Published : 30 Jul 2017 10:40 AM
Last Updated : 30 Jul 2017 10:40 AM

தோரோ 200: சட்ட மறுப்பின் வழிகாட்டி

அமெரிக்க ஆங்கில இலக்கிய வரலாறு ரால்ப் வால்டோ எமர்சன், அவரது மாணவர் ஹென்றி டேவிட் தோரோ (1817-1862) ஆகியோரிடமிருந்தே தொடங்குகிறது. தோரோ ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல, முன்னோடிச் சூழலியல்வாதியும் சமூகச் செயல்பாட்டாளரும்கூட. மனிதர்கள் இயற்கையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல, இயற்கையோடு மனித வாழ்வு பின்னிப் பிணைந்திருக்கிறது என்று எழுதியதோடு அதன்படியே வாழ்ந்தும் காட்டியவர் அவர். அவ்வகையில், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவைக் குறித்து இன்று உருவாகியிருக்கும் சூழலியல் விழிப்புணர்வை முன்னெடுத்தவர் தோரோ. அவரது சட்டமறுப்புக் கோட்பாடு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமான பங்காற்றியிருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சத்தை எட்டிய கடைசி முப்பது ஆண்டுகளில் அதை தலைமையேற்று நடத்திய காந்தி, சட்ட மறுப்பு என்ற பலம் வாய்ந்த ஆயுதத்தைக் கூர்தீட்டிக்கொண்டது தோரோவிடமிருந்துதான்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தோரோ மாணவராக இருந்தபோதே, அவரை அடையாளம் கண்டுகொண்டார் எமர்சன். மாணவப் பருவத்தில் ஜெர்மானிய இலக்கியங்களையும் இந்தியத் தத்துவ நூல்களையும் விரும்பிப் படித்தார் தோரோ. ஹார்வர்ட் நூலகத்துடனான தொடர்பு அவரது இறுதிக்காலம் வரை தொடர்ந்தது. கார்லைலும் எமர்சனும் அவரது திசைவழியைத் தீர்மானிக்க உதவினார்கள். எமர்சனின் இயற்கை என்ற புத்தகம் அவரை வெகுவாகப் பாதித்தது. அவர்கள் இருவருக்குமான நட்பே தோரோவை ஒரு எழுத்தாளராக வளர்த்தெடுத்தது. அவர் நிச்சயம் தலைசிறந்த கவிஞராக வருவார் என்று எமர்சன் நம்பினார். ஆனால் தோரோ, அதற்கு மாறாக உரைநடை எழுத்தாளராகத்தான் தனது சாதனைகளைப் படைத்திருக்கிறார்.

படித்து முடித்தவுடன் ஒரு பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த தோரோ, அங்கு மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை முறைகளில் முரண்பட்டு வேலையை விட்டுவிட்டார். அதன் பிறகு தந்தையோடு சேர்ந்து பென்சில் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டார். ஏற்கெனவே அத்தொழில் நஷ்டத்தில்தான் நடந்துகொண்டிருந்தது. பின்பு, அவரது அண்ணன் ஜானுடன் சேர்ந்து ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார். ஜானும் அவரது தம்பியைப் போலவே இயற்கை ரசிகராக இருந்தார். பறவையியலில் ஜானுக்கு அளவு கடந்த ஈடுபாடு. ஜானின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பள்ளிக்கூடத்தைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. எமர்சன் தன் வீட்டிலேயே தோரோவுக்கு ஒரு அறையை ஒதுக்கிக்கொடுத்து அவரைத் தொடர்ந்து எழுதவைத்தார். அதன்பிறகு, நியூயார்க் அருகிலுள்ள ஸ்டேட்டன் தீவுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தார். நியூயார்க் பதிப்பங்களின் நட்பு கிடைக்கும், அவர் தொடர்ந்து எழுத வாய்ப்புகள் உருவாகும் என்பது எமர்சனின் திட்டம். ஆனால், விருப்பமில்லாத விஷயங்களை எழுதிப் பிழைப்பு நடத்துவதை தோரோ விரும்பவில்லை. கடைசியில் அவர் நில அளவையாளராகப் பணிபுரிய நேர்ந்தது மிகக் கொடுமையான நகைமுரண். காடுகளை அழிக்கும் நோக்கில்தான் அப்போது நில அளவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது குறிப்புகளில் அந்த வருத்தத்தையும் தோரோ எழுதியிருக்கிறார்.

