Last Updated : 20 Nov, 2016 12:30 PM

 

Published : 20 Nov 2016 12:30 PM
Last Updated : 20 Nov 2016 12:30 PM

கலை முகம்:அல்போன்சோ அருள் தாஸ் - ஒளி ஊடுருவும் ஓவியங்கள்

நான் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, அல்போன்சோ அருள் தாஸ்தான் முதல்வர். பெங்களூருவில் பிறந்தவர். சென்னை ஓவியக் கல்லூரியில் பயிலும்போது, தமிழகத்தின் முக்கிய ஓவியர்களால் வழிநடத்தப்பட்டவர். ஐரோப்பிய மறுமலர்ச்சி, நவீன கால ஓவியர்களின் படைப்புகளில் ஆர்வமும் தூண்டுதலும் பெற்றவர். இந்திய மரபோவியங்கள் மீதும் கிழக்காசிய ஓவிய மரபு மீதும் நம்பிக்கை கொண்டவர். சென்னை ஓவியக் கல்லூரியில் வண்ணக் கலைத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றி முதல்வராக ஓய்வு பெற்றவர். கோபம், மூர்க்கம், விரக்தி, கடுஞ்சொல் அற்ற மனநிலையில் எப்போதும் இருப்பவர்.

சமூக அவலங்கள், வரலாற்றுப் பிழைகள் மீது ஆழ்மனதில் இருக்கும் கோபத்தை மிக எளிமையாகப் பதற்றமின்றி வெளிப்படுத்துவார். அது அவருடைய கித்தானிலும் உறைந்திருக்கும். மாணவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர். நியாயமான விமர்சனங்களுடனும் புரிதலுடனும் அவர்களை வழிநடத்துபவர். சமூகத்தில் ஓவியர்களின் பங்களிப்பு குறித்த புரிதலின்றி, அவர்களின் முக்கியத்துவம், அவர்களின் தேவைக்கான அக்கறையின்றிச் செயல்படும் அமைப்புகளின் மீது கடும் கோபமும் விமசர்னங் களும் கொண்டவர். வண்ணம், அடுக்கு முறை, அதன் பரப்பு என கேன்வாஸ் முன்பு தீர்மானமாக அமர்வது, அதன் போக்குக்குத் தன்னை ஒப்புக்கொடுக்காது தன் விசைக்கு அதைத் திசை திருப்பிக்கொள்வது என்பது இவருடைய ஆளுமை.

அந்தரத்தில் மிதக்கும் ஓவியம்

மிக முக்கியமான ஓவியராக அறியப்பட்டிருந்த அவர், ஒருநாள் எங்கள் வகுப்பறைக்கு வந்து அரையுருவப் படம் ஒன்றை வரைந்து காண்பித்தார். அப்போதுதான் அவரை முதலில் பார்த்தேன். எங்கள் வகுப்பு ஆசிரியர் அருளரசனும் உடனிருந்தார். கரித்துண்டால் நியூஸ் பிரிண்ட் பேப்பரில் வரையப்பட்ட அவ்வோவியம் சட்டமிடப்பட்டு இன்றும் முதலாம் ஆண்டு வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ளது. கண்களிலிருந்து ஆரம்பித்த அவ்வோவியம் ஆரம்பமும் முடிவுமற்று அந்தரத்தில் கரைந்து மிதந்துகொண்டிருக்கும் வித்தையைக் கைவரப் பெற்றவர் அல்போன்சோ.

அல்போன்சோவின் படைப்புகளை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம்: பயிற்சி உருவப் படங்கள், மாதிரி உருவப் படங்கள். பயிற்சி உருவப் படங்கள் பெரும்பாலும் மாணவர்களின் பயிற்சிக்காக உருவானவை. தனிப்பட்ட உருவப் படங்கள் ஆர்டரின் (order) பேரில் வரையப்பட்டவை. ரியலிஸ்டிக் (Realistic) எனப்படும் யதார்த்த பாணி உருவப் படங்களில் இவருடைய வண்ணமும் செய்முறையும் சென்னை ஓவியக் கல்லூரியில் தனிச்சிறப்பு கொண்டவை. அதீத உயிரோட்டத்துடன் கூடிய, மேற்கத்திய வண்ணம் தாங்கிய, முரட்டுக் கோடுகளற்ற பல அடுக்கு வண்ணப் பகிர்வுடன் மிதந்துகொண்டிருக்கும் அல்போன்சோவின் ஓவியப் பரப்பு தனிக் கவனம் கொண்டு ஆராயப்பட வேண்டிய ஒன்று.

