைப் போலவே கடமையாற்ற ஆரம்பிப்பார்கள். பிறகு யார் கேட்பது?

அதனால் மட்டுமாவது ஹமாஸ் இருப்பது அவர்களுக்கு அவசியம் என்றானது. தவிர, முன்னர் கண்டது போல, இண்டிஃபாதாவை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு முன்னெடுத்துச் சென்ற விதம் அளித்த நம்பிக்கை. ஆம். இந்த மண்ணுக்கு இதுதான் சரி என்ற எண்ணத்தைத் திரும்பவும் பாலஸ்தீனர்கள் மனத்தில் அழுத்தமாக விதைத்தது.

ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற தேசங்கள் எப்படியாவது மம்மூத் அப்பாஸ் தலைமையிலான ஃபத்தா வெற்றி அடைந்துவிட வேண்டும் என்று நினைத்தன. இஸ்ரேலே அதைத்தான் விரும்பியது. பாலஸ்தீனம் என்கிற பிராந்தியமே இருக்கக் கூடாது என்று நினைக்கிற நல்லவர்கள் அவர்கள். அதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது என்னும் பட்சத்தில் மிதவாத சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்களே ஆட்சியில் இருக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே சொன்னார்கள்.

உண்மையில் சொல்வதென்றால், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் மம்மூத் அப்பாஸின் கட்சிதான் வெற்றி பெறும் என்று தீர்ப்பே எழுதிவிட்டபடியால் மட்டுமே அன்றைக்கு அங்கு தேர்தல் நடந்தது. இல்லாவிட்டால் எதையாவது சொல்லித் தேர்தலை நடக்கவே விடாமல் அடித்திருப்பார்கள்.

ஆனால் கணிப்புகள் தோற்றன. எப்படி அப்படி ஆனது என்பது இன்று வரை புதிராக உள்ளது. ஒன்று என்றால் ஓரிடத்தில் கூட யார் சொன்னதும் நடக்கவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் ஹமாஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தார்கள். மேற்குக் கரையிலேயே அந்த நிலைமை என்றால் காஸாவைப் பற்றிச் சொல்ல வேண்டாம் அல்லவா? தேர்தல் பார்வையாளர்களாக உலகெங்கிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான வல்லுநர்கள், ஹமாஸின் அந்த வெற்றியை ‘பாலஸ்தீனர்களின் நாற்பதாண்டு கால விரக்தியின் விளைவு’ என்று வர்ணித்துவிட்டுச் சென்றார்கள். வேண்டாம் வேண்டாம் என்று ஹமாஸ் இறுதி வரை தடுத்துப் பார்த்த ஓஸ்லோ உடன்படிக்கையின் தோல்வி மக்களுக்குப் புரிந்துவிட்டது ஒரு காரணம். அந்த உடன்படிக்கைக்குப் பிறகு பாலஸ்தீனர்களுக்கு நல்லது நடக்கும் என்று சொல்லிக் கொண்டு முன்பிருந்ததைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக நிகழ்ந்துவிட்டிருந்த இஸ்ரேலியக் குடியேற்றங்கள் மிக முக்கியமான காரணம். பாலஸ்தீன தேசிய ஆணையகம் மற்றும் ஃபத்தாவின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை அடியோடு சரிந்து போனது.

மறுபுறம், இனி ஹமாஸ்தான் பாலஸ்தீனத்தை ஆளப் போகிறது என்பதை இஸ்ரேலால் ஏற்கவே முடியவில்லை. நல்லவேளை அவர்கள் 2005-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணித்திருந்தார்கள். இல்லாவிட்டால் மம்மூத் அப்பாஸும் மூட்டை கட்டிக்கொண்டு போயிருக்க வேண்டி வந்திருக்கும். இஸ்ரேல் அதை நினைத்து நிம்மதி கொள்ள வேண்டியதானது.

உள்ளாட்சித் தேர்தல்களில் பெற்ற வெற்றி ஒருபுறம். தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் கிடைத்த நம்ப முடியாத வெற்றி ஒரு பக்கம். மொத்தம் உள்ள 132 இடங்களில் 74 இடங்களை அவர்கள் கைப்பற்றியது உலக நாடுகளைத் திகைத்துப் போகச் செய்திருந்தது.

மற்ற நாடுகள் திகைத்துப் போய் உட்கார்ந்து விடலாம். அமெரிக்கா அப்படி இருக்காது அல்லவா? அவர்கள் ஏரியல் ஷரோனைப் போட்டு வறுக்கத் தொடங்கினார்கள். எப்படி ஹமாஸ் வெல்லலாம்? நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவா அங்கே இருக்கிறீர்கள்? எதையாவது செய்து தடுத்திருக்க வேண்டும். இனி வரப்போகும் அவலங்களை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

ஏரியல் ஷரோன் வெறுத்துப் போனார். இனி பாலஸ்தீன அரசுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்று அறிவித்தார். அதன் முதல் கட்டமாக வாட் வரி, சுங்க வரியில் பங்குகள் மற்றும் ஒரு தன்னாட்சி அரசு நடைபெறுவதற்காகத் தரப்பட வேண்டிய நிதி அனைத்தையும் உடனடியாக ரத்து செய்தார்கள். தேர்தலை முன்னிட்டுச் சிறிது காலமாக நிறுத்தி வைத்திருந்த ‘ராணுவ நடவடிக்கை’களை மீண்டும் தொடங்குவதற்கு உத்தரவளித்தார். மறுபுறம் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் அதுநாள் வரை பாலஸ்தீன தேசிய ஆணையத்துக்குச் செய்து வந்த பொருளாதார உதவிகளை நிறுத்தின. கிட்டத்தட்ட பூஜ்ஜிய நிதி ஆதாரத்துடன் ஹமாஸ் ஆள்வதற்குத் தயாரானது.

(தொடரும்)

முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 30 | தேர்தலில் ஒரே ஒரு கேள்வி கேட்ட ஹமாஸ் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x