Published : 26 Sep 2020 07:50 am

Updated : 26 Sep 2020 07:50 am

 

Published : 26 Sep 2020 07:50 AM
Last Updated : 26 Sep 2020 07:50 AM

மா.சண்முகசுப்பிரமணியம்: சட்டத் தமிழின் முன்னோடி

ma-shanmuga-subramaniyan

குறள் கூறும் சட்டநெறி, மா.சண்முகசுப்பிரமணியம்
கழக வெளியீடு, ஆழ்வார்பேட்டை,
சென்னை-18. தொடர்புக்கு: 98846 84666, விலை: ரூ.365

பின்னலூர் மு.விவேகானந்தன், ‘தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். மாயூரம் முன்சீப் வேதநாயகம் தொடங்கி கு.ச.ஆனந்தன் வரையில் தமிழ்ப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட 34 ஆளுமைகளைப் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய விவரத்தொகுப்பு அது. அவர்களில் முன்னாள் சட்டமன்றச் செயலாளரான மா.சண்முகசுப்பிரமணியமும் ஒருவர். ஆனால், அவரது புகைப்படம் மட்டும் விடுபட்டிருந்தது. அவருக்குப் பதிலாக அந்த இடத்தில் திருவள்ளுவர் வீற்றிருந்தார்.


புத்தகங்களின் வாயிலாக மா.சண்முகசுப்பிரமணியத்தின் சட்டத் தமிழ்ப் பணிகளை அறிந்துகொள்ளும் இன்றைய இளம் தலைமுறைக்கு அவரது புகைப்படம் பார்க்கக் கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டம். இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் புகைப்படம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேலாண் இயக்குநர் சுப்பையா முத்துக்குமாரசாமியின் உதவியால் பெறப்பட்டது.

மா.சண்முகசுப்பிரமணியத்தின் இடத்தில் திருவள்ளுவரின் படம் இடம்பெற்றதும்கூட மிகவும் பொருத்தமானதுதான். அவர் எழுதிய ‘குறள் கூறும் சட்டநெறி’ சட்டத் தமிழுக்கு மட்டுமின்றி இந்திய சட்டவியலுக்கும் முக்கியமான பங்களிப்பு. சி.வை.தாமோதரம்பிள்ளை, ரசிகமணி டி.கேசி., ரா.பி.சேதுப்பிள்ளை போன்ற வழக்கறிஞர்களின் தமிழ்ப் பணிகள் சட்டத் துறையோடு பெரிதும் தொடர்பில்லாதவை. நீதிபதிகள் எஸ்.மகராஜன், மா.சண்முகசுப்பிரமணியம் ஆகியோரின் பணிகளோ சட்டத் துறையில் தமிழின் இடத்தை நிலைநிறுத்துபவை. அதிலும் குறிப்பாக, மா.சண்முகசுப்பிரமணியத்தின் பங்களிப்போ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்கள் அறநெறிக் கோட்பாடுகளை வகுத்து, அதன்படி வாழ்ந்தனர் என்பதை ஆதாரங்களுடன் நிறுவக்கூடியது.

மதுரையில் வழக்கறிஞராகவும் மாயவரம், மன்னார்குடி ஆகிய ஊர்களில் நீதித் துறை நடுவராகவும் பணியாற்றிய மா.சண்முகசுப்பிரமணியம், 1961-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சார்புச் செயலாளராகப் பொறுப்பேற்று பல்வேறு நிலைகளில் பணியாற்றி 1976-ல் பணிநிறைவை எய்தினார். அதைத் தொடர்ந்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது, சட்டவியலுக்கான அறிமுக நூலையும், சட்டத் தமிழ் அகராதியையும் எழுதி வெளியிட்டார். அதன் பிறகு, தமிழ் ஆட்சி மன்றக் குழுவின் தலைவராகவும் பொறுப்புவகித்தார்.

மா.சண்முகசுப்பிரமணியத்தின் ‘சட்ட இயல்’ அறிமுக நூலையும் சட்டத் தமிழ் அகராதியையும் சட்ட மாணவர்களும் வழக்கறிஞர்களும் இன்றளவும் பயன்படுத்திவருகின்றனர். தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான ‘சட்ட இயல்’ ஏற்கெனவே சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்காக எழுதப்பட்ட நூலின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம். தீங்கியல் சட்டம் குறித்த மற்றொரு நூலும் கழக வெளியீடாக வெளிவந்துள்ளது. தவிர, தமிழ் வெளியீட்டுக் கழகத்துக்காகக் குற்றவியல் சட்டம் குறித்த விரிவான நூல் ஒன்றையும் அவர் எழுதியிருக்கிறார். சட்டத் தமிழ் வளர்ச்சி, இந்து மதச் சட்டம் குறித்த அவரது குறிப்பிடத்தக்க பல கட்டுரைகள் இன்னும் நூல்வடிவம் பெறவில்லை. இந்நிலையில், 1967-ல் கழகம் வெளியிட்ட ‘குறள் கூறும் சட்டநெறி’யின் மறுபதிப்பு வள்ளுவர், ஆட்சிமொழி குறித்து விவாதிக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில் வெளிவந்திருப்பது மிகவும் பொருத்தமானது.

