Published : 08 Sep 2018 09:01 am

Updated : 08 Sep 2018 09:01 am

 

Published : 08 Sep 2018 09:01 AM
Last Updated : 08 Sep 2018 09:01 AM

மதுரை புத்தகத் திருவிழா 2018: இன்னும் மூன்றே நாட்கள்!

2018

புத்தகத் திருவிழாவுக்காகத் தென்தமிழக வாசகர்கள் சென்னை போக வேண்டிய நிலையிருந்த காலத்தில், மதுரையைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்களின் முயற்சியாலும், அன்றைய மாவட்ட ஆட்சியர் உதயசந்திரனின் உதவியாலும் தொடங்கிய இந்தப் புத்தகத் திருவிழா 13-வது ஆண்டாக வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது. பபாசி சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்துகொண்டிருக்கும் புத்தகத் திருவிழா செப்டம்பர் 10 அன்று நிறைவுபெறுகிறது.

இஸ்லாமிய சமய நூல்கள்


ரஹ்மத் பதிப்பகத்தில் (அரங்கு எண்: 70 & 71) மிக முக்கியமான இஸ்லாமிய சமய நூல்கள் கிடைக்கின்றன. இஸ்லாமிய மூல நூல்களான புகாரி (5 பாகங்கள்), முஸ்லிம் (4 பாகங்கள்), தப்சீர்இப்னு கஸீர் (8 பாகங்கள்), திர்மிதி (5 பாகங்கள்), நஸாயீ (3 பாகங்கள்) மற்றும் அபூதாவூத் ஆகிய நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள், இலங்கை எழுத்தாளர் அல் அஸுமத்தின் மூன்று பாகங்கள் அடங்கிய முழுமையான இஸ்லாமிய வரலாறு, கவி.காமு.செரீப்பின் அனைத்துப் படைப்புகள், ஜெஸிலாபானுவின் ‘குழந்தைகளுக்கான நம் நாயகம்’, அ.மா.சாமியின் ‘விடுதலைப்போரில் தமிழ் முஸ்லிம்கள்’, ஈரோடு தமிழன்பனின் ‘இடுகுறிப்பெயரல்ல இஸ்லாம்’ உள்ளிட்ட குறிப்பிடத் தகுந்த ஆக்கங்கள் கிடைக்கின்றன.

தக்க வைப்போம் வரலாற்றை!

இன்று தமிழகம் முழுவதும் ‘மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன்’ என்ற வாக்கியத்துடன் புத்தகக்காட்சிகள் நடைபெறுகிறது என்றால் அதற்கு வழிகாட்டிய நகர் மதுரை. ஆனால், இந்தாண்டு புத்தகக்காட்சியில் புத்தக விற்பனை மந்தமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் விற்பனையாளர்கள். “சென்னையில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விளம்பரங்கள் மூலமாகவும் வருமானம் கிடைக்கிறது. மதுரையில் அதெல்லாம் கிடையாது. இதே நிலை தொடர்ந்தால், பபாசியால் மதுரையில் நேரடியாகப் புத்தகக்காட்சி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுவிடக்கூடும். எனவே, புத்தக ஆர்வலர்கள் கூடுதல் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்கிறார்கள் பபாசி நிர்வாகிகள்.

இந்தாண்டு என்ன சிறப்பு?

புத்தகக்காட்சிக்கு வருகைபுரிபவர்களுக்கு கூப்பன் வழங்கி தினந்தோறும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்குகிறார்கள். தவிர, தினமும் 10 பேருக்கு ஆறுதல் பரிசாக ‘புத்தகம் பேசுது’ இதழின் ஆண்டுச்சந்தா வழங்கப்படுகிறது. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சாகித்ய அகாடமி, நேஷனல் புக் ட்ரஸ்ட் போன்ற முன்னணிப் பதிப்பகங்கள், மிக முக்கியமான புத்தகங்களைக் காட்சிப்படுத்தியிருக்கின்றன. “சென்னையில் பெரும் வரவேற்புபெற்ற திருவள்ளுவர் சிலையை இங்கே மதுரையிலும் வைத்துள்ளோம். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அழைப்பிதழ் வழங்கியுள்ளோம். 6 மாவட்ட பேருந்துகளிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது” என்கிறார் பபாசி நிர்வாகி புருஷோத்தமன்.

காந்தியைக் கொண்டாடுவோம்

புத்தகக்காட்சியில் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் காந்தியின் ‘சத்திய சோதனை’க்கு எப்போதுமே இடம் உண்டு. காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு 100 ரூபாய் விலையுள்ள ‘சத்திய சோதனை’ புத்தகத்தை 50 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதன் ஆங்கிலப் பதிப்பும் 50 ரூபாய்தான். ‘இந்த இரண்டு நூல்களையும் சேர்த்து வாங்கினால் காந்தி எழுதிய ‘என் வாழ்க்கைக் கதை’ என்ற நூல் இலவசமாக வழங்குகிறோம்’ என்று அறிவித்துள்ளது காந்திய இலக்கியச் சங்கம். “காந்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டும், மனித சமுதாயத்தின் வாழ்வியல் விழுமியங்களை மீட்டெடுக்க வேண்டியும் காந்தியடிகளின் நூல்கள் அனைத்தும் மறுவாசிப்புக்குக் கிடைக்கச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதன்படி, 1970-களில் குழந்தைகளுக்காக வெளியிடப்பட்ட ‘குரங்கு என் குரு’, ‘உழைக்காமல் உண்பவன் திருடன்’, ‘நான் சர்வாதிகாரியானால்’, ‘நான் தேவதூதனல்ல... சிறிய ஊழியன்’, ‘நான் மகாத்மா அல்லவே’, ‘என்னுடைய இந்தியாவின் பசி’ போன்ற நூல்களை மறுபதிப்புசெய்து வெளியிட்டுள்ளோம்” என்கிறார் காந்திய இலக்கியச் சங்கத் தலைவர் மா.பா.குருசாமி.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x