Published : 03 Apr 2021 06:18 AM
Last Updated : 03 Apr 2021 06:18 AM
மூங்கில்
சுஷில் குமார்
யாவரும் வெளியீடு
வேளச்சேரி,
சென்னை-42.
தொடர்புக்கு: 90424 61472
விலை: ரூ.200
சுஷில்குமாரின் ‘மூங்கில்’ சிறுகதைத் தொகுப்பானது பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்ச் சிறுகதை, வாழ்க்கையிலிருந்து விலகி நகர்ந்துவரும் இந்தச் சூழலில் இந்தக் கதைகள் வாசிப்புக்கு ஆசுவாசம் அளிக்கின்றன. இந்தத் தொகுப்பில் 12 சிறுகதைகளும் வெவ்வேறு விதமான பின்னணியைக் கொண்டவை. சுந்தர ராமசாமி, நாஞ்சில்நாடன், ஜெயமோகன் கதைகளில் சித்தரிக்கப்பட்ட நாகர்கோவில் வட்டாரப் பகுதிகளின் யதார்த்தமான புதிய வாழ்க்கையை இந்தக் கதைகளில் பார்க்க முடிகிறது. நாகர்கோவிலின் இளம் தலைமுறையினரின் வாழ்க்கை முறை, அவர்களது புழங்குமொழி எனத் தத்ரூபமான நவீன வாழ்க்கையை சுஷிலால் சித்தரிக்க முடிந்திருக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உரிய தொன்மங்களை சுஷில் தன் கதைகளில் சாதகமாகப் பயன்படுத்தியிருப்பது விசேஷமான அம்சம். பெரும்பாலான கதைகளின் மனிதர்கள் பலரும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கற்பிதங்களுக்காகத் தன் வாழ்க்கையைப் பறிகொடுப்பவர்களாக இருக்கிறார்கள். அதைப் பாவங்கள் எனலாம். பன்றி வேட்டைக்காரன், ஓவியர், லாட்ஜ் தரகர், பம்பாய்த் தொழிலாளி, பூசாரி எனப் பலவிதமான தொழில் பின்னணிகளில் புழங்கும் கதைகள் வாசிப்பு சுவாரஸ்யம் அளிக்கின்றன. கதைகளை ஒரு வீடாகக் கொண்டால் சுஷில் அதில் சில அறைகளை மட்டுமே திறந்து காண்பிக்கிறார். ஆனால், திடகாத்திரமான அனுபவங்கள், எளிமையான மொழி ஆகிய பண்புகள் இந்தக் கதைகளை முக்கியத்துவம் மிக்கதாக்குகின்றன.
- மண்குதிரை
-------------------------------------------------
உதிரிகள் வழியாக வரலாறு
மண்ணில் உப்பானவர்கள்
சித்ரா பாலசுப்பிரமணியன்
தன்னறம் வெளியீடு
வேங்கிக்கால், திருவண்ணாமலை-
606601.
விலை: ரூ.200
தொடர்புக்கு:
98438 70059
வரலாற்றுச் சிறப்புமிக்க உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தைப் பற்றிய புத்தகம் இது. இந்தப் புத்தகத்துக்கு ஒரு தனித்துவமும் இருக்கிறது: தண்டி யாத்திரையைக் கால வரிசைப்படியோ, காந்தியை மையப்படுத்தியோ இல்லாமல், இந்தப் போராட்டத்தை வர்ணிக்கும்போது உதிரிகளாக வெளிப்படுபவர்களை இந்தப் புத்தகம் மையப்படுத்துகிறது. அர்ப்பணிப்பு உணர்வோடு பங்கெடுத்த சாமானியர்களில் தொடங்கி தனித்த ஆளுமைகளாக வரலாற்றில் நிற்கும் நபர்கள் வரை காந்தியோடு கைகோத்த பல மனிதர்களைப் பற்றிய சுருக்கமான தகவல்கள் நிரம்பியிருக்கின்றன. இப்படியான விவரிப்பு முறையானது காந்தியின் உருவத்தைச் சுருக்கிவிடாமல் மேலும் பிரம்மாண்டமாக்குகிறது என்பது கூடுதல் சிறப்பு. பல அரிய புகைப்படங்களோடு சிறப்பான முறையில் வெளியிட்டிருக்கிறது ‘தன்னறம்’.
- த.ராஜன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT