Published : 13 Mar 2021 03:12 am

Updated : 13 Mar 2021 05:48 am

 

Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 05:48 AM

இனவாதத்தின் இறந்த காலம், நிகழ்காலம்!

yad-vashem

ஜெர்மனியை மையமாகக் கொண்டு ஹிட்லர் தலைமையில் கொல்லப்பட்ட அறுபது லட்சம் யூதர்களின் நினைவாக ஜெருசலேம் நகரில் கட்டப்பட்ட நினைவகத்தின் பெயர் ‘யாத் வஷேம்’. பெங்களூருவையும் ஜெர்மனியையும் இஸ்ரேலையும் கதைக்களமாகக் கொண்டு, பெங்களூருக்கு 1940-ல் தந்தையோடு அடைக்கலம் புகுந்த யூதப் பெண் ஹ்யானாவை நாயகியாக வைத்து, கன்னட நாவலாசிரியை நேமிசந்த்ரா எழுதியிருக்கும் ‘யாத் வஷேம்’ நாவலானது இனவாதம் சார்ந்த மோதல்கள், வன்முறைகள், குற்றங்களில் மாண்டுபோன லட்சக்கணக்கான அப்பாவிகள் சந்தித்த அவலங்களை விசாரிக்கும் வரலாற்று நாவலாகும்.

கடவுளை உருவமாக வழிபடுவதை ஏற்காத யூதப் பின்னணி கொண்ட 12 வயதுச் சிறுமி ஹ்யானா, ஆயிரக்கணக்கான கடவுள்களும் சாதிகளும் சேர்ந்து வாழும் இந்தியாவுக்கு வருவதுதான் முதல் பகுதி. பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் விவசாயப் பின்னணியிலிருந்து நகரத்துக்கு இடம்பெயர்ந்த குடும்பத்தினர் வசிக்கும் வீட்டுக்கு அருகில் குடிவந்து, தந்தையின் மரணத்துக்குப் பிறகு அவர்கள் குடும்பத்திலேயே மகளாகவும் மருமகளாகவும் அனிதாவாக உருமாறும் கதை இது. 12 வயதில் அம்மாவையும் அக்காவையும் தம்பியோடு பிரிந்த அனிதா, இந்தியக் கணவன் விவேக்குடன் சேர்ந்து தனது 70 வயதில் தன்னை வருத்தும் இறந்த காலத்தின் புதிரை விடுவிப்பதற்காக ஜெர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் கடைசியில் இனமோதல் உச்சத்தில் இருக்கும் இஸ்ரேலுக்கும் பயணிக்கிறாள். தன் குடும்பத்தில் எஞ்சியிருக்கும் ஒரே ஒருத்தியான அக்கா ரெபெக்காவைச் சந்திப்பதுதான் நாவலின் இரண்டாவது பகுதி.


எளிமையும் மௌனமும் கொண்ட மொழியில் அசோகமித்திரனை ஞாபகப்படுத்துகிறார் நேமிசந்த்ரா. இனப்படுகொலை அபாயத்திலிருந்து உயிர்தப்பி பெங்களூரு வந்து இந்துக் குடும்பம் ஒன்றில் பாகுபாடு இல்லாமல் நடத்தப்பட்டாலும் தனது குடும்பம், நாடு, பண்பாட்டைப் பிரிந்த சிறு பெண் அனிதாவின் துயரமும் மௌனமும் மலர்ச்சியின்மையும் மிகக் கச்சிதமாகப் பதிவாகியிருக்கிறது. மதம், சாதிரீதியான வேறுபாடு, பண்பாட்டுரீதியான பிரிவினைகளுக்கு அப்பாலும் எளிய மனிதர்களிடையே இருக்கும் பிணைப்பும், சங்கடங்களின்போது வெளிப்படும் அனுசரணையும், எல்லா பேதங்களையும் தாண்டி இணக்கமாகக் கூடி வாழ்வதில் காலங்காலமாகத் தொடர்ந்த நம்பிக்கையும் இந்தியாவில் ஒரு விழுமியமாக இருந்துவந்திருப்பதை நாவல் சித்தரிக்கிறது.

