Published : 02 Nov 2019 08:39 am

Updated : 02 Nov 2019 08:40 am

 

Published : 02 Nov 2019 08:39 AM
Last Updated : 02 Nov 2019 08:40 AM

இந்தியாவின் கழிப்பறைக் குளறுபடி

indias-toilet-issue

சுதர்சன் ஹரிபாஸ்கர்

இந்திய புள்ளியியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும், ஆர்ஐசிஇ அமைப்பின் நிர்வாக இயக்குநர்களுமான டியானே காஃபே, டீன் ஸ்பியர்ஸ் இருவரும் இணைந்து எழுதிய ‘எங்கே செல்கிறது இந்தியா: கைவிடப்பட்ட கழிப்பிடங்கள், தடைபட்ட வளர்ச்சிகள், சாதியத்தின் விலைகள்’ புத்தகத்தில், இந்தியாவின் தலையாய பிரச்சினைகளுள் ஒன்றான திறந்தவெளி மலம் கழித்தல் குறித்து மிக விரிவானதொரு ஆய்வுப் பார்வையை முன்வைத்திருக்கிறார்கள். இந்திய கிராமங்களில் திறந்தவெளி மலம் கழித்தலும் அதைச் சார்ந்த பிற சிக்கல்களையும் காரணங்கள், விளைவுகள், எதிர்வினைகள் என்று மூன்று பிரிவுகளின் கீழ் பத்து அத்தியாயங்களில் தீர ஆராய்ந்து எழுதியிருக்கின்றனர். இந்தியாவைவிடப் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பின்தங்கிய நிலையிலுள்ள பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில்கூடத் திறந்தவெளி மலம் கழித்தல் சதவீதம் மிகக் குறைவாகவே உள்ள நிலையில், நம் நாட்டில் என்னதான் பிரச்சினை என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.


குழந்தைகள் இறப்பு விகிதம், குழந்தைகளின் சராசரி வளர்ச்சி உள்ளிட்ட பல விஷயங்களில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் திறந்தவெளி மலம் கழித்தலின் நேரடிப் பாதிப்புகளைப் பேசுகின்றனர். மேலும், இந்தப் பிரச்சினையின் பின்னால் மிகப் பெரும் பங்கு வகிக்கும் சாதிரீதியான தீண்டாமை குறித்தும், ஒடுக்குமுறைகள் குறித்தும் விரிவாகப் பேசுகின்றனர். வீட்டின் உள்ளேயோ அருகிலோ கழிப்பறை கட்டினால் அதைச் சுத்தப்படுத்துவதற்காக, தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தாங்கள் வசிக்குமிடம் அருகே வர அனுமதிக்க நேரும் என்பதாலேயே பெரும்பாலான கிராம மக்கள் கழிப்பறைகள் கட்ட முன்வராதது டியானேவைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

ஆர்ஐசிஇ அமைப்பு நடத்திய கணக்கெடுப்பின்போது கழிப்பறை கட்டுமளவு வசதி வாய்த்த கிராம மக்கள் சொன்னது, “தூய்மை இந்தியா திட்டம் பரிந்துரைக்கும் சிறிய நிலத்தடி கழிவுத்தொட்டிகள் கொண்ட கழிப்பறைகளைக் கட்டினால் அவை அடிக்கடி நிரம்பும். அப்படி கழிவுத்தொட்டிகள் நிரம்பும்பட்சத்தில் அதைச் சுத்தப்படுத்த மலம் அள்ளும் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. நாங்கள் இந்த வேலையைச் செய்ய மாட்டோம். அதனால், பெரிய தொட்டிகளைக் கட்டுகிறோம். அதற்குமே சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியூரிலிருந்து ஆட்களை வரவழைத்து, நிறைய செலவழித்து சுத்தப்படுத்த வேண்டியிருக்கிறது.”

கிராம மக்கள் தூய்மை எனவும், மாசு எனவும் எந்தெந்த விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள்? சாதியக் கட்டமைப்பால் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னென்ன பாதிப்புகள்? இவை குறித்து விவாதிப்பதன் மூலமும், கிராம மக்களோடு நிறைய நாட்கள் செலவிடுவதன் வாயிலாகவும் இந்திய கிராமங்களில் சாதியப் பாகுபாடுகள் குறித்து இருவரும் ஒரு புரிதலுக்கு வருகின்றனர். சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் தீண்டாமைக்கும் தூய்மை இந்தியா திட்டம் ஒழிக்க முயல்வதாகச் சொல்லும் திறந்தவெளி மலம் கழித்தலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியுமென்பதைப் புரிந்துகொள்ளவே அவர்களுக்கு அதீத முயற்சி தேவைப்படுகிறது.

இதைப் போலவே, கழிப்பறைகளின் கட்டுமானமும் அதற்காகச் செய்யப்படும் அபரிமிதமான செலவினமும் முக்கியமான பிரச்சினை. உலக சுகாதார மையத்தின் பரிந்துரையின்படி, 1.5 கன மீட்டர் கொண்ட இரட்டை மலக்குழியோடு கட்டப்படும் கழிப்பறைக்கு வங்கதேசம் மாதிரியான நாட்டில் இந்திய மதிப்பில் ரூ.2000-3000 வரை செலவாகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்படும் கழிப்பறைகள் கட்ட ரூ.12,000- 21,000 வரை செலவாகிறது. உலக சுகாதார மையம் பரிந்துரைக்கும் சராசரி அளவைவிட ஐந்து மடங்கு பெரிய கழிவுநீர் தொட்டியைக் கட்டுவதாலேயே இந்தச் செலவு. பிற வளர்ந்துவரும் நாடுகளின் செலவு குறைவான முன்னெடுப்புகளை நாம் ஏன் நிராகரிக்கிறோம் என்ற கேள்விக்குத் தீண்டாமையின் வரலாற்றையும், குறிப்பாக மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் டியானேவும் டீனும்.

இறுதியாக, இந்தப் பிரச்சினையின் நடைமுறைச் சிக்கல்களையும், இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் பற்றி அலசி ஆராய்ந்த பின்னர், இருவரும் மூன்று பரிந்துரைகளை முன்வைக்கிறார்கள்.

1) திறந்தவெளி மலம் கழித்தல் சார்ந்த கணக்கெடுப்புகளைச் சுயாதீன அமைப்புகளின் மூலம் நடத்தி, ஓரளவு நடைமுறைக்குச் சாத்தியமான திட்டங்களை வகுக்க வேண்டும்.

2) மக்களிடையே கலாச்சாரம் குறித்தும், சாதி - தீண்டாமை பற்றியும் உரையாடலைத் தீவிரப்படுத்த வேண்டும்.

3) பொது சுகாதாரம் சார்ந்து நடைமுறைப்படுத்தப்படும் திட்டவரைவுகளைப் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி தேவையான மாறுபாடுகளைச் செய்ய வேண்டும்.

திறந்தவெளி மலம் கழித்தல் என்பது மக்களின் அடிப்படை பழக்கவழக்கம் மற்றும் குணாதிசயம் சார்ந்த ஒரு பிரச்சினை. முறையான கல்வியும், அடிப்படை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும், தொடர் முயற்சிகளும் மட்டுமே இப்படியான பிரச்சினைக்கு ஒரு தீர்வைத் தரக்கூடியவை. அரசாங்கம் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையோடு கொள்கைரீதியான தீர்வுகளை முன்னெடுத்தால் மட்டுமே எதிர்காலச் சந்ததியினர் ஓரளவுக்காவது பயனடைய முடியும்.

- சுதர்சன் ஹரிபாஸ்கர்,

தகவல் தொழில்நுட்ப வல்லுநர்.

தொடர்புக்கு: sudhar.san111@gmail.com

*********************************************************************

எங்கே செல்கிறது இந்தியா
டியானே காஃபே, டீன் ஸ்பியர்ஸ்
எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு
பொள்ளாச்சி - 642002.விலை: ரூ.350
99425 11302இந்தியாவின் கழிப்பறைக் குளறுபடிஎங்கே செல்கிறது இந்தியா: கைவிடப்பட்ட கழிப்பிடங்கள் தடைபட்ட வளர்ச்சிகள் சாதியத்தின் விலைகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x