Published : 05 Oct 2019 08:31 AM
Last Updated : 05 Oct 2019 08:31 AM

அண்ணா நூல் திறனாய்வுக் கூட்டங்கள்

அண்ணா நூல் திறனாய்வுக் கூட்டங்கள்

அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல் திறனாய்வுக் கூட்டங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொது அமைப்புகளாலும் வாசகர்களாலும் நடத்தப்படுவது ஒரு போக்காக உருவாகியிருக்கிறது. மணப்பாறை, தஞ்சாவூர், பொன்னேரி மூன்று ஊர்களிலும் நடந்த நிகழ்ச்சிகளில் பெரிய அளவிலான வாசகர்கள் கூட்டம் பங்கேற்றதோடு, அவர்களில் பெரும்பாலானோர் புத்தகத்தையும் வாங்கிச் சென்றனர். மணப்பாறையில் பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை ஒருங்கிணைத்த கூட்டத்தில் வழக்கறிஞர் செ.வீரபாண்டியன் தலைமை வகித்தார். செளமா.ராஜரத்தினம், வழக்கறிஞர் ஆ.தமிழ்மணி, மணவை தமிழ்மாணிக்கம் உள்ளிட்ட ஆளுமைகள் முன்னிலை வகுத்தனர். தஞ்சாவூரில் சீர் வாசகர் வட்டம் சார்பில் நடந்த கூட்டத்தில் ச.மருது துரை தலைமை வகித்தார். தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் சிறப்புரை ஆற்றினார். பொன்னேரியில் நடந்த கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் சிறப்புரை ஆற்றினார். அண்ணாவின் பேத்தி மு.இளவரசி இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ஒரே மேடையில் 34 புத்தகங்கள் வெளியீடு

வெற்றிமொழி வெளியீட்டகத்தின் 15-ம் ஆண்டு விழா, இலக்கியக் கூடலின் 50-வது நிகழ்வு, புத்தக வெளியீட்டு விழா எனக் கடந்த ஞாயிறன்று திண்டுக்கல் கொண்டாட்டக் களை பெற்றுவிட்டது. மா.கமலவேலன், யவனிகா, ஆதவன் தீட்சண்யா, இளஞ்சேரல், பாட்டாளி, புதுகை சஞ்சீவி உள்ளிட்ட 34 படைப்பாளிகளின் 34 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வின் முத்தாய்ப்பான விஷயம், விழாவில் பங்கேற்ற 34 படைப்பாளிகளையும் ஓவியர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் ஓவியங்களாக வரைந்திருந்தார். அந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விழாவில் குடும்பத்தோடு மக்கள் கலந்துகொண்டார்கள். கோயில், திருமணம் மட்டுமல்லாமல் இலக்கியம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கும் குடும்பம் சகிதம் கலந்துகொள்வது ஒரு நல்ல அறிகுறி!

பெரியார் மலர்: இந்த ஆண்டு விசேஷம்!

ஆண்டுதோறும் ‘விடுதலை’ நாளேடு, பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மலர் வெளியிட்டுவருகிறது. இந்த ஆண்டு மலரில் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு எழுதிய ‘பெரியார் தமிழ்த் தேசியவாதி இல்லையா?’ கட்டுரையும், தா.பாண்டியனின் நேர்காணலும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. கட்டுரையாளர்களில் கி.வீரமணியே ஸ்கோர் அடித்துவிட்டார். அருண்ஷோரி, வி.எஸ்.நைபால், சுனில் கில்னானி, மார்ட்டின் பக்லி என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் எழுத்தாளர்கள் பெரியாரைப் பற்றி தெரிவித்துள்ள கருத்துகளைத் தொகுத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். கருத்தியல் முன்னோடிகள் என்ற தலைப்பிலான மற்றொரு கட்டுரை மாயூரம் வேதநாயகம் தொடங்கி வள்ளலார், அயோத்திதாசர் என்று நீண்ட பட்டியலை அளிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x