Published : 27 Jun 2021 03:12 am

Updated : 27 Jun 2021 05:47 am

 

Published : 27 Jun 2021 03:12 AM
Last Updated : 27 Jun 2021 05:47 AM

புதுமைப்பித்தனின் ‘காஞ்சனா’

pudhumaipithan-kanchana

ராகவா லாரன்ஸ் தனது பேய்க்கதைப் படங்களுக்கு ‘காஞ்சனா’ என்ற தலைப்பை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. அந்தப் பெயர்ப் பொருத்தம் புதுமைப்பித்தன் காலத்திலேயே நிரூபணமாகிவிட்டது. ‘கலைமகள்’ இதழில் 1943 ஜனவரியில் வெளிவந்த சிறுகதை ‘காஞ்சனை’. தன்னிலையில் பெயர்க் குறிப்பின்றி எழுதப்பட்ட எழுத்தாளனின் கதை என்பதால், அதில் புதுமைப்பித்தனின் சாயல்களை வாசகர்கள் தேடிப் பார்ப்பது இன்றும் தொடர்கிறது. தஞ்சை ப்ரகாஷின் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த இயக்குநர் நந்தி ஆ.செல்லத்துரை ‘காஞ்சனை’ கதைக்குக் கொடுத்திருக்கும் அரை மணி நேரத் திரை வடிவத்திலும்கூட புதுமைப்பித்தனுடனான உருவ ஒற்றுமைகளைப் பார்க்க முடிகிறது. முப்புரி நூல் வெளிப்பட்டு நிற்கும் ஒன்றிரண்டு காட்சிகளைத் தவிர, ஒடிசலான உருவம் கொண்ட நாயக நடிகர் ஹேமந்த் பெரிதும் புதுமைப்பித்தனையே நினைவுக்குக் கொண்டுவருகிறார்.

வீடுதான் இந்தக் கதையின் களம். குறும்படத்தில் இடம்பெற்றிருக்கும் பழைய காலத்து வீடு, இந்தக் கதையின் காலகட்டத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. விளக்குத் தண்டு தொடங்கி வெற்றிலைச் செல்லம் வரையில் கதையுடனும் காலத்துடனும் பொருந்திப்போகின்றன. பெரிதும் மனவோட்டமாகவே எழுதப்பட்ட கதை. எனவே, குறும்படத்தில் உரையாடலைக் காட்டிலும் பின்னணிக் குரல்தான் பெரும்பாலும் கேட்கிறது. எழுத்தாளர் கதாபாத்திரத்தின் மனவோட்டத்தை வெற்றிலை போட்டுக் குதப்பும் விதவிதமான வாய்க் கோணல்களிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் ஹேமந்த்.


வெற்றிலையில் கூடுதலாகவே சுண்ணாம்பு தடவிவிட்டதையும் நாக்கு பொத்துக்கொண்டதையும் எளிதில் காட்சிப்படுத்திவிட முடிந்திருக்கிறது. ஆனால், ‘மனசின் மயிலைக்காளை பாதை’யை எப்படிக் காட்சிப்படுத்த முடியும்? இலக்கியப் படைப்புகளுக்குத் திரைப்பட வடிவம் கொடுக்கையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் முக்கியமான சவால் இது. அதிலிருந்து இந்தப் படமும் தப்பவில்லை. ஆனால், தனது வடிவத்துக்கான சுதந்திரத்தையும் நெகிழ்வையும் படைப்பின் சாரம் கெடாமல் இந்தக் குறும்படம் எடுத்துக்கொண்டிருக்கிறது.

கதை நடந்துகொண்டிருப்பது இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் என்பதை எழுத்தாளன் வாசித்துக் கொண்டிருக்கும் செய்தித்தாளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அப்படியே எழுத்தாளனின் அரசியல் நிலைப்பாடுகளும், அமைதியின் மீதான விருப்பமும். ஐக்கிய நாடுகள் என்று புதுமைப்பித்தன் தன் கதையில் கூறியிருப்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளை. ஐக்கிய நாடுகள் அவை இரண்டாம் உலகப் போருக்குப் பின்பே உருவானது. கதை முழுவதும் இப்படி வந்துபோகும் கூடுதல் தகவல்கள்தான் எழுத்தாளனின் சுயவிவரிப்புகளின் மீது நம்பிக்கையை உண்டாக்குகிறது. ஒரு அலையாட்டத்தை ஏற்படுத்தி வாசகருடன் கண்ணாமூச்சி விளையாடவும் செய்கிறது.

வாசனை மயக்கங்கள், பாதங்கள் மறையும் மாயம், கேட்டுக்கொண்டிருக்கும் கதையே கையில் இருக்கும் புத்தகத்திலும் அச்சாகியிருப்பது, கண்ணாடியில் தெரியும் கோர உருவம், கனவில் விழுந்து பிராண்டும் கூரிய நகங்கள், மனைவியின் கழுத்தில் ரத்தச் சுவடுகளுடன் பதிந்த பல்தடங்கள், சுடும் திருநீறு, கண்களை ஏமாற்றும் சேமக்கலம் என்று திகிலுக்குள் தொடர்ந்து நம்மை உள்ளே தள்ளிவிடும் காட்சிகள் இந்தக் கதை நெடுகிலும் அடுத்தடுத்து வருகின்றன. ஆனால், கடைசியில் ‘இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான்’ என்ற ஒரு வாக்கியம் இந்தக் கதை முழுவதையுமே திரும்பவும் படிக்க வைத்துவிடுகிறது. அதுவே திரைப்படம் என்கிறபோது நினைவுகளில் காட்சிகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன. இளைப்புக்காரியான கர்ப்பிணி மனைவி தன் கணவனைக் குடத்தடியில் விரட்டியடித்தது வரையில். எழுத்தாளன், காஞ்சனை இருவருக்கும் இடையில் அப்பாவியெனத் தோற்றமளிக்கும் மனைவியாக பிரீத்திஷாவின் நடிப்பும் சிறப்பு. அச்சத்தில் உறைய வைப்பதாகச் சொல்லப்படும் காஞ்சனையின் பார்வையிலும் அசைவுகளிலும் வெளிப்படுவது உண்மையிலேயே வன்மம்தானா? ஆண்களின் பொது இலக்கணத்தில் எழுத்தாளன் மட்டும் விதிவிலக்கா என்ன? சரடுவிடுவதுதான் என் பிழைப்பே என்று ஒருவன் சுயஅறிமுகம் செய்துகொண்ட பிறகும், அவனையும் அவன் வார்த்தைகளையும் நம்பியது சரிதானா? தன்னிலையில் ஒரு கதை எழுதப்படுகிறது என்பதாலேயே அது சத்தியப் பிரமாணமாக ஏன் இருக்க வேண்டும்?

சத்தியத்துக்குப் பல முகங்கள் உண்டு என்ற அதே ஜென் தத்துவம்தான். ரஷோமான் கதைதான். உண்மையில் அந்த இரவில் என்னதான் நடந்திருக்கும் என்பதற்குக் கொஞ்சமே கொஞ்சம் உலகியல் அனுபவம் இருந்தாலே போதுமானது. புதுமைப்பித்தனின் எழுத்து ஜாலங்களுக்கு நடுநடுவே அவர் கொடுக்கும் ரகசியக் குறிப்புகளை விளங்கிக்கொள்ள முடியாத வாசகர்களும் ஒருவேளை இருக்கலாம். காட்சி வடிவம் அதை இன்னும் துலக்கமாக வெளிக்காட்டிவிடுகிறது. ‘சிரிப்பிலே ஒரு பயங்கரமான கவர்ச்சி’... ‘புன்சிரிப்போ, எலும்புக் குருத்துக்குள் ஐஸ் ஈட்டி சொருகுகிறது’... காஞ்சனையாக நடித்திருக்கும் அனுஷா, புதுமைப்பித்தன் வர்ணித்த சிரிப்புக்கும் புன்சிரிப்புக்கும் உயிர்கொடுத்திருக்கிறார்.

சரவணன் இளவரசு ஒளிப்பதிவில், நிஜில் இசையில், காவேரி கிருஷ்ணா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘காஞ்சனை’ குறும்படத்தை, புதுமைப்பித்தனின் நினைவு தினத்திலிருந்து நந்தி டிவி யு ட்யூப் சேனலில் (https://youtube.com/c/NandhiTV) பார்க்கலாம்.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

ஜூன் 30: புதுமைப்பித்தன் நினைவு தினம்


காஞ்சனாபுதுமைப்பித்தன்புதுமைப்பித்தனின் ‘காஞ்சனா’Pudhumaipithan kanchanaகாஞ்சனை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x