Published : 16 Apr 2015 11:24 AM
Last Updated : 16 Apr 2015 11:24 AM

வீடில்லா புத்தகங்கள் 28: நரித்தனம்!

உனக்கு என்ன கதை பிடிக்கும்? யானைக் கதையா? சிங்கக் கதையா எனக் குழந்தைகளிடம் கேட்டால், பெரும்பாலான குழந்தைகள் சிங்கக் கதை என்றே கூறுகிறார்கள்.

சிங்கத்தை நேரில் பார்த்திராத குழந்தைகளுக்குக் கூட சிங்கக் கதை கேட்கவே பிடித்திருக்கிறது, காரணம் கதையில் வரும் சிங்கம் பயமுறுத்தாது. வேடிக்கையாக நடந்து கொள்ளும்.

காட்டில் வாழும் சிங்கம் வேறு; கதையில் வாழும் சிங்கம் வேறு. இதை குழந்தைகள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். வனவிலங்குகள் குறித்து நமக்குள் படிந்துள்ள அச்சத்தை கதைகள்தான் விலக்குகின்றன.

கதையில் சிங்கத்துடன் ஒரு சுண்டெலி நண்பனாக முடிகிறது. வேட்டைக்கார னின் வலையில் மாட்டிக்கொண்ட சிங்கத்தை சுண்டெலி காப்பாற்றுகிறது. காட்டின் அரசனாகவே சிங்கம் இருந் தாலும் நட்பு முக்கியமானது என்பதை கதைகளில் இருந்து குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்கின்றன.

இந்த பூமியில் முதல் கதையை சொன் னவர் யார்? கேட்டவர் யார்? பெயர் அறியாத ஆதிக் கதை சொல்லிகளே இந்த உலகின் முதல் படைப்பாளிகள். தன்னைப் போல மிருகங்களும் தாவரங்களும் பேசக் கூடியவை என்று கற்பனை செய்தது மனிதனின் மகத்தான புனைவாற்றல்.

மனிதர்கள் தேசம் விட்டுத் தேசம் பயணம் செய்தபோது கதைகளும் கூடவே சென்றிருக்கின்றன. ஈசாப் கதை யில் சொல்லப்பட்ட முயல், ஆமைப் போட் டிக் கதை கிரேக்கத்தில் இருந்து பய ணித்து நம் ஊரை வந்து அடைந்துள்ளது. இது போலவே குரங்கின் இதயத்தைத் தின்ன ஆசைப்பட்ட முதலையின் கதை இந்தியாவில் இருந்து கிரேக்கத்துக்குப் போயிருக்கிறது.

கதையில் இடம்பெற்றுவிட்ட ஜீவராசி கள் மனிதர்களின் நினைவில் நீண்ட காலம் உயிர்த்திருக்கின்றன. கதையில் லாத விலங்குகள் உலகின் நினைவில் இருந்து வேகமாக மறைந்துவிடுகின்றன. மறதியின் பிடியில் இருந்து நினைவு களைக் காப்பாற்றி சேகரம் செய்வதற்கு கதைகளே எளிய வழி.

உலகின் எல்லா கதை மரபிலும் நரி முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறது. நரி எப்படி இன்னொரு விலங்கை தந்திர மாக ஏமாற்றுகிறது? திருடுகிறது என வித விதமாக கதைகள் புனையப்பட்டுள்ளன. மோசமான நரியைப் பற்றி நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். ஆனால், நல்ல நரியைப் பற்றி ஒரு கதையைக் கூட கேட்டதே இல்லை.

நிஜஉலகில் நரிகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு, அழிந்துவரும் இனமாகவே உள்ளன. கதைகளில் மட்டும்தான் நரி இன்றும் இருக்கிறது. நேரில் நரியைப் பார்த்து 20 ஆண்டு களுக்கு மேலே இருக்கும். சென்னையில் ஒரு நரியாவது இருக்குமா என்ன?

ஷிஞ்ஜி தாஜிமா என்ற ஜப்பானிய எழுத்தாளர் எழுதிய ‘ஆச்சரியம் என் னும் கிரகம்’ என்கிற புத்தகத்தில் முதன் முறையாக நல்ல நரியைப் பற்றிய கதை ஒன்றை வாசித்தேன். இந்தப் புத்தகம் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட ஐந்து கதைகளின் தொகுப்பு. சாகித்ய அகாதமி இதனை வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை தமிழாக்கம் செய்திருப்பவர் வெங்கட் சாமிநாதன்.

ஷிஞ்ஜி தாஜிமா ஹிரோஷிமாவில் பிறந்தவர். சிறந்த குழந்தை எழுத்தாள ரான இவர், அணுகுண்டுவீச்சின் பாதிப்பு பற்றி நிறைய கதைகளை எழுதியிருக்கிறார். இந்தத் தொகுப்பில் உள்ள கோன்இச்சி என்ற நரியைப் பற்றிய கதை மறக்கவே முடியாதது!

கோன் இச்சி என்பது ஒரு நரியின் பெயர். ஜப்பானின் பனி மலை யில் வாழும் கோன் இச்சி, ஒருநாள் பனிப்பிரதேசத்தில் கோட்- சூட் அணிந்த மனிதர்கள் சந்தோஷமாக குழிப் பந்து விளையாடுவதை வேடிக்கை பார்க் கிறது. அவர்கள் எல்லோரும் விற்பனை அதிகாரிகள். விடுமுறைக்காக வந்த வர்கள்.

ஒரு நரியாக கஷ்டப்பட்டு இரைதேடி அவதிப்படுவதை விடவும், மனிதராக உருமாறி இதுபோல சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவிக்கலாமே என கோன் இச்சி ஆசை கொள்கிறது.

மந்திரம் ஒன்றை உச்சரித்து மனிதனாக மாற முயற்சிக்கிறது. கோன் இச்சியின் அம்மா அதைத் தடுத்து, ‘‘மகனே நீ மனிதனாக உருமாற வேண்டாம். மனிதர் கள் நம்மைவிட மோசமானவர்கள். தந்திர சாலிகள்’’ என எச்சரிக்கிறது. கோன் இச்சி அதைக் கேட்கவில்லை. மந்திரத் தைப் பிரயோகம் செய்து மனிதனாக உருமாறி, அருகில் உள்ள நகரத்துக்கு வேலை தேடிப் போகிறது. தோல் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறது. உருவத்தில் மனிதனாகவும் அதன் உள்ளே நரியின் எண்ணங்களும் இயல்புகளுமே இருக்கின்றன.

நகர வாழ்க்கைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் கோன் இச்சி, தனது சம்பாத்தியத்தில் தாய்க்குப் பிடித்தமான கோழிகளை வாங்கிக்கொண்டு போய் கொடுக்கிறது.

‘‘நீ இன்னும் முழுமையான மனித னாக மாறவில்லை. ஒருவேளை நீ நரி என்பதை கண்டுபிடித்துவிட்டால் மோச மான விளைவுகள் ஏற்படும். ஆகவே, என்னைத் தேடி நீ வர வேண்டாம்…’’ என அம்மா எச்சரிக்கிறாள்.

கோன் இச்சியும் நகரவாசிகளைப் போல தனது கடந்தகாலத்தை முற்றி லும் மறந்து, புதிய வாழ்க்கையை மேற் கொள்கிறது. அலுவலகத்தில் அதன் உழைப்பைப் பாராட்டி கொண்டாடுகிறார் கள். எப்போதும் வேலையே கதி எனக் கிடக்கிறது.

ஒருநாள் தோல் சேமிப்பு கிடங்குக்குள் கோன் இச்சி செல்கிறது. அங்கே வேட்டையாடப்பட்ட மிருகங்களின் தோல்கள் வரிசை வரிசையாகத் தொங்கு வதைக் கண்டு மனம் பதறுகிறது. அதில் நிறைய நரித் தோல்களும் இருப்பதைக் கண்டு கண்ணீர்விடுகிறது. பிறகு, ‘நான் இப்போது மனிதன் இதுபோன்று விஷ யங்களுக்காக கவலைப்படக் கூடாது’ என மனதை தேற்றிக்கொள்கிறது.

பனிக் காலத் தொடக்கத்தில் தோல் சேகரிப்பதற்காக அதிகாரிகள் வேட்டைக் குக் கிளம்பினார்கள். கோன் இச்சியும் போனது. அங்கே மிருகங்கள் எல்லாம் கோன் இச்சி மனிதன் இல்லை என்பதைக் கண்டுபிடித்துவிடுகின்றன.

தான் மனிதன் என நிரூபித்துக் கொள்ள, கோன் இச்சி ஒரு வெள்ளை நரியைத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்து கிறது. இவ்வளவு தைரியமாக ஒரு நரியை யாரும் சுட்டதேயில்லை என குழுவினர் பாராட்டுகிறார்கள். கோன் இச்சி செத்துக்கிடந்த நரியின் உடலை புரட்டிப் பார்க்கிறது. அது கோன் இச்சியின் தாய்!

தன் அம்மாவையே கொன்ற துக்கத்தில் அழுது புலம்பியபடி ஒடிய கோன் இச்சி, ‘எனக்கு என் அம்மா வேண்டும். இந்த வணிக அதிகாரி வேலை வேண்டாம்…’ எனக் கதறுகிறது.

இனிமேல் தான் நரியாக உருமாற முடியாது. மனிதனாக வாழ்வதும் அர்த்த மற்றது என முடிவு செய்த கோன் இச்சி, மலையை நோக்கி ‘கோன்… கோன்…’ என உரக்க சத்தமிடுகிறது. அந்த சத்தம் பலமாக எதிரொலித்து அடங்குகிறது. அதன் பிறகு கோன் இச்சியை யாரும் காணவேயில்லை. எங்கு போனது எனவும் தெரியவும் இல்லை.

ஆனால், அந்த மலைப் பிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வெகுதூரத்தில் ‘‘கோன், கோன், கோன்…’’ என்ற கதறல் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது என அந்தக் கதை முடிகிறது.

இந்நாள் வரை சொல்லப்பட்ட அத் தனை நரிகளின் தந்திரமும், கோன் இச்சி யின் கதை மூலம் சமன் செய்யப்படுகிறது. இந்தக் கதையை வாசித்தப் பிறகு நரி நேசத்துக்குரிய விலங்காக மாறிவிட்டது. இதுதான் கதையின் வலிமை!

இதுபோன்ற அனுபவத்துக்காகத் தான், குழந்தைகள் கதைகள் சொல்ல வும், கேட்கவும் வேண்டியது அவசியமாகிறது!

- இன்னும் வாசிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writeramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x