Published : 23 Sep 2017 10:12 AM
Last Updated : 23 Sep 2017 10:12 AM

தினந்தோறும் வளரும் தமிழ்: ஏன் இல்லை வரலாறு?

லகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ், நவீன காலகட்டத்தின் பல்வேறு நிலைகளுக்கேற்ப தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. தனது தனித்தியங்கும் தன்மையை விட்டுக்கொடுக்காததும் அதற்கொரு காரணம். காலம்தோறும் ஒவ்வொரு துறையிலும் புதுப்புதுச் சொற்கள் அறிமுகமாகின்றன. அதற்கேற்ற பொருத்தமான சொற்களை உருவாக்கவும், பயன்படுத்தவும் தமிழில் முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. எண்ணிக்கை அதிகமில்லை என்றாலும் அவ்வப்போது துறைசார்ந்த அகராதிகள் வெளியிடப்படுகின்றன. பாட நூல்களின் வழியாகப் புதிய தமிழ்ச்சொற்கள் புழக்கத்துக்கு வருகின்றன. எனினும் பொதுமக்களிடம் புதிய சொற்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு பத்திரிகைகளே பெரிதும் காரணமாக இருக்கின்றன.

தினந்தோறும் உலகின் பல மூலைகளிலிருந்தும் செய்திகள் வந்து குவிந்தபடியே இருக்கின்றன. பிற மொழிகளில் உருவாகும் புதிய சொல்லாக்கங்களின் வேகங்களுக்கு ஈடுகொடுத்துப் புதிய சொற்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை இதழாளர்களே முதலில் எதிர்கொள்கிறார்கள். தமிழ் இதழியல், செய்திகளோடும் கருத்துகளோடும் மட்டுமின்றி இலக்கிய ரசனையோடும் சேர்ந்தே வளர்ந்திருக்கிறது. மொழிநடையில் எளிமையையும் இனிமையையும் சேர்த்த இதழாசிரியர்கள் சொற்களின் உருவாக்கத்திலும் பயன்பாட்டிலும் மிகப் பெரிய பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள்.

தமிழ் உரைநடையை வளர்த்தெடுத்த பத்திரிகையாளர்களில் பாரதியார், சுப்பிரமணிய ஐயர், டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன், கல்கி கிருஷ்ணமூர்த்தி, குத்தூசி குருசாமி, அண்ணா, மு. கருணாநிதி, ம.பொ. சிவஞானம், சி.பா. ஆதித்தனார், ஜெயகாந்தன், எஸ்.ஏ.பி. அண்ணாமலை, ஐ. சண்முகநாதன், உள்ளிட்ட பலரும் பெரும் பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள். அரசியல், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம், சமூகவியல், ஆன்மிகம், விளையாட்டு, புனைகதைகள், வரலாறு, மருத்துவம் என்று துறைதோறும் புதிய சொற்கள் அறிமுகமாகிப் பயன்பாட்டில் தொடர்கின்றன. அரசு ஆதரவு இல்லாமலும், பல்கலைக்கழக உதவி இல்லாமலும் பத்திரிகையாளர்களின் தொடர்ச்சியான இயக்கத்தாலும் தன்னலமில்லாத தியாகத்திலுமே இது சாத்தியப்பட்டிருக்கிறது.

தமிழ் வளர்ச்சித்துறை, பல்கலைக்கழகங்கள், அரசுப் பாடநூல் தயாரிப்புக் குழு ஆகியவற்றுக்கு இடையிலும் பத்திரிகையாளர்களுடனும் தொடர்புகள் கிடையாது. பேச்சுத் தமிழ், உரைநடைத் தமிழ் என்பதைப் போல பத்திரிகைத் தமிழும் பாடப்புத்தகத் தமிழும் இரண்டு தண்டவாளங்களாகப் பிரிந்து கிடக்கின்றன. 100 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஏதேனும் ஒரு தமிழ்ப் புத்தகத்தை எடுத்துப் படிக்கும் இன்றைய வாசகருக்கு மொழிநடையிலும் பயன்பாட்டிலும் எவ்வளவு தொலைவை எளிதாகக் கடந்துவந்திருக்கிறோம் என்பது புரியும்.

இதழாசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் கூட்டுப் பங்களிப்பாலேயே இந்த மாற்றம் சாத்தியப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாற்றங்கள் குறித்து நம்மிடம் அவ்வளவாகப் பதிவுகள் இல்லை என்பது வேதனைக்குரியது. மூத்த இதழாசிரியர்களும் எழுத்தாளர்களும் எழுதிய கட்டுரைகளில் இத்தகைய வரலாற்றுத் தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கின்றன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு, 20- ம் நூற்றாண்டில் தமிழ் கடந்து வந்திருக்கும் பாதையைப் பற்றியும் அதில் இதழியலின் பங்களிப்பு பற்றியும் வரலாறு எழுதப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x