Published : 12 Jan 2020 09:56 am

Updated : 12 Jan 2020 09:56 am

 

Published : 12 Jan 2020 09:56 AM
Last Updated : 12 Jan 2020 09:56 AM

மொழிபெயர்ப்பும் ஐந்து பெண்களும்

chennai-book-fair

த.ராஜன்

மொழிபெயர்ப்புக்கு எப்போதும் இரண்டாம் இடமே நம் இலக்கியச் சூழல் வழங்கிவந்திருக்கிறது. அதுவும்கூட சில காலத்துக்கு முன்புவரை ஆண்களின் பிரதேசமாகவே இருந்தது. அந்தத் துறையில் தற்போது அதிக அளவில் பெண்களின் வருகையைப் பார்க்க முடிகிறது. இது ஒரு ஆரோக்கியமான மாற்றம் என்றே கருத வேண்டும். மொழிபெயர்ப்பில் உத்வேகத்துடன் செயல்படும் பெண்களுள் ஐவர் ‘இந்து தமிழ்’ நாளிதழுடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.


சசிகலா பாபு
‘சூன்யப் புள்ளியில் பெண்’, ‘பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர்.

மொழிபெயர்ப்புக் கலை பெண்களுக்கானதுதான்

மொழிபெயர்க்க முடிவெடுத்ததும் பக்கங்களையும், ஒரு பக்கத்துக்கு மொழிபெயர்க்க எடுத்துக்கொள்ளக்கூடிய அவகாசத்தையும் முதலில் கணக்கிட்டு ஒரு அட்டவணை போட்டுக்கொள்வேன். பதிப்பாளர் கொடுத்திருக்கும் காலக்கெடுவை மனதில் கொண்டு அதன்படி அன்றாடம் சீராக மொழிபெயர்க்கத் தொடங்குவேன். மொழிபெயர்க்கத் தொடங்கும் முன் குறைந்தது இரண்டு முறையாவது வாசித்துவிடுவது என் வழக்கம். முதலில் பென்சிலில் எழுதுவேன். பிறகு, அதைத் தட்டச்சுசெய்யும்போது மொழி லயத்துக்கேற்ப பிசுறுகளைச் சரிசெய்துகொண்டே செல்வேன். முழுவதும் முடிந்த பிறகு இரண்டொரு முறை செம்மையாக்கம் செய்வேன். அன்றாடம் நான்கு மணி நேரம் செலவழித்துவந்த காலமெல்லாம் இருந்தது. இப்போது இரண்டு மணி நேரமாகக் குறைத்துக்கொண்டிருக்கிறேன். ஆண்களைவிடப் பெண்களுக்குப் பொறுமை அதிகம்; மொழிபெயர்ப்புக்குப் பொறுமை அவசியம். எனவே, மொழிபெயர்ப்புக் கலை பெண்களுக்கானதுதான் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஆனால், ஆண்களை ஒப்பிடும்போது பெண்களுக்கு இருக்கும் சாத்தியம் குறைவுதான். இன்றைய தினத்தில் பெண்கள் கவிதையோடு தேங்கிவிட விரும்புவதில்லை. அவர்களின் வாசிப்பு விசாலமாகியிருக்கிறது. தங்களுக்கு விருப்பமான அயல் வாசிப்பிலிருந்து புத்தகங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள்.

பத்மஜா நாராயணன்
‘நான் மலாலா’, ‘தடங்கள்’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர்.

அபுனைவு வாசிப்புகள் அதிகரிக்க வேண்டும்

மொழிபெயர்ப்புப் பணியை மனதுக்கு நெருக்கமானதாகப் பார்க்கிறேன். மனதுக்குப் பிடித்து மொழிபெயர்க்கும் படைப்புகளுக்கு நேரம் காலம் பார்ப்பதில்லை. கிடைக்கும் நேரமெல்லாம் மொழிபெயர்ப்பேன். பிற நாட்டுப் பழக்கங்கள், நிலம், சொற்பிரயோகம் போன்றவற்றை நாமும் நமது மொழிக்குக் கொண்டுவருகிறோம் என்பதே மிகவும் அனுகூலம் தரும் விஷயம். அதுதான் சவாலானதும்கூட. தற்போது தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டுவருகிறேன். அபுனைவு மொழிபெயர்ப்புகள் தமிழுக்கு நிறைய வர வேண்டிய தேவை இருக்கிறது. அபுனைவு வாசிப்பு குறித்த அக்கறை நம்மிடையே குறைவு; அதை வளர்த்தெடுப்பதில் மொழிபெயர்ப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இப்போது மொழிபெயர்ப்பில் பல பெண்கள் ஈடுபடுவது பலரும் இரு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பதைப் பறைசாற்றுகிறது. மொழிபெயர்ப்புக்குத் தேவையான பொறுமையும் திறமையும் நிச்சயம் பெண்களிடம் இருக்கிறது. பலர் அதில் கொடிகட்டிப் பறக்கப்போகின்றனர் என்பதில் இரண்டாம் அபிப்ராயம் எனக்குக் கிடையாது.