தனிப்பட்ட படைப்பு என்பது முற்றிலும் வேறு வகை மையைச் சார்ந்தது. சென்னைக் கல்லூரியின் மரபு எனப்படும் கோடுகள் வீரியத்தோடும் நளினத்தோடும் புரிதலோடும் குழப்பத் தடங்கள் அற்று மிக இலகுவாக இவருடைய கித்தானில் குடியேறியுள்ளன. குறைந்த வண்ணங்களைக் கொண்டு இயங்கும் கேன்வாசின் பரப்பில், ஒளியின் வண்ணங்களைப் பிரதிபலிக்கும் தளத்தின் மீது, நெய்யப் படும் கோட்டுத் துண்டுகளை இணைக்கும் காரணியாகவே வண்ணங்கள் வினையாற்றுகின்றன.

படைப்புகளாகும் கோடுகள்

பூமியின் மீது நிகழ்த்தப்படும் ஆதிக்கம், அதன் பிரத்தியேகமான ஒளியின் கருக்கொண்டு விளையும் உயிரின் இயக்கம், உற்பத்தி, மறு உற்பத்தி, சுழற்சி எனத் தொடர் நிகழ்வின் புள்ளிகளை இணைக்கும் கண்ணி களைக் கொண்டவை இவரது கோடுகள். அவை படைப்புகளாக மாறும்போது கடவுள், மனிதர்கள், மற்ற உயிரினங்கள் ஆகிய அனைத்தும் ஒரே தளத்தில் நிறுவப்படும் மதிப்பீடுகளாக மாறுகின்றன. கடவுள்கள் உறைந்த தன்மையுடனும் மனிதர்கள் நிகழ்காலத்தை இயக்குபவர்களாகவும் பறவைகள் காலமற்ற செய்தியைக் கடத்துபவர்களாகவும் அமைந்துகொள்கிறார்கள்.

இந்திய மரபுச் சிற்பங்கள், அச்சிற்பங்கள் உருவான பாறையின் மேலுள்ள நுட்பமான சிறு துளைகளில் ஊடுருவும் ஒளி, அதன் அழகியல், அடுக்கு முறை களின் தூண்டுதலாலேயே தன்னுடைய கோடுகள் பிறக் கின்றன என்கிறார் அல்போன்சோ. கிழக்காசிய நாடுகளின் வண்ணப்பூச்சு முறையின் ஒளி ஊடுருவும் தன்மை இவருடைய கேன்வாசில் முக்கிய பாதிப்பை நிகழ்த்தி யுள்ளது. உலகத்தில் உள்ள எல்லா இனக் குழுக்களுக் குள்ளும் கலைப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இசை, ஓவியம், நாடகம் முதலிய கலைகளின் செயல்பாடுகள் இந்தியாவில் நடந்துள்ளன. அதற்கான முழுமையான வரலாறு எழுதப்பட வில்லை, மேலைநாட்டுக் கலை வரலாற்றுக்குள் நம்மைச் சுருக்கிக்கொண்டோம் எனும் ஆதங்கம் இவருக்கு உண்டு.

தமிழகத்தின் முதன்மை ஓவியராக வாழ்ந்து கொண்டிருக்கும் அல்போன்சோவின் சிறப்புக் கண்காட்சி ஒன்றை லலித் கலா அகாடமி ஏற்பாடு செய்ய வேண்டும். அது மாணவர்களுக்கும் ஓவியர்களுக்கும் பெரும் தூண்டுதலாக அமையும்.

- க.நடராஜன், ஓவியர், சிற்பி. தொடர்புக்கு: natsviolet@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x