செய்திப்பிரிவு

Published : 08 Sep 2019 10:23 am

Updated : : 08 Sep 2019 10:24 am

 

சறுக்கலில் தொடங்குது சாதனை!

isro-poem

ஒரு புள்ளி - ஒரு வட்டம்.

வட்டம் வரைதலில் முக்கிய கட்டம்

வட்டமாய் முடிதல்.

முதன்முறை முடியாதது

மறுமுறை நிறையும். இது இயற்கை.

எங்கள் சந்திரயான்


இறங்கும் சந்திரனில் -

இன்று இல்லையேல் நாளை.

வட்டம் வரைந்து விட்டோம்.

நிறைவாய் இணைப்பதில்தான்

சற்றே இழுபறி.

பொறுத்துப் பாருங்கள்

அடுத்த முறை அச்சு பிசகாமல்

நிலவில் இறங்கிக் காட்டுவோம்.

இஸ்ரோ தலைவரின் கண்ணீரில்

இந்தியர்களின் இதயம் நொறுங்குகிறது.

இது தோல்வி தந்த விரக்தி அன்று;

நமக்காகக் காத்திருக்கும்

நிலவுக்கு நாம் கூறும் செய்தி.

சில நாட்கள் பொறுத்திரு.

கையாட்டி முகமன் சொல்லும்

தூரத்தில் இருக்கிறோம்.

விரைவில் வந்து கை குலுக்குவோம்.

நிலவே கேள் -

அணுகுமுறை தோற்கலாம்.

அறிவியல் தோற்பதில்லை.

திட்டங்கள் கைவிடலாம்.

திட்டமிடுவோர் விடுவதில்லை.

எங்கள் அருமை விஞ்ஞானிகள்

விண்ணைத் தாண்டி

பிரபஞ்சம் அளப்பவர்கள்.

நிலவு எங்கள் இளைப்பாறும் இடம்.

உணர்ந்து கொண்டோம் -

இந்த நாள் இளைப்பாறுவதற்கு அல்ல.

நிலவே...

நின்னில் இருந்துதான் எங்களின்

அடுத்த பாய்ச்சல்.

அதற்கு முன்னதாக...

சில ‘வேலைகளை' முடித்துக் கொண்டு

நின்னை நின் மண்ணில் சந்திக்கிறோம்.

எங்கள் இளைப்பாறுதல் நேரம்

இன்னும் வரவில்லை.

நாளை அல்லது மறு நாள்

நாம் கைகோர்ப்போம்.

மனித குலத்தின் மாட்சிமை பொருந்திய

அறிவுலகம் இந்தியத் திருநாட்டின்

இணையற்ற புதல்வர்கள்

உன்னுடன் இணையும் நாள் -

இதோ வந்து கொண்டு இருக்கிறது.

நிலவே... சந்திப்போம் -

நம்பிக்கையுடன் காத்திரு

வரும் நாட்கள்

நொடிகளாய் நகர்ந்து விடும்.

எம் அறிவும் உழைப்பும்

நின்னை ஆராய்வதற்கு அல்ல;

எம்மோடு சேர்ந்து மனித குலத்துக்கு

உழைக்க நின்னை அழைக்க!

வருகிறோம்.

-பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

Isro poem
Popular Articles

You May Like

More From This Category

More From this Author