Published : 21 Oct 2017 10:23 AM
Last Updated : 21 Oct 2017 10:23 AM

நூலகங்களின் சூழலும் முக்கியம்தான்!

நூ

லகங்கள் என்பவை புத்தகங்களைக் குவித்து வைக்கும் இடம் அல்ல. புத்தகங்களை வாசிப்பதற்கான நல்ல சூழலையும் தரும் இடங்கள்தான் நூலகங்கள். தமிழ்நாட்டில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதே அரிதாகிப்போய்விட்ட நிலையில் நூலகச் சூழலைக் குறித்துப் பேசுவது சங்கடமானதே. எனினும் புத்தக வாசிப்பும் அதற்கு இசைவான சூழலும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை என்பதை நாம் மறந்துவிடலாகாது.

வடகிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த நாடு லித்துவேனியா. சோவியத் ஒன்றியத்துடன் அந்த நாடு இருந்தபோது ஏற்பட்ட கல்விப் புரட்சி அந்த நாட்டின் நூலகங்களை இப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. நூலகக் கட்டிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, நூலகத்தில் பணிபுரிபவர்களையும் கட்டிடக் கலை நிபுணர்களையும் கலந்து பேசி வடிவமைப்பை உருவாக்கி நூலகங்களைக் கட்டியிருக்கிறார்கள். இவ்விரு பிரிவினரிடம் மட்டுமல்ல நூலகத்தைப் பயன்படும் வாசகர்களிடமும் கட்டிட அமைப்பில் என்ன வசதிகள் தேவை என்று கேட்கின்றனர். நூல்கள் மட்டுமின்றி காணொலி வசதிகளும், இணையதள இணைப்பும் உண்டு என்பதைச் சொல்லவே வேண்டாம். இப்படிப்பட்ட வசதிகளுடன் தமிழ்நாட்டில் எவ்வளவு பொது நூலகங்கள் இருக்கின்றன, அப்படியே இருந்தாலும் அவை முறையாகச் செயல்படுகின்றனவா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

தொலைக்காட்சி, இணையம், கைபேசியின் வரவுக்குப் பிறகு பொழுதுபோக்குக்காக நூல்களைப் படிக்க நூலகத்துக்கு வருகிறவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. ஆய்வு மாணவர்கள், தீவிர வாசகர்கள் என்று நூலகங்களுக்கு வருகிறவர்களைப் பட்டியலிட்டாலும் முன்பைவிட வாசகர்களின் வருகை பெருமளவில் குறைந்துவிட்டது என்பதே உண்மை. மின்விசிறி சுழலவில்லை, விளக்கு வெளிச்சம் போதவில்லை, குடிநீரில் வாடை வருகிறது என்ற சாதாரண புகார்களைக்கூட உடனே சரிசெய்ய முடியாத நிலையில்தான் நம்முடைய பெரும்பாலான நூலகங்கள் உள்ளன.

காற்றோட்டமாகவும், படிப்பதற்கு அயர்ச்சி தராத வகையிலான நாற்காலி, மேசைகளும் உள்ள நூலகங்கள் கிடைத்தாலே மனம் மகிழ்ந்துவிடுகிறது. லித்துவேனியா போன்ற நூலக வேட்கை கொண்ட நாடுகளின் நிலையை எட்ட இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்குமோ என்ற ஏக்கமும் ஏற்படுகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற விதிவிலக்கான ஒருசில பொது நூலகங்களைப் பாராட்டியாக வேண்டும். ஆனால், மற்ற பொது நூலகங்களோ பெரிதும் வருந்தத்தக்க விதத்தில்தான் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பொது நூலகங்களின் நிலை மிகவும் மோசமாகிக்கொண்டிருக்கிறது.

வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆட்சியர் அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுக் கட்டிடங்களைப் பார்க்கும்போதே ஏற்படும் பெருமிதமும் மகிழ்ச்சியும் நூலகங்களைப் பார்க்கும்போதும் ஏற்பட வேண்டும். நூலகங்கள் அறிவுக் கோயில்கள் என்பதால் அவையும் மாட்சியுடன் அமைய வேண்டும். தோற்றத்திலும் உள்ளீட்டிலும் பொது நூலகங்களை மேம்படுத்துவது என்பது பொறுப்பான ஆட்சியாளர்கள் கையில்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஆட்சியாளர்களைத் தற்போது தேட வேண்டியிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x