Last Updated : 23 Sep, 2018 08:57 AM

 

Published : 23 Sep 2018 08:57 AM
Last Updated : 23 Sep 2018 08:57 AM

சாதியம் மேலும் கூர்மை அடைந்திருக்கிறது- அழகிய பெரியவன் பேட்டி

அழகிய பெரியவன் பேட்டிதொண்ணூறுகளில் உருவான தலித் எழுச்சி, சாதியக் கண்ணோட்டத்தில் மிகப் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டது. அந்தக் காலகட்டத்தில் எழுதத் தொடங்கிய அழகிய பெரியவன், முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் சிக்கல்களை முதன்மையாக எழுதிவருபவர். 2011 வரை இவர் எழுதிய கதைகளைத் தொகுத்து வெளியான ‘அழகிய பெரியவன் கதைகள்’ புத்தகமும், ‘தகப்பன் கொடி’ நாவலும் சமூகத்தின் பல்வேறு படிநிலைகளில் செயல்படும் சாதிய மனோபாவங்கள், ஒடுக்குமுறைகள், வன்முறைகளுக்கான ஆவணங்கள். இந்த முப்பது ஆண்டுகாலப் பயணத்தில் சமூகம் எதிர்கொண்ட சாதிய உரையாடல்கள் குறித்தும் சமகால உரையாடல் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் அவரோடு பேசியதிலிருந்து...

நீங்கள் எழுதத் தொடங்கிய காலத்தை ஒப்பிடும்போது இப்போது சாதிய மனநிலைகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன?

 தமிழக அரசியல் செயல்பாடுகள் தலித் மக்கள் பொதுவெளியில் புழங்குவதற்கான சூழலை உருவாக்கியிருக்கின்றனவே ஒழிய உண்மையான சாதி ஒழிப்பை நோக்கி நகரவில்லை. சாதி மாறி காதலித்துத் திருமணம் செய்துகொண்டதற்காக ஒரு இளைஞன் நடு ரோட்டில் உலகமே பார்த்துக்கொண்டிருக்க வெட்டப்படுகிறான் என்கிறபோது, கோயில் நுழைவு உரிமையைக் கேட்டதற்காகக் கொல்லப்படும்போது, உட்சாதிகளுக்குள்ளேயே சொந்த தலித் சகோதரர் தெருவில் நுழையாமலிருக்க சுவர் எழுப்பிக்கொள்ளும்போது நமது மனநிலையில் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட்டதாகச் சொல்ல முடியும்? கடந்த இருபதாண்டுகளில் சாதியம் இன்னும் கூர்மையடைந்திருக்கிறது. தனது சாதியின் பெயரை எந்த விதமான குற்றஉணர்வும் இன்றி பனியன்களிலும், வண்டிகளின் பின்னால் ‘டா’ சேர்த்துப் போட்டுக்கொள்கிற வன்மம் இந்தக் காலத்தில் உருவாகியுள்ளது.

நீங்கள் தொண்ணூறுகளில் எழுதத் தொடங்குகிறீர்கள். தலித் எழுச்சி உருவான தொடக்ககாலம் எப்படி இருந்தது?

தலித் எழுச்சி தமிழகத்தின் சாதிய மனநிலைகளில் ஒரு அசைவை ஏற்படுத்தியது. இன்னும் சொல்லப்போனால், பெரியாரிய, மார்க்ஸிய இயக்கங்கள்கூடத் தங்களின் சாதி ஒழிப்பு குறித்த அணுகுமுறையை மறுபரிசீலனைசெய்து தலித் விடுதலையோடு இன்னும் சற்று நெருக்கமாக வருவதற்கு உதவியது. தலித் மக்கள் தமது வலியையும் உரிமைகளையும் அப்போதுதான் உரத்த குரலில் பேசத் தொடங்கினார்கள். தலித் இளைஞர்களின் மனதில் இருந்த சாதியத் தாழ்வுணர்ச்சி கொஞ்சமேனும் அகன்றது.

தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு எது பிரதானம் என்று நினைக்கிறீர்கள்?

