Published : 27 Jul 2019 09:21 AM
Last Updated : 27 Jul 2019 09:21 AM

நான்காண்டு கால தமிழியக்கம்

செல்வ புவியரசன்

தமிழாற்றுப்படை
வைரமுத்து
சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்
விற்பனை உரிமை: திருமகள் நிலையம்
தொடர்புக்கு: 044 24342899
விலை: ரூ.500

இதுதான் ஆதியென்று இன்னும் அகவை நிர்ணயிக்க முடியாத தமிழின் வரலாற்று இயக்கத்தை 24 ஆளுமைகளைக் கொண்டு விவரிக்கிறது வைரமுத்துவின் ‘தமிழாற்றுப்படை’. நான்காண்டு காலமாய்த் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானவர்களின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. கவியரங்கம், பட்டிமண்டபங்களைப் போல கருத்தரங்கை நோக்கியும் மக்களை அழைத்துவந்ததன் வெற்றிப் பதிவு.

தொல்காப்பியர் தொடங்கி அப்துல் ரகுமான் வரைக்கும் நீளும் இந்த ஆளுமைகளின் பட்டியலில் இதிகாசம் இயற்றிய கம்பனும் உண்டு. ‘தீ பரவட்டும்’ என்று முழங்கிய அண்ணாவும் உண்டு. சிவனைப் பாடிய நாவுக்கரசரும் உண்டு. திருமாலைப் போற்றிய நாச்சியாரும் உண்டு. கடவுள் மறுப்பை உரத்துச் சொன்ன பெரியாரும் உண்டு. விருத்தம் பாடிய பாரதியும் தாசனும் உண்டு. நவீன கவிதையின் முகமாய் அப்துல் ரகுமானும் உண்டு. உரைநடையில் சாதித்த புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் உண்டு. ஆயிரக்கணக்கான திரைப்பாடல் எழுதிய கண்ணதாசனும் உண்டு. சில நூறு பாடல்கள் மட்டுமே எழுதிய பட்டுக்கோட்டையும் உண்டு. தேடித் தேடி சங்க இலக்கியங்களைப் பதிப்பித்த உவேசாவும் உண்டு. தமிழாய்ந்த கால்டுவெல்லும் உண்டு. வைரமுத்துவின் தொகுப்பல்லவா? கருணாநிதியும் இருக்கிறார்.
சாதி, சமயத்துக்கு அப்பாற்பட்டது தமிழ். சூத்திரம், காவியம், திருமுறை, பாசுரம், அருட்பா, சொற்பொழிவு, ஆய்வு, கட்டுரை, பாடல்கள், புனைவு என்று காலம்தோறும் வளரும் தமிழின் பிரதிநிதிகளாக வைரமுத்து தேர்ந்தெடுத்த மூவெட்டுப் பேர்களும் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலரைப் போற்றித் துதிப்பவர்கள் ஏனையவர்களை ஏற்றுக்கொள்வதே இல்லை. கருத்து முரண்பாட்டால் எதிரெதிர் நிலையில் இருப்பவர்களையெல்லாம் தமிழெனும் மைய இழையால் ஒன்றிணைத்திருக்கிறார் வைரமுத்து.

இளம்பூரணர், சேனாவரையர் தொடங்கி இரா.இளங்குமரனார் வரைக்கும் உரை எழுதியிருக்கும் தொல்காப்பியம் குறித்து வைரமுத்து என்ன புதிதாக சொல்லிவிடப் போகிறார் என்பது இயல்பாக எழுகிற கேள்விதான். அழிந்துபோன ஆதிமொழிகளின் பட்டியலில் தமிழ் மட்டும் விதிவிலக்காக இருப்பதற்குத் தொல்காப்பியம் என்ற வலுவான அடித்தளத்தின் மீது அது நின்றுகொண்டிருப்பதே காரணம் என்றும், தொல்காப்பியம் இன்றுவரைக்கும் தமிழை வழிநடத்துவதற்கு அதன் அடித்தளமாக இருக்கும் அறிவியல் பார்வையே காரணம் என்றும் மொழியியல் கோணத்தில் விரிவாக விவாதித்திருக்கிறார் வைரமுத்து. ஆய்வுலகப் பயணத்தில் இது வெறும் வரவேற்புக் கோலம் என்று மிகுந்த அவையடக்கத்தோடு வைரமுத்து பேசினாலும், வெறும் உயர்வுநவிற்சியாக மட்டுமே இந்தக் கட்டுரைகள் முடிந்துவிடவில்லை. கட்டுரையின் போக்கிலேயே மாறுபட்ட பார்வைகளையும் அதுகுறித்த தனது விமர்சனங்களையும்கூட அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார். தொல்காப்பியத்தின் காலத்தைப் பற்றிய ஆய்வாளர்களின் கணிப்புகளைப் பட்டியலிடும்போது, ‘வழக்கம்போல வையாபுரிப் பிள்ளை’ என்று ஒற்றை வார்த்தையை முன்னால் சேர்த்திருப்பது ஒரு உதாரணம்.