இன்று சட்டம் படிக்கிற எந்த மாணவருக்கும் சட்டவியல் குறித்த அறிமுக நூலாக சர் ஜான் வில்லியம் சால்மண்ட் எழுதிய புத்தகம்தான் பரிந்துரைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் காலனியாதிக்கப் பரவல் காரணமாக இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் நடைமுறையில் இருந்துவரும் சட்டக் கோட்பாடுகள் பலவற்றுக்கான மூலங்கள் கிரேக்க, ரோமானியச் சட்டங்களிலிருந்து பெறப்பட்டவை என்கின்றன இத்தகைய புத்தகங்கள். சங்க காலத்திலேயே நீதியமைப்பு முறையில் சிறந்து விளங்கிய தமிழகம், இன்று பிரிட்டிஷ் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றிக்கொண்டிருக்கலாம். ஆனால் கிரேக்க, ரோமானியச் சட்ட மூலங்கள் வலியுறுத்தும் அறக் கோட்பாடுகள் பலவும் நமது திருக்குறளிலேயே அடங்கியிருக்கின்றன என்பதை ஒப்புமைப்படுத்தி விளக்குகிறது ‘குறள் கூறும் சட்டநெறி’.

அறம், சட்டம் ஆகிய வார்த்தைகளை விளக்கி அவற்றுக்கிடையிலான உறவை விளக்கிச் சொல்லும் வகையில் இந்நூலின் முதல் மூன்று அத்தியாயங்களும் அமைந்துள்ளன. அதைத் தொடர்ந்து வரும் 19 அத்தியாயங்களும் வினைத்தூய்மை, தீயவை செய்யற்க, குற்றங்கடிதல், நடுவுநிலைமை, நெஞ்சத்துக் கோடாமை என்று திருக்குறள் உணர்த்தும் நெறிகளை சட்டக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றன. ராஸ்கோ பவுண்ட், ஹாலண்ட், கெல்சன், பிளாக்ஸ்டோன், சி.கே.ஆலன் ஆகிய சட்ட நிபுணர்களின் முக்கியமான மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. மா.சண்முகசுப்பிரமணியத்தின் கைப்பிடித்து திருக்குறளைச் சட்டவியல் நோக்கில் படிக்கிறபோது, அது சட்ட முதுமொழிகளின் களஞ்சியமாகவே தோன்றுகிறது.

‘குறள் கூறும் சட்டநெறி’ சாராம்சத்தை ‘சட்ட இயல்’ நூலிலும் ஆங்காங்கே அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் மா.சண்முகசுப்பிரமணியம். சால்மண்ட் எழுதிய சட்டவியல் நூல் கிளான்வில் வில்லியம்ஸ், பி.ஜெ.பிட்ஸ்ஜெரால்டு போன்ற சட்ட நிபுணர்களால் அடுத்தடுத்து விரிவாக்கம் பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால், தமிழின் அறக்கோட்பாடுகளோடு சட்டவியலைப் பொருத்திப் பார்க்கும் மா.சண்முகசுப்பிரமணியத்தின் முயற்சி, அவ்வாறு பின்தொடரப்படவில்லை என்பது வேதனையானது. அதே நேரத்தில், அவரின் தொடர்ச்சியாக இன்றும் சில நீதிபதிகள் திருக்குறளை நீதித் துறையின் அடிப்படை நூலாகவும் நடைமுறை நூலாகவும் தொடர்ந்து முன்னிறுத்திவருகிறார்கள்.

கரோனா ஊரடங்குக் காலத்தில் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், சட்டத் துறை நிபுணர்கள் எனப் பலரும் தத்தம் துறைகளைப் பற்றி இணைய வழிக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு பேசினர். அவற்றில், ‘வள்ளுவமும் சட்டமும்’ என்ற தலைப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவனின் உரை பெரும் கவனத்தைப் பெற்றது. மணல் கொள்ளைத் தடுப்பு உள்ளிட்ட அவரது சில முக்கியத் தீர்ப்புகளில் திருக்குறளோடு புறநானூற்று வரிகளையும் உதாரணம் காட்டியவர் அவர். மாவட்ட நீதிபதி இல.சொ.சத்தியமூர்த்தி, ‘காப்பியங்களில் மதிப்புறு வாதமும் மாண்புறு நீதியும்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். ‘திருக்குறளில் தண்டனைக் கோட்பாடுகள்’ உள்ளிட்ட சட்டத் தமிழ்க் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவருபவர் அவர்.

அறுபதுகளில் மா.சண்முகசுப்பிரமணியம் தொடங்கி வைத்த சட்டத் தமிழ் இயக்கத்தின் கண்ணிகள் இன்னும் அறுபட்டுவிடவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபதிப்பு கண்டிருக்கும் ‘குறள் கூறும் சட்டநெறி’ அந்த இயக்கத்தை இன்னும் வேகம்கொள்ளச் செய்யட்டும்.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in


மா.சண்முகசுப்பிரமணியம்சட்டத் தமிழின் முன்னோடிMa shanmuga subramaniyan

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x