Last Updated : 16 Jan, 2017 11:08 AM

 

Published : 16 Jan 2017 11:08 AM
Last Updated : 16 Jan 2017 11:08 AM

வாசிப்பு வழிகாட்டி | சிறார் இலக்கியம் - உதயசங்கர்

குழந்தைகளின் ஆளுமையில் சிறார் இலக்கியம் மிக முக்கியமான பங்கு வகிப்பதை இப்போது பெற்றோர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். நம்முடைய சிறார் இலக்கியத்தின் கடந்த காலம் வளம் மிக்கது. சுமார் 50 சிறார் பத்திரிகைகள் தமிழில் வந்திருக்கின்றன. ‘சில்ரன் புக் டிரஸ்ட்’டின் பிறமொழி சிறார் இலக்கிய நூல்கள், சோவியத்திலிருந்து வெளியான சிறார் இலக்கிய நூல்கள் நமது வாசிப்பெல்லையை விரிவுபடுத்தின.

சிறார் இலக்கிய முன்னோடிகளான அழ. வள்ளியப்பாவின் ‘மலரும் உள்ளம்’, ‘நல்ல நண்பர்கள்’, ‘குதிரைச்சவாரி’, பெ. தூரனின் ‘சிறுவர் கதைக்களஞ்சியம்’, வாண்டுமாமாவின் ‘நெருப்புக்கோட்டை’, ரேவதியின் ‘பவளம் தந்த பரிசு’, ‘தும்பி சிறகை மடக்குமா?’ மா.கமலவேலனின் அந்தோணியின் ஆட்டுக்குட்டி, கவிஞர் செல்ல கணபதியின் ‘தேடல்வேட்டை’, கொ.மா. கோதண்டத்தின் ‘வானகத்தில் ஒரு கானகம்’, கவிமணி தேசிகவிநாயகத்தின் குழந்தைப் பாடல்கள், பூவண்ணன், ஆர்.வி., தமிழ்வாணன், பெ.நா. அப்புசாமி, பூதலூர் முத்து, கூத்தபிரான் என்று பலரும் முன்பு சிறார் இலக்கியம் படைத்துக்கொண்டிருந்தார்கள்.

சமகாலத்தில் சிறார் இலக்கியம் பரவலாக வளர்ச்சி பெற்றுவருகிறது. வெ. ஸ்ரீராம்-ச. மதனகல்யாணி மொழிபெயர்த்த ‘குட்டி இளவரசன்’, யூமா வாசுகி மொழிபெயர்த்த ‘அழகான அம்மா’, ‘மாத்தன் மண்புழு வழக்கு’, ‘ஒற்றைக்கால் நண்டு’ போன்ற மலையாள சிறார் இலக்கிய நூல்கள், புத்தகப் பூங்கொத்து, புத்தகப் பரிசுப்பெட்டி (இரண்டும் என்னுடைய மொழிபெயர்ப்புகள்), கொ.மா.கோ. இளங்கோ, ஜெயந்தி சங்கரின் மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவை பிறமொழி சிறார் இலக்கியத்தை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. இவை தமிழ் சிறார் இலக்கியத் துறையில் குறிப்பிடத் தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இரா. நடராசனின் ‘டார்வின் ஸ்கூல்’, ஜெயமோகனின் ‘பனிமனிதன்’, எஸ். ராமகிருஷ்ணனின் ‘கிறுகிறு வானம்’, ‘உலகிலேயே மிகச்சிறிய தவளை’, கொ.மா.கோ. இளங்கோவின் ‘ஜிமாவின் கைபேசி’, விஷ்ணுபுரம் சரவணனின் ‘வாத்து ராஜா’, விழியனின் ’ ‘மாகடிகாரம்’, பாவண்ணனின் ‘யானைச்சவாரி’ ஆகிய நூல்கள் சமகாலச் சிறார் இலக்கியப் போக்குகளைப் பிரதிபலிக்கின்றன.

குழந்தைகளுக்கு சிறார் இலக்கியப் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதற்குப் பெற்றோர் தயங்குகிறார்கள். இந்தத் தடை உடைக்கப்படும் நிலையில், குழந்தைகளே தங்களுக்கான இலக்கியத்தை மிக அதிக அளவில் உருவாக்கும் காலம் வரும். கேரளத்தைப் போல அரசும் நூலகங்களுக்குச் சிறார் புத்தகங்களை நேரடியாக வாங்கிக் கொடுக்கும் முறையைக் கொண்டுவர வேண்டும்.

- உதயசங்கர், சிறார் இலக்கியப் படைப்பாளி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x