வடமொழியின் ஐந்திரத்தைத் தழுவியதா தொல்காப்பியம் என்பதில் தொடங்கி கபிலர், ஔவை, திருமூலர் வரைக்கும் புனையப்பட்ட கதைகளின் பின்னணியில் பொதிந்திருக்கும் அரசியலையும் அவர் கவனப்படுத்தியிருக்கிறார். இன்னும் சமயப் பிடிக்குள்ளேயே சிறைபட்டிருக்கும் வள்ளலாரை பெரியாரின் முன்தொடர்ச்சியாக அடையாளப்படுத்தியிருக்கிறார். உவேசாவுக்கு உதவிய வள்ளல்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, நான்காம் சங்கத்தின் வரலாற்றையும் நினைவுக்குக் கொண்டுவருகிறார். வெறும் இருநூற்றுச் சொச்சமே எண்ணிக்கை என்றாலும் திரைப்பாடல்களுக்குள் சேற்று வாசனையைக் கொண்டுவந்தவர் என்று பட்டுக்கோட்டையைக் குறிப்பிடுகிறார். வைரமுத்துவுக்கும் அரசியல் தலைவர்களுக்குமான நெருக்கங்கள் வெளிப்படைச் செய்திகள். ஆனால், தனது அரசியல் பார்வைகளை வெளிப்படையாய்ச் சொல்லும் வழக்கம் இதுவரை அவருக்கில்லை. இந்தக் கட்டுரைகளின் தொகுப்பு வழக்கத்துக்கு மாறானது. ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் பேசியிருப்பது திராவிட இயக்கத்தின் நவீனத்துவ அரசியலை. சங்க இலக்கியங்களில் பெருமைகொள்கிற, பக்தி இலக்கியங்களையும் கணக்கில்கொள்கிற, மந்திரத்திலும் அருட்பாவிலும் இணக்கம் காண்கிற, பொதுவுடைமையை அரவணைத்துக்கொள்கிற, தனித்தமிழைப் பின்பற்ற விழைகிற இந்த விரிந்தகன்ற பார்வை இலக்கியம் தாண்டி அரசியல் தளத்திலும் பின்பற்றப்பட வேண்டியது.

வெற்றிக்கும் விவேகத்துக்கும் விடாமுயற்சிக்கும் அடையாளமானவர் கவிஞர். அவரின் பரந்த பார்வைக்கும் இத்தொகுப்பு ஒரு சான்று. இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றுப் பிழிவில் தனது சமகாலக் கவிக்கும் சரியான இடம்கொடுத்திருக்கிறார். குழுங்குழு அரசியலுக்கு உள்ளேயே வட்டமடித்துக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு இதுவொரு நற்பாடம்.
எதுகை, மோனை, இயைபு, முரண்நகை என்று தனக்கென்று தனிநடையை உருவாக்கிக்கொண்ட வைரமுத்து கவிதை, பாடல், புனைவு, சொற்பொழிவு என்று எல்லா தளங்களுக்கும் அதை விரிவுபடுத்தி யிருக்கிறார். ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ மூலமாகக் கட்டுரையிலும் அதைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார். இப்போது அந்தத் தனித்த மொழி நடையால் ஆய்வுக் கட்டுரைகளையும் அலங்கரித்துப் பார்த்திருக்கிறார். கருத்தரங்குகளின் உயிர்ப்பற்ற மொழிநடையில் சலித்துப்போன வாசகர்களுக்கு இது ஒரு மாறுபட்ட வாசிப்பனுபவமாக இருக்கும்.

தமிழ் என்பது எட்டு கோடிப் பேர் பேசும் ஒரு மொழியைக் குறிக்கும் பெயர்ச் சொல் அல்ல; தமிழ் என்ற சொல் இலக்கணத்தைக் குறிக்கிறது, வரலாற்றை நினைவுபடுத்துகிறது, மெய்யியலைச் சொல்கிறது, அரசியலைப் பேசுகிறது. இப்படிப் பல்பொருள் ஒருமொழியாக விளங்கும் தமிழை அடுத்த தலைமுறை அறிவாயுதமாகவும் கையிலெடுக்க வேண்டும் என்பதுதான் ‘தமிழாற்றுப்படை’யின் நோக்கம். திருமுருகில் தொடங்கிய ஆற்றுப்படை வரிசையில் உரைநடைச் செய்யுளாய் தனியிடம் பிடித்துக்கொண்டிருக்கிறது இத்தொகுப்பு. முறைப்படி தமிழ் பயின்ற கவிஞர் பாடலாசிரியராகிப்போனது, திரைத் துறைக்கு லாபம். அவருக்கும்தான். ஆய்வுத் துறையின் இழப்பை இத்தொகுப்பால் நேர்செய்துகொண்டிருக்கிறார் வைரமுத்து.

- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x