Published : 09 Oct 2021 06:43 AM
Last Updated : 09 Oct 2021 06:43 AM
முதல்வர்: இலக்கிய உலகின் நண்பர்!
தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்போருக்கும் இலக்கிய உலகுக்கும் இடையில் பெரிதும் தொடர்பு இல்லாமல்தான் இதுவரை இருந்தது. இவர்களை அவர்கள் ஏற்பதில்லை, அவர்களை இவர்கள் ஏற்பதில்லை என்ற சூழல்தான் நீடித்துவந்தது. ஆனால், சமீப காலமாக இந்த இடைவெளியைக் குறைக்கும் முயற்சிகள் இரு தரப்பிலிருந்தும் மேற்கொள்ளப்படுவது ஆரோக்கியமான விஷயம். கி.ராஜநாராயணன், இரா.இளங்குமரனார் ஆகியோரின் மறைவின்போது அரசு மரியாதை செலுத்தப்பட்டது ஒரு நல்ல தொடக்கம் என்றால் தி.ஜானகிராமன் நூற்றாண்டையொட்டி ‘ஜானகிராமம்’ என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டது பலராலும் வரவேற்கப்பட்டது. தற்போது எம்.வி. வெங்கட்ராமின் நூற்றாண்டையொட்டி ‘என் இலக்கிய நண்பர்கள்’ (டிஸ்கவரி பதிப்பக வெளியீடு), ‘அரும்பு’ (கோவை விஜயா பதிப்பக வெளியீடு), ‘ஒரு பெண் போராடுகிறாள்’ (போதிவனம் வெளியீடு) ஆகிய நூல்களை முதல்வர் நேற்று கோட்டையில் வெளியிட்டிருக்கிறார். மேலும் தொடரட்டும் இந்த நல்லுறவு!
வாரம் ஒரு புத்தகம்
பெருந்தொற்றுப் பரவல் தடுப்புக்காக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறந்திருக்கிற நேரத்தில், மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை வளர்த்தெடுக்கும் வகையில் ‘வாரம் ஒரு புத்தகம்’ என்ற செயல்பாட்டை ஊக்கப்படுத்திவருகிறது, கும்பகோணம் அறிஞர் அண்ணா மேனிலைப்பள்ளி. அரசு பொது நூலக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்துடன் சேர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தச் செயல்பாட்டின் கீழ், மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் தாங்கள் வாசிக்கும் புத்தகத்தைப் பற்றி கட்டுரைகள் எழுதுகிறார்கள். மேலும், வாரம் ஒரு பாடவேளை ஒதுக்கப்பட்டு, அதில் மாணவர்கள் தாங்கள் வாசித்த புத்தகத்திலிருந்து தங்களுக்குப் பிடித்த ஒரு பக்கத்தை வாசிக்கிறார்கள். மற்ற பள்ளிகளுக்கும் இது ஒரு முன்னுதாரணமாகட்டும்.
புரவி இதழுக்குக் கைகொடுங்கள்!
புத்தக வாசிப்பை ஒரு இயக்கமாக மேற்கொண்டுவரும் வாசகசாலை நண்பர்களால் நடத்தப்படுவது ‘புரவி’ இதழ். மிகவும் தடுமாற்றமான கரோனா காலகட்டத்தில் அச்சு சிற்றிதழைத் தொடங்குவதற்கு மிகவும் துணிவு தேவை. இந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்ட ‘புரவி’ இதழ் ஒவ்வொரு மாதமும் ஒருவருக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. தற்போதைய இதழ் பிரான்சிஸ் கிருபாவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளையும் நேர்காணல்களையும் இந்த இதழ் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. ஆர்வமுள்ள நண்பர்கள் சேர்ந்து நடத்துகிறார்கள் என்பதால், இந்த இதழ் வாசகர்களின் ஆதரவைக் கோரிநிற்கிறது. இதழைப் பெறவும் சந்தா தொடர்புக்கும்: 9942633833
விலையில்லா வெளியீடுகள்
கும்பகோணத்திலிருந்து வெளிவரும் ‘காவிரி’ இதழ், நகுலன் நூற்றாண்டையொட்டி அவரது ‘அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி’ நூலை விலையில்லாப் பதிப்பாக வெளியிட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தை காவிரி இதழின் வலைப்பூவில் (www.kaavirimagazine.blogspot.com) தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பிரான்சிஸ் கிருபாவின் ஒட்டுமொத்தக் கவிதைகளையும் ‘சாந்தாகுரூஸ்’ என்ற தலைப்பில் ஜனவரியில் விலையில்லாப் பதிப்பாக வெளியிடவிருக்கிறது ‘தமிழினி’ பதிப்பகம். தனது மொத்தக் கவிதைகள் திரட்டுக்கு ‘சாந்தாகுரூஸ்’ என்று பிரான்சிஸ் கிருபா பெயரிட விரும்பியதாக ‘தமிழினி’ மின்னிதழின் ஆசிரியர் கோகுல் பிரசாத் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்திருக்கிறார். பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’ நாவலின் ஒரு பகுதியில் ‘சாந்தாகுரூஸ்’ பற்றி ஒரு இடம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் உயிர்மை!
உயிர்மை பத்திரிகையின் அச்சுப் பதிப்பு மீண்டும் வருகிறது. மனுஷ்ய புத்திரன் 2003-ல் தொடங்கிய இந்த இதழில் தமிழின் முக்கியப் படைப்பாளர்கள், கட்டுரையாளர்கள் பங்களித்துவந்தனர். 17 ஆண்டு காலம் தொடர்ச்சியாக, மாத இதழாக வெளிவந்த உயிர்மை, கரோனா சூழலின் தாக்கத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நின்றுபோனது. அச்சு இதழ் நின்றுபோனாலும் உயிர்மை இணைய இதழாகத் தொடர்ந்து வெளிவந்தது. இந்தச் சூழலில், தற்போது உயிர்மை அச்சு இதழை மீண்டும் கொண்டுவந்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன். இது உயிர்மையின் 200-வது இதழ் என்பது கூடுதல் சிறப்பு. தற்போதைய இதழில் அ.முத்துலிங்கம், அம்பை, கலாப்ரியா, தேவதச்சன், ஜெயமோகன், இமையம், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், சுப்ரபாரதிமணியன், சுபகுணராஜன், தியடோர் பாஸ்கரன், இந்திரன், ராஜன் குறை, சிவபாலன் இளங்கோவன், அ.முத்துக்கிருஷ்ணன், ஷாஜி, யுவகிருஷ்ணா, ந.முருகேசபாண்டியன், ஜி.ராமானுஜம், பா.ராகவன், ஸ்ரீவள்ளி, பாதசாரி, இசை, தமிழச்சி தங்கபாண்டியன், ஜெ.ரோஸ்லின், கதிர்பாரதி, பெரு.விஷ்ணுகுமார், மௌனன் யாத்ரிகா, மேகவண்ணன், ஆத்மார்த்தி, கே.வி.ஷைலஜா, அனுராதா ஆனந்த் உள்ளிட்டோருடன் மனுஷ்ய புத்திரனும் பங்களிப்பு செய்திருக்கிறார். இன்னும் நெடுங்காலம் உயிர்மை உயிர்ப்புடன் இருக்க வாழ்த்துகள்! இதழைப் பெறவும் சந்தாவுக்கும் தொடர்புக்கு: 90032 18208
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT