Published : 20 Jul 2019 09:16 am

Updated : 20 Jul 2019 09:16 am

 

Published : 20 Jul 2019 09:16 AM
Last Updated : 20 Jul 2019 09:16 AM

தொடங்கியது கோவையில் புத்தகக் கொண்டாட்டம்!

book-fair-in-covai
படங்கள்: ஜெ.மனோகரன்

ஒரு தொழில் நகரமாக கோவை மிகவும் புகழ்பெற்றது. அதற்குச் சற்றும் சளைக்காத ஒரு வாசிப்பு நகரமும்கூட கோவை. பரந்துபட்ட வாசகர்களைக் கொண்ட கோவை ஏராளமான எழுத்தாளர்களின் தாயகமும்கூட. அப்படியான இந்நகரில் புத்தகக் காதலர்கள் ஆவலுடன் காத்திருந்த புத்தகக் காட்சி நேற்று தொடங்கியது. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கொடீசியா அமைப்பு வெற்றிகரமாக நடத்திவரும் இந்தப் புத்தகத் திருவிழா, ஜூலை 28 வரை நடைபெறவிருக்கிறது. இந்தப் புத்தகத் திருவிழா கோவை விமான நிலையம் அருகிலுள்ள கொடீசியா சர்வதேசக் கண்காட்சி வளாகத்தில் நடக்கிறது. நுழைவுக் கட்டணம் கிடையாது.

கொட்டிக் கிடக்கும் பொக்கிஷம்!: ஜூலை 28 வரை, வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 8 வரை அரங்குகளில் புத்தகங்களை வாங்கலாம். 175 பதிப்பாளர்கள், 234 அரங்குகள், லட்சக்கணக்கான தலைப்பில் கோடிக்கணக்கான புத்தகங்கள் என்று கோவை மக்களுக்குப் பெரும் அறிவு விருந்து படைத்துக்கொண்டிருக்கிறது இந்தப் புத்தகக் காட்சி. ‘இந்த ஆண்டு ரூ.3.5 கோடிக்கு மேல் விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்!’ என்கிறார் கொடீசியா நிர்வாகிகளில் ஒருவரான செளந்தரராஜன்.


நேற்று மாலை 6 மணிக்குப் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி. கொடீசியா தலைவர் ஆர்.ராமமூர்த்தி, அறிவுக்கேணி தலைவர் இ.கே.பொன்னுசாமியும், கவிஞர் கவிதாசன் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.

விருதுகள்: இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் வண்ணநிலவனுக்கும், இளம் படைப்பாளிகள் விருது குணா கந்தசாமி, சோலைமாயவன், ஞா.குருசாமி ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது. இவர்களின் நூல்கள் பற்றிய திறனாய்வுக்குத் தனி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

டப்பாவாலா நிகழ்வு: வழக்கத்தைவிடவும் கூடுதலாகக் கலை இலக்கிய நிகழ்வுகள் நடக்கவுள்ளன. எனினும் 26-ம் தேதி மாலை நடக்கவிருக்கும் ஒரு நிகழ்வு பல்வேறு தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மும்பை நகரில் தினமும் எட்டு லட்சம் நபர்களுக்கு மதிய உணவைக் கொண்டுசென்று சேர்க்கும் டப்பாவாலா சாதனையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியே அது.
பங்களிப்பில் தொழில்துறையினர்: தமிழகத்திலேயே முதல் வாசகர் திருவிழாவை நடத்தியது கோவை. 1979-லேயே அதை நடத்தியது விஜயா பதிப்பகம். அதற்குப் பிறகு இடைவெளி விழுந்தாலும் உச்சம் தொட்டது செம்மொழி மாநாட்டுப் புத்தகத் திருவிழா. அதைத் தொடர்ந்தே மீண்டும் புத்தகத் திருவிழாக்கள் களைகட்ட ஆரம்பித்தன. பொருளாதாரத் துறையில் சென்னைக்கு நிகராக வளரும் கோவை, அறிவுத் துறையிலும் ஒரு நல்ல சூழலை வளர்த்தெடுக்க விரும்புகிறது. அதற்குத் தங்களாலான பங்களிப்பைக் கொடுக்கும் தொழில்துறை அமைப்பான கொடீசியாவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்!

இலவச வேன்: கொடீசியா கண்காட்சி வளாகம் கோவை நகரத்தின் மையப் பகுதியிலிருந்து 15 கிமீ தள்ளி அமைந்துள்ளது. அவிநாசி சாலையிலிருந்து 3 கிமீ உள்ளே இருப்பதால், வாசகர்களை ஏற்றிவர வழக்கம்போல் இலவச வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. வாருங்கள் வாசகர்களே, கொண்டாடுவோம்!

மாணவர்களுக்கான அறிவுக்கேணி

கோவை புத்தகக் காட்சியை ஒட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள  ‘அறிவுக்கேணி’ என்ற அமைப்பு, வாசிப்புக்காக பள்ளி, கல்லூரி மாணவர்களைச் சந்திக்கிறது. சென்ற ஆண்டு அப்படி 20 பள்ளி, கல்லூரிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவ, மாணவிகளைச் சந்தித்து நிகழ்ச்சிகள் நடத்திய இந்த அமைப்பு, இந்த ஆண்டு 35 பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று சுமார் 10 ஆயிரம் மாணவ, மாணவிகளைச் சந்தித்திருக்கிறது. ‘‘போன முறை ஏதாவது ஒரு எழுத்தாளரை பள்ளி, கல்லூரிக்குக் கூட்டிச்சென்று பேச வைத்தோம். இந்த ஆண்டு எழுத்தாளர்கள் சந்திப்போடு, ஒவ்வொருவருக்கும் கட்டுரை, சிறுகதை எழுதும் பயிற்சியைக் கொடுத்திருக்கிறோம்” என்கிறார் இந்த அறிவுக்கேணியைப் பள்ளி தோறும் ஒருங்கிணைக்கும் இளங்கோவன்.

அரங்கு எண்: 22 ல் ‘இந்து தமிழ் திசை’ நூல்கள்!

கோவை புத்தகக் காட்சியில் ‘இந்து தமிழ் திசை’யின் அரங்கு எண்: 22. இதில் நம் அனைத்து வெளியீடுகளும் கிடைக்கின்றன. அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’, கருணாநிதியின் வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘பொது அறிவு-2019’ போன்ற நூல்களை முதல் நாளிலேயே தேடிப்பிடித்து வாசகர்கள் வாங்கிச்சென்றனர். மேலும், கா.சு.வேலாயுதன் எழுதிய ‘யானைகளின் வருகை’, டாக்டர் கு.கணேசனின் ‘மருந்தும் மகத்துவமும்!’, கௌரி எழுதிய ‘ஆன்மா எனும் புத்தகம்’, நடிகர் பிரபுதேவாவின் ‘இதுதான் நான் பிரபுதேவா’, டாக்டர் தீபக் தாமஸின் ‘பல்’ கலை உள்ளிட்ட நூல்களும் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன.

கரூர், ஓசூர், அரியலூரிலும் புத்தகக் கொண்டாட்டங்கள்

இது புத்தகக் காட்சி சீஸன்போல! கோவையைப் போலவே கரூர், ஓசூர், அரியலூரிலும் தற்போது புத்தகக் காட்சிகள் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. 

கரூரில் கொங்கு திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கிய புத்தகக் காட்சி, ஜூலை 28 வரையிலும் நடைபெறுகிறது. இங்கு ‘இந்து தமிழ் திசை’யின் அரங்கு எண்: 6.

ஓசூரில் கே.ஆர்.மஹாலில் கடந்த 12-ம் தேதியன்று தொடங்கிய புத்தகக் காட்சி வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கு இடம்பெற்றுள்ள ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகத்தின் அரங்கு எண்: 30.

அரியலூரில் நேற்று தொடங்கிய புத்தகக் காட்சி வரும் 29-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இங்கு ‘இந்து தமிழ் திசை’யின் வெளியீடான ‘மாபெரும் தமிழ்க் கனவு’, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ ஆகிய புத்தகங்கள் அரங்கு எண் 43-44-ல் கிடைக்கும்.

புத்தகங்களின் மீதான காதல்

கடந்த ஆண்டு கொடீசியா கண்காட்சி அரங்கில் இடம்பெறாமல், கோவை நகரின் மையத்தில் தனியாகப் புத்தகக் காட்சியை நடத்திய விஜயா பதிப்பகம், இந்த முறை கொடீசியா அரங்கில் இடம்பெற்றுள்ளது. இதன் நிறுவனர் மு.வேலாயுதம் பல புத்தகக் கடைகளின் முதல் விற்பனையை நேற்று காலை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். “போன முறை செய்யப்படாத வசதிகளை இப்போது கொடீசியா புத்தகக் காட்சியில் செய்துதந்துவிட்டார்களா?” என்று அவரிடம் கேட்டோம். ‘‘புத்தகங்களை உண்மையாகக் காதலிப்பவன் நான். ஆகவே, இப்படியொரு முக்கியமான நிகழ்விலிருந்து விலகி நிற்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்து சேர்ந்து நிற்கிறேன்!’’ என்றார்.

‘இது இல்லாவிட்டால்...’

ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியைப் பற்றிக் கவிஞர் புவியரசுவிடம் பேசினேன். ‘‘இப்படியொரு புத்தகத் திருவிழா கோவையிலேயே நடப்பதால்தான் மூத்த எழுத்தாளர்கள் பலரைப் பார்க்க முடிகிறது. அவர்களிடம் சமகால இலக்கியம் குறித்தெல்லாம் பரிமாறிக்கொள்ள முடிகிறது. புதிது புதிதாய் நிறைய புத்தகங்களைப் பார்த்துப் பார்த்து வாங்க முடிகிறது. கொடீசியா இதை நடத்தாவிட்டால் நாம் ஈரோடு புத்தகக் காட்சிக்குத்தான் போக வேண்டும். அல்லது சென்னை, மதுரைக்குத்தான் செல்ல வேண்டும்!’’ என்றார்.கோவையில் புத்தகக் கொண்டாட்டம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x