Published : 26 Dec 2021 07:33 AM
Last Updated : 26 Dec 2021 07:33 AM

புத்தகங்கள் இருக்கும் வரை அச்சுத் தொழில்நுட்பம் இருக்கும்: அச்சுத் தொழில் நுட்பர் கல்யாணசுந்தரம் நேர்காணல்

விளம்பரத் துறையில் பயிற்சி பெற்று, அதிநவீன அச்சகத்தை கிண்டி தொழிற்பேட்டையில் நடத்திவருபவர் எஸ்.கல்யாணசுந்தரம். அச்சுக் கோக்கும் தொழில்நுட்பத்திலிருந்து ஆஃப்செட் தொழில்நுட்பத்துக்குத் தொழில் மாறியதை நேரடியாகக் கண்டவர். தனது அச்சுக்கூடத்தில், 2022-ம் ஆண்டுக்கான வண்ணக் காலண்டர்கள் தயாராகி வரும் சத்தங்களினூடாக அவரிடம் அச்சுத் தொழில்நுட்பம் மாறிவந்திருப்பதைப் பற்றிப் பேசியதிலிருந்து...

அச்சுக் கோப்பிலிருந்து ஆஃப்செட்டுக்கு அச்சுத் தொழில்நுட்பம் மாற்றம் கண்ட பின்னணியை உங்கள் அனுபவத்திலிருந்து சொல்லுங்கள்?

1960-களில்தான் அச்சுத் தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் தொடங்கின. அந்தச் சமயத்தில்தான் நானும் விளம்பரத் துறை சார்ந்து அச்சுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினேன். அப்போது அச்சுக் கோத்து அடிக்கும் லெட்டர் பிரெஸ்தான் பரவலாக இருந்தது. காரீய உலோக அச்சுக்களைக் கோத்து, மிதியச்சு இயந்திரத்தில் வைத்து அச்சடிப்பார்கள். மின்சாரத்தில் இயங்கும் இயந்திரங்களும் உபயோகத்தில் இருந்தன. பெரும்பாலும் ஒரு வண்ணத்தில்தான் அச்சிடும் வழக்கம் இருந்தது. நான்கு வண்ணத்தில் அச்சடிக்க வேண்டுமானால், அச்சுப்படக் கட்டைகள் (ப்ளாக்குகள்) எடுத்து அடிப்போம்.

துத்தநாகத்தில் அது உருவாக்கப்பட்டும் அதை மரத்தில் மவுன்ட் செய்துவிடுவோம். நீலம், குங்குமம், மஞ்சள், கருப்பு இவை நான்குதான் அடிப்படை நிறங்கள். இவற்றிலிருந்து பல்வேறு சதவீதக் கலவைகளில் எத்தனையோ ஜாலங்களை இன்னும் செய்துகொண்டிருக்கிறோம். அச்சுப்படக் கட்டைகளை உருவாக்குபவர்களில் கலைநேர்த்தியும், வேதியியல் தொழில்நுட்பத்தில் வல்லுநர்களும் அப்போதும் அரிதாகவே இருந்தனர். அதனால் அவர்களின் வேலைக்கும் மவுசு இருந்தது.

அச்சு இயந்திரங்கள் எங்கிருந்து வருகின்றன?

அன்றிலிருந்து இன்று வரை அச்சு இயந்திரங்களைத் தயார்செய்வதில் வல்லவர்களாக ஜெர்மானியர்களே இருக்கின்றனர். ஒரு காலகட்டத்தில் அவர்களுக்குப் போட்டியாக ஜப்பானியர்கள் அச்சு இயந்திரங்களை உற்பத்திசெய்தாலும் இன்னமும் ஜெர்மனிதான் முன்னணியில் உள்ளது. ஏனெனில், உலகத்திலேயே உலோகவியலில் ஜெர்மானியர்களே வல்லவர்களாக உள்ளனர். அவர்களது இயந்திரங்களில் உள்ள பகுதிகளை எடுத்துக்கொண்டுபோய் வெட்டி எவ்வளவுதான் ஆய்வுசெய்தாலும், அந்த இயந்திரங்களின் நீடித்த தரத்துக்கான ரகசியம் இன்னும் அறியப்படாமல் இருக்கும் அளவுக்கு அவர்கள் தேர்ந்தவர்கள்.

ஜெர்மானியர்கள் உருவாக்கித்தரும் ஹைடல்பெர்க் இயந்திரம் 40 ஆண்டுகளுக்குப் பிறகும் புதிய இயந்திரத்தைப் போல அச்சுத் தரத்தைக் கொடுக்கக்கூடியது. அதனால்தான் ஹைடல்பெர்க் இயந்திரத்தை நாங்கள் கருப்புத் தங்கம் என்று சொல்கிறோம். பழைய உருளை அச்சு இயந்திரமாக இருந்தாலும் சரி, அதற்குப் பிறகு வந்த ஆஃப்செட் நவீன அச்சு இயந்திரங்களாக இருந்தாலும் சரி, ஜெர்மனிதான் முன்னணியில் உள்ளது.