ஷஹிதா
‘அன்புள்ள ஏவாளுக்கு’, ‘ஆயிரம் சூரியப் பேரொளி’நாவல்களின் மொழிபெயர்ப்பாளர்.

ஆண்களை விடவும் பெண்களுக்கு உள்ளுணர்வு அதிகம்

ஒரு மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஆக்கத்தை வேறொரு மொழிக்கு மாற்றுவதில் இருக்கும் முரணுக்கு மிகக் கவனமான வாசிப்பும், கற்பனைத்திறனும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக அசாத்தியமான துணிச்சலும் வேண்டியிருக்கிறது. மொழியாக்கம் என்பது பெண்களுக்கு அந்நியமான துறை அல்ல. உள்ளுணர்வு என்பது ஆண்களை விடவும் பெண்களுக்கு இன்னமும் கூர்மையாகச் செயல்படும். லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் போன்ற மிக வெற்றிகரமான மொழிபெயர்ப்பாளர்கள் முத்திரை பதித்த துறைதான் இது. சமகாலத்து மொழிபெயர்ப்பாளர்களுள் அமரந்தா எனக்கு மிகப் பிரியமானவர். மூலப்படைப்பின் ஆசிரியர் தன் மொழியின் கொச்சை அல்லது வட்டார வழக்கில் எழுதுவதை, அவருடைய படைப்பாற்றலின் தனித்துவமான உத்திகளை எழுத்தில் பிரயோகித்திருப்பதை நம் மொழிக்கு ஏற்றாற்போல மாற்றுவதைத்தான் இந்தப் பணியிலுள்ள சவாலாகக் கருதுகிறேன். அதுவே தான் மொழிபெயர்ப்பெனும் படைப்புச்செயலை இவ்வளவு மனதுக்கு இனியதாகவும் ஆக்குகிறது. இப்படி மனதுக்கினிய செயல்பாடுகளுக்கான நேரத்தை மனித மனம் தானாகவே ஒதுக்கிக்கொண்டும்விடுகிறது. ‘அன்புள்ள ஏவாளுக்கு’, ‘ஆயிரம் சூரியப் பேரொளி’ இரண்டு நாவல்களையும் ஒரு வாசகியாகப் படித்தபோது கிடைத்த மன எழுச்சியும், அவை தந்த வாசிப்பின்பத்தையும்விடப் பலமடங்கு அதிகமாக அவற்றை மொழியாக்கியபோது அடைந்தேன். என்னுடைய புனைவை எழுதுவதற்கு இந்த மொழியாக்கப் பணியின்போது நான் என்னையும் அறியாமல் கிரகித்துக்கொண்டிருக்கக்கூடிய இந்த நாவலாசிரியர்களின் மொழிப் பயன்பாடு, உத்திகள் எனக்கு உதவலாம் என்பது கூடுதல் அனுகூலங்கள். மிக இளமையிலிருந்தே மொழிபெயர்ப்புகளை வாசித்துவந்த பெண்ணியவாதி என்ற அடிப்படையில்தான் மொழியாக்கும் படைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.

விலாசினி ரமணி- ‘பார்வையற்றவளின் சந்ததிகள்’, ‘கானல் நீர்’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர்.

