Last Updated : 09 Feb, 2016 10:05 AM

 

Published : 09 Feb 2016 10:05 AM
Last Updated : 09 Feb 2016 10:05 AM

கதாநதி 5: ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா - மாபெரும் வாழ்நாள் போராளி

குழந்தை ஆணாகப் பிறந்திருக்கிறது என்பதில் அப்பாவுக்கு பெரும் மகிழ்ச்சி. இரண்டு பெண் களுக்குப் பிறகு பிறந்த ஆண் சிங்கம். முருகன் அருளால் பிறந்ததால் சரவணன் என்று பெயர் சூட்டப்பட்டது. மகனை கலெக்டராக்குவது என்று அப்போதே தீர்மானித்துவிட்டார் அப்பா. இந்தியாவில் மூடக் கருத் துகள் கர்ப்பத்திலேயே தாயின் வயிற்றுக்குள் எப்படியோ சென்று சேர்ந்துவிடுகின்றன. அதில் ஒன்று ஆண் குழந்தை அருமை என்பதும்; ஆண் குழந்தை வரம், பெண் குழந்தை சாபம் என்பதும்.

சரவணன் 1982 மார்ச் 25-ல் பிறந்தான். ஆறு வயதில் தன் மஞ்சு அக்காவின் பாவாடையை அணிந்துகொண்டு ‘நான் ராஜா மகள் / புது ரோஜா மலர் / என தாசை நிறைவேறுமா’ பாடலுக்கு ஆடத் தொடங்கினான். சினிமா பெண்களின் அழகும் இவற்றோடு பாவாடை, மை டப்பா, வளையல்கள், பொட்டு, ஆபரணங்கள் எல்லாம் சரவணனைக் கவர்ந்திருக்கின்றன. அதாவது, சரவ ணன் தன் சுயத்தை அடையாளம் கண்டு விட்டான். கதவைச் சாத்திக்கொண்டு, ‘‘தனிமை கொடுக்கும் பயம் கலந்த சுதந் திரத்தில் என்னை ஒரு முழுமையான பெண்ணாக மட்டுமே நினைத்துக் கொள்ள மிகவும் விரும்பினேன். நான் ஒரு பெண். துரதிருஷ்டவசமாக உலகம் என்னை ஆண் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது’’ என்று பின்னால் எழுதுகிறான் சரவணன்.

பள்ளிக்கூட வாழ்க்கையில் சக மாணவர்களால் அவன் பட்ட துன்பமும் அவமானமும் கொடுத்த பயத்தோடு கல்லூரியில் சேர்கிறான். மூன்றாவது ஆண்டில் கல்லூரியின் சார்பாக நடன நிகழ்ச்சிக்குப் பெயர் கொடுத்து சக மாணவர்களுடன் புறப்படும் சரவணன், ஒரே அறையிலேயே படுக்க வேண்டி வருகிறது. இம்மானுவேல் என்ற முரட்டு மாணவன், குடித்திருந்தவன் இவனை சீண்டுகிறான். போர்த்திக் கொண்டு ஒடுங்கியபடிப் படுத் =திருக்கிற இவனது போர்வையை விலக்கி சிகரெட்டால் காலில் சூடு வைத்துவிடுகிறான் அவன். அலறி யடித்து எழுந்த சரவணனைப் பார்த்து எல்லோரும் சிரித்துக் கொண்டிருக் கிறார்கள்.

இந்தச் சமூகத்தின் பிரதிநிதி அவன். அந்தச் சூடு வைத்தவன் பார்வையாலும் சொற்களாலும் சமூகம், திருநங்கைகளைத் தொடர்ந்து இம்சித்துக் கொண்டே இருக்கிறது. கண்களில் நீர் வற்றும்வரை அவர்களை அழவைக்கிறது. அற உணர்வையும் . பெண் தன்மை கூடுதலாகச் சரவணன் பிறந்தது அவன் குற்றமா?

‘லிவிங் ஸ்மைல்’ வித்யா, சரவண னாக இருந்து வித்யாவான தன் வர லாற்றை ‘நான் வித்யா’ என்ற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். வித்யாவின் ‘தன் கதை’ வடிவ நூல், அதன் நம்பகத்தன்மையாலும், ஆச்சரியப்படத்தக்க மொழிப் பிரயோ கத்தாலும், அர்த்தமற்ற வீண் சொல் இல்லாத செறிவாலும் ஒப்பு சொல்ல முடியாத அற்புதப் படைப்பாக மிளிர்கிறது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த வித்யா, ‘எம்.ஏ தமிழ் மொழியியல்’ பாடத்தை எடுத்தார். தஞ்சைப் பல்கலையில் இருந்த நாடகத் துறையில் நடிக்கலாம் என்ற ஆசை அவருக்கு. உண்மையில் வித்யா, மனதில் நடிகராகத் தன்னை நிறுவிக் கொள்ள ஆசைப்பட்டார். நாடகத் துறைப் பேராசிரியர் மு.ராமசாமி, அப்போது எழுதி இயக்கிய ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகத்தில் அரங் கப் பணி செய்யும் வாய்ப்பை வித்யாவுக்கே கொடுத்திருக்கிறார். நாடகக் கலைஞர் முருக பூபதியையும் அச்சமயம் வித்யா அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நாடகத்தில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெறுதல் என்பதே முதலில் தன் லட்சியமாக வைத்துக் கொண்டிருந்த வித்யா, தன்னைப் போன்ற கோத்தி (ஆணுடையில் இருக்கும் பெண்) களுடனும் திருநங்கை (பெண் ஆடை அணிந்து, தம் ஆண் உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அறுத்துக் கொண்டவர்கள்)களுடனும் தொடர்ந்து உறவாடிக் கொண்டிருந் தார். அப்போதுதான் சில தீவிர மான மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்.