காங்கார்ட் அருகே இருந்த வால்டன் குளக்கரையில் அவரே ஒரு குடிசையைக் கட்டிக்கொண்டு வசிக்க ஆரம்பித்தார். கடனாகப் பெற்ற கைக்கோடரியைக் கொண்டு உருவாக்கப்பட்ட குடிசை அது. அந்த இடமும்கூட எமர்சனுக்குச் சொந்தமானதுதான். விறகுகளை வெட்டி அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ ஆரம்பித்தார். எளிமை எளிமை எளிமை என்பது மட்டுமே அவரது வாழ்வியல் தத்துவமாக இருந்தது. இரண்டாண்டு கால வனவாசம் முடிந்து அவர் காங்கார்ட் திரும்பியபோது அந்த அனுபவத்தைப் புத்தகமாக எழுதினார். வனத்தில் வாழ்ந்த இரண்டாண்டுகளோடு அதற்கு முன்னும் பின்னும் என மொத்தம் பதினாறு ஆண்டு கால அவரது காட்டு வாழ்க்கையின் பதிவு அது. பறவைகள், விலங்குகள், ஓடைகள், மீன்கள், பனி படர்ந்த பாதைகள் என காட்டின் ஒவ்வொரு கணத்தையும் கண்டு கேட்டு உற்றறிந்த அனுபவத்தை உன்னத இலக்கியமாக உருமாற்றியிருந்தார்.

அமெரிக்காவில் அப்போது அடிமை வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. அரசின் நாடுபிடிக்கும் வெறியையும், அடிமை முறையையும் எதிர்த்த தோரோ அதை வெளிப்படுத்தும் வகையில் வரி செலுத்த மறுத்தார். அதற்காக ஒரு இரவு முழுவதும் சிறையில் வைக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் வரி செலுத்தி அவரை மீட்டார்கள். இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாகத் தனிமனிதனின் உரிமைகள் மற்றும் கடமைகளுக்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பு என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அந்த உரை, சிவில் அரசுக்கு எதிர்ப்பு என்ற தலைப்பில் கட்டுரை வடிவம் பெற்றது. லியோ டால்ஸ்டாய், காந்தி, மார்ட்டீன் லூதர் கிங் ஆகியோரின் வாழ்க்கையில் அந்தக் கட்டுரை மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. அந்தக் கட்டுரைதான் அரசுக்கு வரி செலுத்த மறுக்கும் ஒத்துழையாமை என்ற அரசியல் போராட்டக் கருவியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

தென்னாப்பிரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காந்திக்கு தோரோவின் போராட்ட உத்தியும் துணைநின்றது. ட்ரான்ஸ்வால் பகுதியில் வாழும் இந்தியர்களுக்கு தோரோவின் உதாரணமும் எழுத்துகளும் மிகவும் பொருத்தமானவை என்று தனது இந்தியன் ஒப்பீனியன் (1907) இதழில் எழுதினார் காந்தி. தோரோவின் கட்டுரையின் சுருக்கத்தையும் அந்த இதழில் வெளியிட்டார். தென்னாப்பிரிக்காவில் காந்தி பெற்ற வெற்றி, இந்தியாவிலும் தொடர்ந்து, உலகுக்கே முன்னுதாரணமாகியிருக்கிறது. அதில் தோரோவுக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதை தோரோவின் 200-வது பிறந்த ஆண்டின்போது நாம் நன்றியுடன் நினைவுகூர்வோம்.

-செல்வ புவியரசன், puviyarasan.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x