Published : 04 Sep 2021 05:48 AM
Last Updated : 04 Sep 2021 05:48 AM
ரவிக்குமார்-60
எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் 60 வயதைக் கடந்ததை முன்னிட்டு, ‘ரவிக்குமார்-60’ என்ற இணையவழி நிகழ்வு நாளை (ஞாயிறு) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. ஆனந்த விகடன் ஆசிரியர் தி.முருகன், பத்திரிகையாளர் சமஸ், பேராசிரியர் ஜெ.பாலசுப்பிரமணியம், கவிஞர் சிவசங்கர் எஸ்.ஜே., பத்திரிகையாளர் செந்தூரன், பத்திரிகையாளர் சிவராஜ் பாரதி, பேராசிரியர் க.சி.பழனிக்குமார் ஆகியோர் ரவிக்குமாரின் வெவ்வேறு பரிமாணங்களைப் பற்றிப் பேசவிருக்கிறார்கள். இந்த நிகழ்வை மதுரை அம்பேத்கர் படிப்பு வட்டம் ஒருங்கிணைக்கிறது. நிகழ்வுக்கான ஜூம் ஐடி: 859 3465 9115, கடவுச்சொல்: ASCMDU.
திராவிடக் களஞ்சியம்
தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கைகளில் பெருங்கவனத்தை ஈர்த்திருக்கிறது திராவிடக் களஞ்சியம் குறித்த அறிவிப்பு. கூடவே விமர்சனங்களையும். கால்டுவெல் தொடங்கி சம காலம் வரையிலான திராவிடக் கருத்தியல் குறித்த ஆய்வுகளின் தொகுப்பாக திராவிடக் களஞ்சியம் வெளிவரவிருக்கிறது. மொழியியல், வரலாறு, தொல்லியல், பண்பாட்டு மானிடவியல், சமயவியல், மெய்யியல், அரசியல் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறவுள்ளன. சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து வெளியிடுவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அறுபதுகளிலேயே ‘மர்ரே’ சாக்கை ராஜம், சாந்தி சாதனா அறக்கட்டளையை நிறுவி எஸ்.வையாபுரி, கி.வா.ஜகந்நாதன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் முதலான தமிழறிஞர்களைக் கொண்டு சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து வெளியிட்டுள்ளார். இன்னும் அந்நூல்கள் மறுபதிப்பில் உள்ளன. செய்த வேலையை மீண்டும் செய்ய எதற்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு என்ற கேள்வியும் தமிழ் வளர்ச்சித் துறையை எதிர்நோக்கியிருக்கிறது.
புத்தகக் காட்சி
ராஜபாளையம் புத்தகக்காட்சி: மதுரை மீனாட்சி புக் ஷாப் நடத்தும் மாபெரும் புத்தகக்காட்சி ராஜபாளையத்தில் 28.08.21 அன்று தொடங்கியது. இந்தப் புத்தகக்காட்சி 13.09.2021 வரை நடக்கிறது. இடம் - காந்தி கலை மன்றம், ராஜபாளையம். நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. ‘இந்து தமிழ் திசை’யின் வெளியீடுகள் உட்பட அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT