Published : 08 May 2021 04:55 AM
Last Updated : 08 May 2021 04:55 AM
அத்தாட்சிகள்: திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம்
எம்.அமீர் அல்தாப்
ரஹ்மத் பதிப்பகம்
மயிலாப்பூர், சென்னை-4.
மொத்த விலை: ரூ.3,000
தொடர்புக்கு: 94440 25000
திருக்குர்ஆன் அறிவுக் கருவூலமாய், அருள் சுரக்கும் பெட்டகமாய், அன்பார்ந்த கட்டளையாய், வழிபட்டோருக்கு நற்செய்தியாய், வழி தவறியோருக்கு அச்சமூட்டும் எச்சரிக்கையாய் விளங்குகிறது. குர்ஆன் கூறு ஞானம் அளப்பரியது. அது படிக்கப் படிக்கத் தெவிட்டாத அறிவுக்கருவூலம். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி வழியும் இறை அத்தாட்சிகளை எடுத்துக்கூறி, மனித குலத்தை மேம்படுத்தும் மாபெரும் உந்து சக்தியாகவும் திகழ்கிறது. அறிவியல், ஆன்மிகம், மருத்துவம், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல், புவியியல், மானுடவியல், வானவியல், சமூகவியல் போன்ற எண்ணற்ற செய்திகளை குர்ஆன் கூறுகிறது.
உலகம் படைக்கப்பட்ட விதம் தொடங்கி, உயிரினங்கள் உற்பத்தியாகும் விந்தையான வியக்க வைக்கும் தகவல்களை குர்ஆன் தன்னகத்தே கொண்டுள்ளது. குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் அத்தாட்சிகள் ஏராளம். “நிச்சயமாக இ(வ்வேதமான)து உண்மையானதென்று அவர்களுக்குத் தெளிவாவதற்காக (உலகின்) பல கோணங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம். உம்முடைய இறைவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களின் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான் என்பது (உமக்குப்) போதுமானதாகவில்லையா” (திருக்குர்ஆன் 41-53) என்று இறைவன் திருமறையில் கூறுகிறான்.
அத்தகைய அத்தாட்சிகள் அனைத்தையும் திருக்குர்ஆனை மையமாக வைத்து, ஆய்வுகள் செய்து, அவற்றைத் தொகுத்து தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு மாபெரும் கலைக்களஞ்சியமாக எழுத்தாளர் எம்.அமீர் அல்தாப் வழங்கியுள்ளார். ‘அத்தாட்சிகள்: திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம்’ மொத்தம் 4 பாகங்கள், 2,800 பக்கங்கள், 110 அத்தியாயங்கள், 1,600 தலைப்புகள், 13,000 வண்ணப் படங்களைக் கொண்டுள்ளது.
அத்தாட்சிகள் முதல் பாகத்தில், திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பெற்ற தகவல், இறைவனின் தன்மைகள், மறைகூறும் மகா வெடிப்பு, ஆதி மனிதர் ஆதம் நபி தொடங்கி நபிமார்களின் வரலாறு, முகம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாறு, மற்ற வேதங்களில் இறுதித் தூதர் நபி (ஸல்) பற்றிய முன்னறிவிப்புகள் போன்றவை விரிவாக இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பாகத்தில், நபிகளார் தலைமை வகித்த பத்ர், உளூத் போர்கள் உட்பட 22 போர்கள், நபிகளார் எழுதிய 8 கடிதங்கள், திருக்குர்ஆனால் முன்னறிவிப்பு செய்யப்பட்ட ரோம, பாரசீக வெற்றி, இஸ்லாமிய கலீபாக்களில் ஆட்சி, குர்ஆன் கூறும் வரலாற்று நிகழ்வுகள், இறுதி நாளைப் பற்றிய விரிவான செய்திகள் கூறப்பட்டுள்ளன. மூன்றாம் பாகத்தில், குர்ஆன் வெளிப்படுத்தும் மறைந்திருக்கும் அற்புதங்கள், மனித உடம்பில் ஒளிந்திருக்கும் தீராத ஆச்சரியங்கள், கருவின் வளர்ச்சி, பேறுகாலம், தாய்ப்பால் குறித்தும் தோல், விரல் ரேகைகள், காது, கண், இதயம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் பற்றியும், ஒட்டகம், தேனீ, எறும்புகள், பறவைகள் குறித்த வியப்பூட்டும் செய்திகளும் உள்ளன. நான்காம் பாகத்தில், இறைவனால் அருளப்பெற்ற அரும்பெரும் அற்புதங்கள், விரிவான கோணத்தில் விளக்கப்பட்டுள்ளன.
இந்நூலாசிரியர் எம்.அமீர் அல்தாப், கன்னியாகுமரி மாவட்டம், ஆளூரில் 1953-ல் பிறந்தவர். சென்னை புதுக்கல்லூரியில் பட்டம் பெற்றவர். பின்னர் வணிகவியலில் முதுகலைப்பட்டம் மற்றும் வணிக நிர்வாகம் கற்று தேசிய ஜவுளிக் கழகத்தில் மேலாளராக 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அரபி, ஆங்கிலம், தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றுள்ள அவர், திருக்குர்ஆன் ஆராய்ச்சியில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திவருகிறார். மலேசியா, சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களில் குர்ஆன் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தும், அங்கு பயிலும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றியும் வருபவர். அவரது ஆறு ஆண்டு காலக் கடின உழைப்பில் இந்த நூல் உருவாகியுள்ளது. ஒரு பல்கலைக்கழகம் அல்லது ஒரு பெரும் நிறுவனம் செய்திட வேண்டிய அரும்பணியைத் தனியொரு மனிதராக இருந்து அவர் ஆற்றியிருப்பது பாராட்டுக்குரியது.
கோவை முஸ்லிம்களின் 300 ஆண்டு கால சரித்திரத்தை சுமார் ஆயிரம் பக்கங்களில் ‘பெட்டகம்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான புத்தகமாக அமீர் அல்தாப் ஏற்கெனவே ஆவணப்படுத்தியுள்ளார். இந்த ‘அத்தாட்சிகள்’ புத்தகமும் 2,800 பக்கங்களில் பிரம்மாண்டமாக வெளிவந்திருக்கிறது. திருக்குர்ஆன் என்ற ஆழ்கடலில் மூழ்கி, அவர் நவரத்தினங்களை அள்ளித் தந்திருக்கிறார். ஒவ்வொரு தலைப்பின் கீழும் அவர் திரட்டித் தந்திருக்கும் தகவல்கள், அறிவியல் குறிப்புகள், வரலாற்றுச் செய்திகள் படிக்கப் படிக்க மனதில் மலைப்பையும், உடலில் சிலிர்ப்பையும் ஏற்படுத்துகின்றன. இஸ்லாமிய கல்விக்கூடங்களிலும் பள்ளிவாசல்களிலும் முஸ்லிம்களின் இல்லங்களிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்.
- பாத்திமா மைந்தன், ‘அறிவோம் இஸ்லாம்’உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: fathimamainthan@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT