Last Updated : 30 Sep, 2018 01:53 AM

 

Published : 30 Sep 2018 01:53 AM
Last Updated : 30 Sep 2018 01:53 AM

மன்ட்டோவைப் புரிந்துகொள்ள நான்கு புத்தகங்கள்

உருது மொழிப் பாடத்தில் இரண்டு முறை தவறியவர், தனது எழுத்துகளுக்காக ஆறு முறை வழக்குகளைச் சந்தித்தவர், குடிகாரர், கெட்ட வார்த்தைகளைப் பேசுவதில் கெட்டிக்காரர், தலைக்கனம் கொண்டவர், அவ்வப்போது மனநிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்; இந்தப் பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர்தான் சாதத் ஹசன் மன்ட்டோ. ஆனால், உருது இலக்கியத்தின் முதன்மையான முகம் என்று அவருக்கு இன்னொரு பெருமையையும் வரலாறு வழங்கியிருக்கிறது. பெண்களும் பிரிவினைகாலக் குருதியும் மன்ட்டோவின் கதைகளில் நிறைந்திருக்கின்றன. சமீபத்தில், நந்திதா தாஸ் இயக்கத்தில், நவாஸுதின் சித்திக் நடிப்பில் வெளியாகியிருக்கிறது ‘மன்ட்டோ’ திரைப்படம். மன்ட்டோவின் எழுத்துக்கு அறிமுகம் இல்லாதவர்களுக்கு இது இன்னொரு ‘பயோபிக்’ என்றே தோன்றும். அவர்கள் மன்ட்டோவைத் தெரிந்துகொள்ளவும், மன்ட்டோவைத் தெரிந்தவர்கள் அவரை மேலும் நுட்பமாகப் புரிந்துகொள்ளவும் இந்த நான்கு புத்தகங்கள் உதவக்கூடும்.

காலத்தில் கரையாத கதைகள்: ‘தானா அல்லது கடவுளா... யார் சிறந்த சிறுகதை எழுத்தாளன் என்ற யோசனையுடன் இங்கே இந்த மண்ணுக்கடியில் கிடக்கிறான்’ என்று தன் கல்லறைக் குறிப்பை எழுதி வைத்த மன்ட்டோவின் ஆகச் சிறந்த படைப்புகள் சிறுகதைகளே. உருது மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப் பலரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளிலிருந்து பல்வேறு மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மன்ட்டோவின் கதைகளை ஆங்கிலத்தில் வாசிக்க விரும்புபவர்கள் காலித் ஹசன் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள ‘பிட்டர் ஃப்ரூட்’ தொகுப்பைத் தேர்ந்தெடுக்கலாம். ராமாநுஜத்தின் சிறப்பான மொழிபெயர்ப்பில் தமிழிலும் (மன்ட்டோ படைப்புகள்)  வாசிக்கலாம்.

வாழ்க்கையும் வரலாறும்: ‘பிட்டி ஆஃப் பார்ட்டிஷன்’ புத்தகம் 2013-ல் வெளிவந்தது. இது கிட்டத்தட்ட, மன்ட்டோவைப் பற்றிய ‘பயோகிராஃபி’ எனலாம். பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி வரலாற்றாசிரியர் ஆயிஷா ஜலால்தான் இதன் ஆசிரியர். மன்ட்டோ இவருக்குப் பெரியப்பா முறை. அவர் எழுதிய கடிதங்கள், தனிப்பட்ட குறிப்புகளைக் கொண்டு அவரது கதைகளுக்கும் அவர் வாழ்ந்த காலத்தின் நிகழ்வுகளுக்குமுள்ள தொடர்பை சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

‘நான் ஏன் எழுதுகிறேன்?’: அடிப்படையில், மன்ட்டோ ஒரு பத்திரிகையாளர். அவ்வப்போது பல்வேறு இதழ்களுக்கு ஆழமான கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். ஆனால், அவரது சிறுகதை பரிச்சயமான அளவுக்கு கட்டுரைகள் பரவலாகவில்லை. அந்தக் குறையைப் போக்கியிருக்கிறார் பத்திரிகையாளர் ஆகார் பட்டேல். மன்ட்டோவின் 25 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, உருது மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘ஒய் ஐ ரைட்?’ என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறார்.

நண்பர்களின் பார்வையில் மன்ட்டோ: மன்ட்டோவைப் பற்றி இஸ்மத் சுக்தாய், கிருஷண் சந்தர் போன்ற அவர் காலத்திய சக எழுத்தாளர்கள், அவரது மகள், அவரது ‘ஆபாசக் கதை’ வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி போன்றோர் எழுதிய கட்டுரைகள், ‘மன்ட்டோ சாஹேப்’ என்ற புத்தகமாகத் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. ‘மன்ட்டோவின் முகத்தில் எப்போதும் ஒரு கசப்புணர்ச்சி இருந்துகொண்டே இருந்தது’ என்று மன்ட்டோவின் நண்பர் கிருஷண் சந்தர் எழுதியிருக்கிறார். அதை மன்ட்டோவும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ‘மன்ட்டோ’ படத்தில் அந்தக் கசப்புணர்ச்சியை முகத்தில் கொண்டுவந்ததில் சித்திக் வெற்றிபெற்றிருக்கிறார்.

- ந.வினோத் குமார்,

தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x