Published : 12 Dec 2020 07:36 am

Updated : 12 Dec 2020 07:36 am

 

Published : 12 Dec 2020 07:36 AM
Last Updated : 12 Dec 2020 07:36 AM

நூல்நோக்கு: உதிரிகளின் கதைகள்

book-review

ஞாயிறு கடை உண்டு
கீரனூர் ஜாகிர்ராஜா
டிஸ்கவரி புக்பேலஸ்
கே.கே.நகர் மேற்கு, சென்னை–78.
விலை: ரூ.240
தொடர்புக்கு: 87545 07070

தஞ்சாவூர் பண்ணையார்களும் பெருமுதலாளிகளும் விவசாயிகளும் விவசாயக் கூலிகளும் பெரிய அளவில் இலக்கியமாகியிருக்கிறார்கள். ஆனால், விவசாயம் அல்லாத சிறுசிறு வேலைகளைச் செய்து காலத்தைக் கழிக்கக்கூடிய சிறுபான்மையினரின் வாழ்க்கையானது இலக்கியத்துக்குள் அதிக அளவில் வந்ததில்லை. அவர்களுடைய வாழ்க்கையை கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘ஞாயிறு கடை உண்டு’ நாவல் கதைக்களனாகக் கொண்டுள்ளது என்ற வகையில் இது ஒரு நல்வரவு. மூன்று கதைகளை இந்நாவல் கொண்டிருந்தாலும், இறுதியில் மூன்று கதைகளும் ஒரே இழையில் இணைந்துவிடுகின்றன.


முதல் கதை: கமிஷன் பெற்றுக்கொண்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தொழிலைக் கொண்டிருப்பவர் அமானுல்லா. அவருடைய பகுதியின் அதிகார மையமாகச் செயல்படும் இவர், தன்னுடைய மூன்றாவது மகளான கதீஜாவிடமே அந்த இடத்தை இழந்துவிடுகிறார். கதீஜா முஸ்லிம் சமூகத்தின் பின்னணியில் பெண்ணியம் பேசுகிறாள். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் தொழில் வாய்ப்புகளில் பெண்களை நிலைநிறுத்துபவளாக கதீஜா தன்னை முன்னெடுக்கிறாள். ஆண்களின் அதிகாரக் குரலைத் தந்தையிடம் கண்டுணர்வதுதான் காரணம். ஆடைக்குள் மறைந்துகொண்டு தன்னை முன்னிலைப்படுத்த முடியாது என்பதை உணரும் அவள் தன்னுடைய தோற்றத்தையே மாற்றிக்கொள்கிறாள். முஸ்லிம் சமூகத்தின் இருப்புகளுக்கு ஒப்புக்கொடுத்து வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக கதீஜாவை உருவாக்கியிருக்கிறார் ஜாகிர்ராஜா.

இரண்டாவது கதை: தன்னுடன் ஜவுளிக்கடையில் வேலை பார்த்த உசேனைத் திருமணம் செய்துகொண்டு மதம் மாறுகிறாள் பாப்பாத்தியம்மாள். மரியம், வகாப் என்ற இரு குழந்தைகளுக்குப் பிறகு உசேனின் நடத்தைக்காகக் குலா கொடுத்துப் பிரிகிறாள் பாப்பாத்தி. முத்தலாக் போன்று குலா குறித்துப் பேசுவதை இந்நாவல் கதீஜா, பாப்பாத்தியம்மாள் கதாபாத்திரங்கள் மூலமாகக் கையில் எடுத்திருப்பது ஒரு முக்கியமான புள்ளி. பாப்பாத்திக்குப் பிறகு மரியம் ஜவுளிக்கடை வேலைக்குச் செல்கிறாள். இந்தப் பகுதிதான் நாவலின் மையமாக இருக்கிறது. ஜவுளிக்கடையில் பணியாற்றும் பெண்களின் துயரங்கள் குறித்து எழுதப்பட்டிருக்கும் பகுதி இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கக் கூடாதா என்று தோன்ற வைக்கிறது. பண்டிகை நாட்களில் துணிக்கடைகளில் பணியாற்றும் பெண்களின் வலி நிறைந்த வாழ்க்கை குறித்து விரிவாக எழுதப்பட வேண்டும். அடுத்து, வகாப்பும் மரியமும் தங்கள் அம்மாவுக்கு மறுமணம் செய்துவைக்க முயல்கின்றனர். இந்தப் புள்ளியைத் தொட்டிருப்பதும் நாவலின் முக்கியமான அம்சம். இஸ்லாம் மதம் குறித்த உன்னத மதிப்பீடுகளுடன், அதன் உள்ளீடற்ற பகுதிகளையும் நாவல் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

மூன்றாவது கதை: அன்வர், முபாரக், சிக்கந்தர், ஆஷிக், நாகூர் பிச்சை ஆகியோர் தவணைமுறையில் பொருட்களைக் கொடுத்துப் பணம் வாங்கும் தொழில் புரிகின்றனர். உதிரிகளாக வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து வேலைசெய்யும் இவர்களை மும்பையில் இருக்கும் பெரியவர் ஒருவர் கட்டுப்படுத்துகிறார். இந்தத் தொழிலினூடாக உருவாகும் போட்டியானது கொலையில் முடிகிறது. எதிர்காலத்தின் மீது வெறுமை படர்வதை இவர்கள் அவதானிக்கிறார்கள். நாவல் முடிந்த பிறகும்கூட அது உருவாக்கிய கங்கு கனன்றுகொண்டே இருக்கிறது.

இந்தக் கதையின் சிக்கந்தர், கதீஜாவால் வேலைக்கு அனுப்பப்பட்டவன். சிக்கந்தரின் பக்கத்து வீட்டில்தான் பாப்பாத்தியம்மாள் வசிக்கிறாள். அந்த வகையில் மூன்று கதைகளுக்கும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. மேலும், நிகழ்காலத்தின் எல்லாப் பிரச்சினைகளின் ஊடேயும் ஜாகீர்ராஜா குறுக்கீடு நிகழ்த்துகிறார். காவிரிப் படுகை விவசாயிகள் தற்கொலை, முத்தலாக், சிறுபான்மையின அரசியல் தலைவர்களின் சுயநலன்கள், இராஜராஜ சோழன் குறித்த தற்கால எதிர்க்கதையாடல்கள், மாட்டுக்கறிப் பிரச்சினை, சிறுபத்திரிகைகளின் ஆயுட்காலம், ஊடகங்களின் குறைபாடுகள் என்று பல பிரச்சினைகள் குறித்தும் விவாதங்கள் நடைபெறுகின்றன. இவை பிரதிக்கு நிகழ்காலத்தன்மையை அளிக்கின்றன. பிரதிக்குள் ஆசிரியர் தன்னையே பகடிக்கு உட்படுத்திக்கொள்வதும், யதார்த்தமான மொழிப் பயன்பாடும் நாவலுக்குக் கூடுதல் பலம். வாழ்க்கையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள தஞ்சாவூரின் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கும் உதிரிகளின் வாழ்க்கைதான் இந்நாவல்.

- சுப்பிரமணி இரமேஷ், ‘எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: ramesh5480@gmail.com


நூல்நோக்குBook reviewஉதிரிகளின் கதைகள்ஞாயிறு கடை உண்டு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x