நான் யார்… என்ற கேள்வி அவருக் குள் எழுந்து அவரை உருக்குலைக்கிறது. ‘கேலி சொற்களால் என்னை அசிங்கப் படுத்தி வந்த அத்தனை பேருக்கும் நடுவே ‘நானொரு திருநங்கை’ என்று கம்பீரமாக வெளிப்படுத்திக்கொள்ள விரும்பினேன். எது வெளிபட்டுவிடுமோ என்று இதுநாள் வரை அஞ்சிக்கொண்டிருந்தேனோ, அதனைப் பகிரங்கமாக்கிவிடத் துடித் துக்கொண்டிருந்தது மனம்’ என்று எழுதுகிறார். நீங்கள் ஆண் என்று அறிந்த நபர், பெண் என்றால் உங்களுக்கு ஏன் நோகிறது?

ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றி எழுதுகிறார். ‘என்னை கலெக்டராக்கிப் பார்க்க ஆசைப்பட்ட அப்பாவுக்கு முன் நிற்க வேண்டிய சூழ்நிலை. கருப்பு நிறப் புடவைக் கட்டிக்கொண்டு போனேன். புடவையில் என்னைப் பார்க்க அப்பாவுக்கு இஷ்டமில்லை. அவர் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.’

திருநங்கைகளுக்கு வாழ இரண்டு வழிகளே உண்டு. ஒன்று, பிச்சை எடுப்பது. மற்றது, பாலியல் தொழில் செய்வது. வித்யாவுக்கு வேலை கிடைக்கவில்லை. வேறு எந்த உதவியும் இல்லை. ஆக, வித்யா (எம்.ஏ., மொழியியல்) பிச்சை எடுத்துப் பிழைக்க புனே செல்கிறார். ஏன் திருநங்கைகள் வடநாடு செல்கிறார்கள்? ஏனென்றால் வடநாடுகளில் இவ்வளவு தொல்லை இல்லை. அவமானம் இல்லை. பெண்ணாகவும் வாழ வேண்டும், வன்முறையில் இருந்தும் தப்பிக்க வேண்டுமே.

‘எனக்குத் தெரியும். புனேவுக்குச் சென்ற நான் தங்கத் தட்டில் பால் சோறு தின்று கொண்டிருக்கப் போவதில்லை என்று. அங்கே என்ன செய்யப் போகிறேன்? பிச்சைதான்… நான் எதிர்கொண்ட கேலி, கிண்டல்கள், நொறுங்கிப் போன எதிர்பார்ப்புகள் எல்லாமே இந்தச் சமூகத்தில் நான் ஓர் உறுப்பினரல்ல என்பதையே திரும்பத் திரும்ப எனக்கு சொல்லி வந்திருக்கின்றன. சகலருக்கும் கேலிப் பொருளாகிவிட்டிருந்த எனக்கு ஒரு கட்டத்துக்கு மேல் இந்தச் சமூகமே கேலிப் பொருளானதும் தவ றாகத் தோன்றவில்லை.

இந்தப் பைத்தியக்கார உலகில் என் மீது மட்டும் எத்தனைக் கற்கள் எறியப் பட்டிருக்கின்றன? அந்தக் கல்லடிகள்தான் என் மனதை மரத்து போகச் செய்தன. ஒரு வகையில் இச் சமூகத்தின் அங்கத்தினர்கள் ஒவ்வொரு வரிடமும் அவர்கள் எனக்களித்த அடிகளுக்கு நஷ்டஈடு வசூல் செய்வது போல்தான் பிச்சைத் தொழிலை நான் கருதினேன்’

ஆந்திராவில் உள்ள ஓர் ஊருக்கு நிர்வாணத்துக்குச் செல்கிறார் வித்யா. நிர்வாணம் என்பது ஆண் உறுப்பு அகற்றல். முறையாக மருத்துவமனை இல்லை. கறிக்கடை போன்ற ஓர் அறை. சரியாக மயக்கம் தராத ஊசியைப் போட்டு, உயிர் போகும் வலியோடு, தான் விரும்பாத அந்த ஆண் அடையாளத்தை அறுத்துப் போடுகிறார் வித்யா. மரணத்தைத் தொட்டுத் திரும்புகிறார்.

‘‘ஆ! நிர்வாணம். இதுவல்லவா நிம்மதியின் எல்லை…

அப்பா, பாருங்கப்பா… அறுந்து கிடக் கும் என் உடம்பைப் பாருங்கப்பா. இப்போதாவது என்னைப் பொண் ணாப் பாருங்கப்பா. என்னை ஏத்துக் கோங்கப்பா…

என் கதறல் எனக்கு மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது” என்று எழுதுகிறார்.

நாம், நீ, அவர், அவன் எல்லாம் மனிதர் என்றால், இனிமேல் திருநங்கை மீது கல் வீசாதீர்கள். அரசு, மக்கள் அரசு என்பது உண்மையானால், எல்லா ஆண்கள், பெண்களுக்கும் தரும் அனைத்து வாழ்க்கை உத்தரவாதங் களையும் திருநங்கை, திருநம்பிகளுக் கும் தர வேண்டும். கூடுதலாகத் தர வேண்டும். இயற்கை செய்த தவறை அரசே திருத்த வேண்டும்.

திருநங்கை சமுதாயத்துக்கு மட்டு மல்ல; மனித சமுதாயத்துக்கே ஒரு புரிதலை இந்தப் புத்தகம் மூலம் வழங்கி, மாபெரும் மானுடக் கடமை ஆற்றியிருக்கிறார் லிவிங் ஸ்மைல் வித்யா. இப்போது மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இப்புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

- நதி நகரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x