நீங்கள் விளம்பரத் துறையில் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் இருந்த அச்சுத் தேவைகள் குறித்துச் சொல்லுங்கள்...

ரசீதுப் புத்தகங்கள், நோட்டீஸ்கள், கையேடுகள் (ப்ரௌஷர்கள், கேட்லாகுகள், துண்டுப்பிரசுரங்கள், நாட்குறிப்பேடுகள் (டைரிகள்), ஆண்டறிக்கைகள், நாட்காட்டிகள், திரைப்பட/ அரசியல் சுவரொட்டிகள், கடைகளில் விளம்பரமாக வைக்கும் சுவரொட்டிகள், மருந்து, உணவுப் பொருட்களை வைக்கும் டப்பாக்கள் ஆகியவற்றைத் தயாரித்தோம்.

ஆஃப்செட் தொழில்நுட்பம் எப்போது அறிமுகமானது?

1967-வாக்கில் சென்னையில் ஆஃப்செட் தொழில்நுட்பம் அறிமுகமானது. ஒற்றை வண்ணத்தில் அச்சிடும் இயந்திரம்தான் முதலில் வந்தது. ஃபிலிமிலிருந்து துத்தநாகத் தகட்டில் மாற்றி அச்சடிப்பார்கள். இரண்டு, நான்கு என்று ஆகி இப்போது எட்டு வண்ணங்களை அச்சிடும் இயந்திரம் வரை வந்துவிட்டது. மெட்டாலிக் பிரிண்டிங், முப்பரிமாண அச்சு வரை வளர்ந்துகொண்டிருக்கிறோம்.

லெட்டர் பிரெஸ்ஸுக்கும் ஆஃப்செட் பிரெஸ்ஸுக்கும் தொழில்நுட்பம், நேர்த்தி சார்ந்த வித்தியாசம் என்ன?

ஒரு வண்ணத்தை மட்டும் பயன்படுத்துவது போதுமென்றால் உங்கள் நூறு சதவீதம் படைப்பூக்கத்தையும் லெட்டர் பிரெஸ்ஸில் வெளிப்படுத்த முடியும். ஒரு வண்ணத்துக்கு மேல் என்று ஆகிவிட்டால், நாம் நினைப்பது போன்ற வெளியீட்டைத் தருவது சிரமம். அதேநேரத்தில், குறைந்த நபர்களைப் பயன்படுத்தி, குறுகிய அவகாசத்தில் அதிக எண்ணிக்கையை ஆஃப்செட் அச்சுத் தொழில்நுட்பம்தான் உத்தரவாதப்படுத்தியது.

அச்சுத் தொழில்நுட்பத்தோடு ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு அக்காலகட்டத்தில் இருந்த தொடர்பைச் சொல்லுங்கள்?

ஒரு துண்டறிக்கையோ, ஒரு விளம்பரத் தயாரிப்புக்கான கேட்லாகோ செய்வதற்கு அப்போது ‘இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபர்’ என்ற தனிப்பிரிவினரே இருந்தனர். அவர்கள் படைப்பாளிகளாகவே மதிக்கப்பட்டனர். இப்போது அவர்கள் இல்லை. புகைப்படக் கலை எல்லாருக்கும் உரியதாக மாறிவிட்டது. சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய ஊர்களில் அவர்கள் இருந்தனர். மிகத் தரமான புகைப்படங்களை எடுப்பவர்கள் மும்பையிலிருந்து வரவழைக்கப்படுவார்கள். ஒரு திரைப்பட நட்சத்திரத்துக்குக் கதையின் சூழலைச் சொல்வதைப் போல, அந்தத் தயாரிப்பு பற்றி அவர்களிடம் விளக்க வேண்டும். மூன்று நாட்கள் அவர்கள் வேலை செய்வார்கள். ஒரு பொருளை எல்லாரிடமும் கொண்டுசேர்க்கும் வகையில் கவர்ச்சிகரமான வாசகங்களை எழுதும் காப்பி ரைட்டர்ஸும் இருந்தனர்.

இந்தியாவில் எந்தெந்த ஊர்கள் அச்சுத் தொழிலில் முன்னணியில் இருந்தன?

சென்னை, சிவகாசி, மும்பை, ஹைதராபாத், லக்னோ, பரோடா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய நகரங்களைச் சொல்வேன். மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உற்பத்தியின் மையமாக குஜராத் இருப்பதால், அதற்கான பேக்கேஜிங் பொருட்களைத் தயாரிப்பதில் இன்னும் முன்னணியில் குஜராத்தே இருந்துவருகிறது.