பெர்லினில் இயற்பியலராகப் பணிபுரியும் ஹ்யானாவின் தந்தை பெரும்பாலான யூதர்களைப் போலவே, ஹிட்லரின் நாஜிப்படை தனது வீடு வரை வராது என்றே நம்பியிருக்கிறார். ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்து படிப்படியாக அறிவியலர்கள், தொழிலதிபர்கள், உடன் பணிபுரிபவர்கள், குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் எதிரியாக யூதர்கள் மாறுவதைப் படிப்படியாக விவரிக்கும்போது எலீ வீஸலின் ‘இரவு’ ஞாபகத்துக்கு வருகிறது.

பெரிதாக எந்த எதிர்ப்புக் குரலும் இல்லாமல் ஜெர்மனியை மட்டுமல்ல, அண்டை நாடுகளையும் விஷமாய்த் தீண்டிய இனவாத வெறுப்பு ஒரு விதிவிலக்கான நிகழ்ச்சி அல்ல என்கிறார். எந்த நாட்டிலும் எந்தச் சமூகத்திலும் ஹிட்லர் தோன்றுவதற்கான சூழ்நிலையும் அபாயமும் நம் மனத்தில் இருக்கும் குரோதத்திலிருந்தே எழுகிறது என்பதைச் சொல்கிறார்.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இனவாதத்துக்கு அறுபது லட்சம் மக்களைப் பலிகொடுத்த அதே இனம்தான், இஸ்ரேலை முன்வைத்து லட்சக்கணக்கான மக்களைக் கம்பிவேலிக்கு அப்பால் அகதிகளாக அலையவைத்திருக்கிறது என்பதையும் காட்டுகிறார். இனவாதம், தீவிரவாதத்துக்குப் பின்னால் ஆயுத நிறுவனங்களுக்கும் ஊடகங்களுக்கும் இருக்கும் லாபத்தைச் சுட்டிக்காட்டும் நாவலாசிரியர், எல்லா மதங்களும் அமைதியையும் சமாதானத்தையும்தான் போதிக்கின்றன. ஆனால் மதம் சார்ந்த மோதல்களே வரலாறு முழுவதும் தொடர்கின்றன என்கிறார். சிலுவைப் போர், புனிதப் போர் தொடங்கி இந்தியாவில் சமீபத்தில் நடந்த மத மோதல்கள் வரை நாவலில் விவாதப் பொருளாகின்றன.

மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றிபெற்றார்களா என்று நாயகி கேட்கிறாள். கணவனைத் துறந்த பெண்களும் தந்தையை இழந்த குழந்தைகளும்தானே அவர்கள் பக்கத்திலும் மிஞ்சினர் என்கிறாள். போரில் அதிக இழப்பு பெண்களுக்குத்தான் என்பதை ஹ்யானா வழியாகவும் ரெபெக்கா வழியாகவும் ஞாபகப்படுத்துகிறார் ஆசிரியர். இறந்த குழந்தைகள் வளர்வதில்லை என்று ஹ்யானா சொல்லும் வாக்கியத்தை நாம் மறக்கவே முடியாது.

இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினீயராகப் பணியாற்றிய அனுபவம் உள்ள நேமிசந்த்ரா, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸில் படித்தவர். ஹிட்லரின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பிப்பதற்காக ஜெர்மனியிலிருந்து தப்பித்த சில அறிவியலர்களுக்கு நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார். இந்தப் பின்னணியில் ‘யாத் வஷேம்’ நாவலை உருவாக்கியுள்ளார் நேமிசந்த்ரா. காலனிய கால பெங்களூரு நகரத்தின் வளர்ச்சியும் இந்த நாவலில் இயல்பாகத் துலங்குகிறது. நாவலைச் சரளமாக மொழிபெயர்த்திருக்கிறார் கே.நல்லதம்பி.

யாத் வஷேம்

நேமிசந்த்ரா

தமிழில்: கே.நல்லதம்பி

எதிர் வெளியீடு

விலை: ரூ.399

தொடர்புக்கு: 99425 11302Yad vashemயாத் வஷேம்நேமிசந்த்ரா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x