Published : 29 Sep 2019 10:21 AM
Last Updated : 29 Sep 2019 10:21 AM

வெக்கை: மொழிபெயர்ப்பு, ஒளிபெயர்ப்பு!

தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான பூமணி இந்த ஆண்டு ஆங்கிலத்துக்கும் சென்றிருக்கிறார். அவரது ‘பிறகு’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘எமரால்டு’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அவரது இன்னொரு முக்கியமான நாவலான ‘வெக்கை’ என்.கல்யாண ராமனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘ஜக்கர்நாட்’ பதிப்பகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. 1982-ல் வெளியான ‘வெக்கை’ நாவல், சிறுவன் சிதம்பரத்தையும் அவனது தந்தை பரமசிவனையும் மையமிட்டிருப்பது. ஒரு குற்றத்தையும், அதைத் தொடர்ந்த அவர்களின் தலைமறைவு வாழ்க்கையையும் பேசும் இந்நாவல் விரைவில் வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமாக வெளியாகவிருக்கிறது. பூமணியின் எழுத்துவாழ்க்கை தொடங்கி நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போதுதான் ஆங்கிலத்துக்கே அவர் படைப்புகள் போகின்றன. காலம் தாழ்ந்தாலும் ஒரு தரமான தமிழ் எழுத்தாளர் ஆங்கிலத்துக்குப் போவது கொண்டாட்டத்துக்குரிய விஷயம்தானே!

பொறிபறக்க வந்திருக்கிறது ஒரு புதிய புத்தகம்...

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரான சூரஜ் ஏங்டே, இந்தியாவின் நம்பிக்கைக்குரிய வருங்கால அறிவாளுமைகளில் ஒருவர். ஆனந்த் டெல்தும்டேவுடன் இணைந்து அவர் தொகுத்த ‘தி ரேடிகல் இன் அம்பேத்கர்: கிரிடிக்கல் ரிப்ளெக்ஷன்ஸ்’ என்ற கட்டுரைத் தொகுப்பு மிகப் பெரிய கவனத்தைப் பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அந்தப் புத்தகத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்ட தொல்.திருமாவளவன், விழா மேடையிலேயே அப்புத்தகத்தைத் தமிழில் மொழியாக்கம் செய்யும் உரிமையைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார். சர்வதேச அளவில் கருத்தரங்குகளிலும் ஆய்விதழ்களிலும் தலித் உரிமைகள் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வரும் சூரஜ் தனது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் எழுதியிருக்கும் ‘காஸ்ட் மேட்டர்ஸ்’ என்ற புத்தகத்தை பென்குவின் பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டது. அம்பேத்கரின் பெயரைச் சொல்லி புனிதப்படுத்தப்படும் இந்திய அரசமைப்புச் சட்டம், சாதியப் பாகுபாடுகளுக்கு எதிரானதாக இருந்தாலும் அதை மட்டும் நடைமுறைப்படுத்த யாரும் தயாராக இல்லை என்பதையும், அம்பேத்கரை வழிபடும் கடவுளாக மாற்றுவது அவரைப் பற்றிய விவாதங்களைக் கொன்றழிக்கும் செயல் என்றும் இந்நூலில் பேசியிருக்கிறார் சூரஜ். தலித்துகள் மீது இழைக்கப்படும் அநீதிகளை மட்டுமின்றி தலித்துகளுக்குள்ளேயே உருவாகிவரும் மேட்டுக்குடி வர்க்கத்தைப் பற்றிய விமர்சனங்களையும் உள்ளடக்கியிருக்கிறது ‘காஸ்ட் மேட்டர்ஸ்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x