விளம்பரம் சார்ந்த அச்சுத் தொழிலின் பொற்காலம் என்று எந்தக் காலகட்டத்தைச் சொல்வீர்கள்?

1970 தொடங்கி 1990 வரை சொல்வேன். அப்போதிருந்த படைப்பூக்கமும் ஆளுமைகளும் வகைமையும் இன்று கிடையவே கிடையாது.

அச்சு நேர்த்தியைப் பொறுத்தவரை, ஆஃப்செட் தொழில்நுட்பத்துக்கு முன்னர், குறிப்பாக சென்ற நூற்றாண்டின் முதல் பாதியில்தான், பொதுவாகச் சிறப்பான தரத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது... உண்மையா?

நான் அந்தக் கருத்தை ஒப்புக்கொள்கிறேன். புத்தகங்களாக இருந்தாலும் சரி, பேக்கேஜிங் பொருட்களாக இருந்தாலும் சரி, அப்போதிருந்த மையின் தரம் வேறு; செயல்பட்ட மனிதர்களின் சிரத்தையும் அதிகம். அரசுப் பாடநூல்களின் அட்டையில் இருக்கும் சாதாரணப் பச்சை நிறம் கூட 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் மாறாமல் உள்ளது. ஏனெனில், அப்போது காய்கறியிலிருந்து எடுக்கப்பட்ட மையைப் பயன்படுத்தினோம்.

இப்போது வேதிப்பொருட்களிலிருந்து எடுக்கப்பட்ட மையைப் பயன்படுத்துகிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஐந்து வருடங்கள்கூட ஒரு புத்தகத்துக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. ஏனெனில், ஆஃப்செட் இயந்திரத்தில் பயன்படுத்தும் மையின் உத்தரவாதம் டிஜிட்டல் அச்சு இயந்திரத்தில் இல்லை. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றுத் தாளாகத்தான் இருக்கும். ஆனால், முன்பைப் போல, நிறைந்த தரத்துடன் அதிக நாட்கள் ஒரு புத்தகம் இருக்க வேண்டும் என்று யாரும் கருதுவதில்லை. விலை குறைவாக இருக்கிறதா, அதையே செய்துவிடுங்கள் என்று சொல்பவர்களே அதிகம்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பிறகு, என்னென்ன பொருட்களுக்கான அச்சுத் தேவைகள் குறைந்திருக்கின்றன?

ஒவ்வொரு தனியார் நிறுவனமும் ஆண்டறிக்கைகள் தயாரிப்பது வழக்கமாக இருந்தது. அது கிட்டத்தட்ட இல்லை இப்போது. அவர்கள் அதை அப்படியே தயார்செய்து நிறுவன இணையதளத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். ஒரு எண்ணெய் நிறுவனம் புதிதாக ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்துகிறதென்றால், அதை விற்கும் கடைகளில் தோரணமாகச் சுவரொட்டிகளைக் கட்டி அந்தப் பொருட்களை விற்கும் நிலை இருந்தது. இப்போது கடைகளின் பரப்பளவே குறைந்துவிட்டதால், அந்தச் சுவரொட்டிகள் அடிப்பது கிட்டத்தட்ட நின்றுவிட்டது. சினிமா சுவரொட்டிகள் அடிப்பது ஒரு சடங்காக மிகக் குறைந்த அளவில் பெருநகரங்களில் ஆகிவிட்டது. சிறுநகரங்களில் இன்னமும் சுவரொட்டிகளுக்கு மரியாதை உள்ளது.

அச்சுத் தொழிலின் தேவை நீடித்திருக்கும் தொழில்களைச் சொல்லுங்கள்?

புத்தகங்களும் பேக்கேஜிங் தொழிலும் இருக்கும்வரை அச்சுத் தொழிலின் தேவை இருக்கும். அதற்கு உடனடியாக எந்த மாற்றும் வராது என்றே கருதுகிறேன். உணவுப் பொருட்கள், மருந்துகள், நுகர்வுப் பொருட்கள் என எல்லாவற்றையும் அடைக்கும் டப்பாக்கள் தரமாகவும், கவர்ச்சியாகவும், வசீகரமாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இயற்கை உணவுப் பொருட்களைப் பொதி செய்து விற்கும்போதும் மிக ஈடுபாட்டுடன் அந்த பேக்கேஜிங்கை வடிவமைக்க வேண்டிய தேவை உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை நாள்காட்டிகள் மீதான வசீகரம் இன்னும் மக்களுக்குக் குறையவே இல்லை.

- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x