தீண்டாமை ஒழிப்பு பற்றிப் பேசுவதில் பயனில்லை. சாதி ஒழிப்புதான் முக்கியம். ஒரே வழிபாட்டிடம், ஒரே வாழிடம், ஒரே புதைகாடு, ஒரே சமுதாயக்கூடம் என்றெல்லாம் நாம் படிப்படியாக, ஆனால் சமரசமின்றி முன்னேறிப்போக வேண்டும். சாதியின் கடுமைக்கு முதன்மையான காரணம், அது இந்தியாவில் பின்பற்றப்படும் பெருமதத்தோடு, இந்தியரின் சமய வழிபாடு, திருமணம் மற்றும் இறப்புச் சடங்குகளோடு பிணைக்கப்பட்டிருப்பதுதான். அங்குதான் சாதியின் அசுரபலம் ஒளிந்திருக்கிறது. வெளியிலிருந்து வந்து இங்கே காலூன்றிய மதங்கள் சாதியைப் பேசவில்லை என்றாலும் அம்மதங்களுக்கு மாறிச்சென்று பின்பற்றுபவர்களின் சாதிய மனம் மாறாததால் அங்கும் ஊடுருவியிருக்கிறது. இப்படிப்பட்ட சாதியை ஒழிக்க அனைத்துத் தளங்களிலுமான உரையாடல்கள் மட்டுமின்றி உறுதியான நீண்டகால நடவடிக்கைகள் தேவை. சாதியை ஒழிக்க வேண்டும் என்று இங்கு பேசுகிற பல அமைப்புகள் மீண்டும் மீண்டும் சாதி ஒழிப்பை தலித்துகளின் மத்தியிலேயே பேசிவருகின்றன. ஆனால், சாதி ஒழிப்பைப் பற்றி முதன்மையாக தலித் அல்லாதவர்களிடம் பேச வேண்டும். பள்ளிகளிலிருந்து தொடங்க வேண்டும்.

புழக்கத்தில் அதிகரிக்கும் ‘தலித் பிராமணியம்’ சொல்லாடலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அரசாங்கப் பதவியில் இருக்கும் தலித் மக்களைக் குறிக்க ‘கவர்ன்மென்ட் பிராமணன்’ என்ற கேலிச்சொல் ஒன்று உண்டு. அதே காழ்ப்புணர்வின் தொடர்ச்சிதான் இது. தலித்தியம் வேறு..  பிராமணியம் வேறு. இரண்டையும் முடிச்சிட முடியாது. அப்படி முடிச்சிடுவது உள்நோக்கமுடையது. ‘காந்தியும் காங்கிரஸும் தீண்டத்தகாதவர்களுக்குச் செய்தது என்ன?’ என்ற தனது புகழ்பெற்ற நூலில் பிராமணியம் என்றால் என்ன என்று அம்பேத்கர் ஆறு கோட்பாடுகளைத் தருகிறார். அவற்றில் ஒரு கோட்பாட்டைக்கூட தலித்துகளோடு பொருத்தவே முடியாது.

தமிழ்நாட்டில் சமகால தலித் அரசியல் என்னவாக இருக்க வேண்டும்?

தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டில் 30% பிற்படுத்தப்பட்டவர்க்கு, 20% மிகவும் பிற்படுத்தப்பட்டவர்க்கு, 18% பட்டியலினத்தோர்க்கு, 1% பழங்குடியினருக்கு என்று இடஒதுக்கீடு இருக்கிறது. இடஒதுக்கீட்டுக்கு அப்பாற்பட்டு 31% இடங்கள் இருக்கின்றன. இதில் தலித்துகளுக்கான 18% ஒதுக்கீட்டை மட்டும் சுட்டி எப்படி ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டையும் தலித்துகளோடு இணைத்துப் பேசுகிறார்கள்? அப்படியென்றால், நிறைய நாம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அம்பேத்கரிய பெரியாரிய கருத்துப்பரவலை அடிநிலை வரை கொண்டுசெல்ல வேண்டும்.

தலித் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்துதலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 அப்படி அடையாளப்படுத்தப்படுவதில் எனக்குச் சங்கடம் ஏதுமில்லை. அது மறைக்கப்பட்டாலும் சாதி மனம் கொண்ட நமது துப்பறிவாளர்கள் அதைக் கண்டுபிடித்து அறிவித்துவிடுவார்கள். ஆனால், நான் எதிர்ப்புக்குரலாகத் தூக்கிப்பிடித்த அந்த அடையாளத்தை என்னை ஒதுக்குவதற்காகப் பயன்படுத்துவதை எதிர்க்கிறேன். தலித் அடையாளம் சார்ந்த விஷயங்களுக்கு மட்டும் என்னை அணுகும்போது ‘தலித் எழுத்தாளர்’ என்ற எல்லைக்கோடு ஒரு இரும்புக் கூண்டைப் போல வலுவாகியிருப்பதாக உணர்கிறேன்.

அம்பேத்கர் குறிப்பிட்டதுபோல சாதி முறையை எதிர்த்துப் போராடுவதற்கு இலக்கியம் சிறந்த வழியாக இருக்கிறதா?

மக்களுடன் பேசுவதற்கான ஊடகம் தலித்துகளிடம் இல்லை. வெகுஜன இதழ்களின் முதலாளிகளாகவும், சினிமா தயாரிப்பாளர்களாகவும் தலித்துகள் இல்லாதபோது ஊடகங்களும் திரைப்படத் துறையும் எப்படித் தலித்தியம் பேசும்? ஒரே இடம் இலக்கியம்தான். நிச்சயமாக போராடுவதற்கான சிறந்த வழிதான் அது. சாதியை ஒரு மனநிலை என்றார் அம்பேத்கர். இலக்கியம் மனதோடு அந்தரங்கமாக உறவாடும் வல்லமை பெற்றது. அது நிச்சயமாக சாதிமுறையை எதிர்த்துப் போராடும் என்று நம்புகிறேன்.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x