உலகை இணைக்கும் பாலம் ஆங்கிலம்

‘மூலப் படைப்பு மொழிபெயர்ப்புக்கு விசுவாசமாக இருக்காது’ என்றார் போர்ஹெஸ். ஆனால், இக்கூற்றை சற்றே திரித்து என் மொழிபெயர்ப்பின் அடிப்படையாக நான் எடுத்துக்கொள்வது, ‘ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலப் படைப்புக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.’ மூலப் படைப்புக்கு நேர்மையாக இருக்க மூலப் பிரதியின் மொழியிலும் மொழிபெயர்ப்பு மொழியிலும் மேதைமையாக இருப்பது மட்டுமே போதாது; இரண்டு இலக்கியங்களின் பரிச்சயமும் அவசியம். ஆகையால்தான், இலக்கியத்துடன் தீவிரமாகப் பயணிப்பவர்களால் மொழிபெயர்ப்புப் பணியை எந்த வயதிலும் தொடங்க முடிகிறது. மொழிபெயர்ப்பின் ஆரம்ப காலங்களில் இருப்பவர்கள் பிரதியைத் தேர்ந்தெடுப்பதற்கு சாத்தியம் இல்லாமலிருந்தாலும் பதிப்பாளரின் தேர்வின்படி தொடங்குவதும் ஒருவகையில் சவாலான விஷயம்தான். பதிப்பாளர்கள் நமக்கு அறிமுகப்படுத்தும் பிரதியோ இலக்கியவாதியோ முன்பே நமக்கு அறிமுகமில்லாமல் இருந்தாலும் அவற்றில் இருக்கும் கூடுதல் ஆச்சரியம் மொழிபெயர்ப்பின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. இந்திய மொழிகளைப் பொறுத்தவரையில் ஆங்கில மொழிபெயர்ப்பு என்பது ஒரு வரம். ஆங்கிலம்தான் வடக்கிலும் தெற்கிலும் இருக்கும் இரு இலக்கிய உலகை இணைக்கும் பாலமாக இருக்கிறது. இப்பணியில் என்னை இயக்குவது மொழிபெயர்க்கும் புத்தகம் தரும் உத்வேகம்தான். ‘ப்ளட் ஐலாண்ட்’, ‘ஃபர்கெட்டிங் தி ட்ரீ ஸ்லோலி’ இந்த இரண்டு புத்தகங்களையும் அடுத்து மொழிபெயர்க்க நினைத்திருக்கிறேன். ஒரு படைப்பைத் துல்லியமாகப் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, ஒரு பண்பாட்டை புரிந்துகொள்வதற்கும் மொழிபெயர்ப்புதான் சிறந்த வழி. அந்த வகையில் மொழிபெயர்ப்புப் பணி என் வாழ்க்கை முழுக்கக் கூடவே வரக்கூடியதாக இருக்கும்.

லதா அருணாச்சலம்- ‘தீக்கொன்றை மலரும் பருவம்’நாவலின் மொழிபெயர்ப்பாளர்.

சமூகச் சிக்கல் கொண்ட கதைகளே எனது தேர்வு

ஒரு மொழிபெயர்ப்பாளரின் மனம் ஒரு பிரதியை வாசிக்கும்போது மனதில் மொழிபெயர்க்கவும் தொடங்கிவிடுகிறது. அது ஒருவகையில் அனுகூலமே. எதையும் தவறவிடாமல் நுட்பமான வாசிப்பு இப்படியான மனோபாவத்தால் சாத்தியமாகிறது. இரவு 9-12 மணிதான் நான் மொழிபெயர்க்க எடுத்துக்கொள்ளும் நேரம். புற வேலைகளின் அழுத்தம் இல்லாத ஒரு சூழல், குறைந்தபட்சம் புத்தகத்தின் முக்கியமான பகுதிகளை மொழிபெயர்க்கையில் கிடைத்தால் நலம். அப்படியான சூழலை மனம் எதிர்பார்க்கும்போது நூலகம் அல்லது அமைதியான சூழலுள்ள இடத்துக்குச் சென்றுவிடுவேன். பயணங்களும் மனதுக்குப் புத்துணர்ச்சி தரும். மொழியின் அந்நியத் தன்மை வாசிப்பவரை விலக்காமலும், அதேவேளை மூலப் புனைவிலிருந்து முற்றிலும் வேறுபடாமலும் இருக்கும் துல்லியமான ஒரு மொழியைத்தான் நான் தேர்ந்தெடுக்கிறேன். மொழிபெயர்ப்புக்கான கதைகளைத் தேர்ந்தெடுக்கையில் சர்ரியலிசம், மிகுபுனைவுக் கதைகளைத் தவிர்த்துவிடுகிறேன். உளவியல், சமூகச் சிக்கல் கொண்ட கதைகளே எனது தேர்வு. புனைவு எழுத மனநிலை வாய்க்காதபோது மொழிபெயர்ப்புப் பணியைச் செய்கையில் அது படைப்பூக்க மனநிலையைத் தருகிறது. இப்போதுள்ள சூழலில், ஆப்பிரிக்க இலக்கியத்தில் கவனம் செலுத்த அதிக மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாததால், அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். அடுத்து சிறந்த உலகச் சிறுகதைகளை மொழிபெயர்க்கும் ஆவலும் உள்ளது. உலகின் பல்வேறுபட்ட மக்களின் உணர்வுகள், கலாச்சாரம், வாழ்க்கை, அரசியல் ஆகியவற்றை எல்லை கடந்து நம் வாசகர்களுக்குக் கொண்டுவருவதை மிகவும் விரும்பிச் செய்கிறேன்.


Chennai book fairமொழிபெயர்ப்பும் ஐந்து பெண்களும்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x