Published : 10 Mar 2018 11:55 AM
Last Updated : 10 Mar 2018 11:55 AM

தொடுகறி: மாற்று(ம்) திறனாளிகள்

மாற்று(ம்) திறனாளிகள்

சே

லத்தைச் சேர்ந்த கவிஞர் ஏகலைவன், தனது 13-ஆவது வயதில் ஏற்பட்ட ரயில் விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்தவர். ஆனாலும், நம்பிக்கையை இழக்காமல் தையல்காரராகப் பணிசெய்துவந்தவர், புத்தகம் மீதான காதலாலும் எழுத்தார்வத்தினாலும் தான் செய்துவந்த தையல் தொழிலை விடுத்து, ‘வாசகன் பதிப்பக’த்தை 2004-ல் தொடங்கினார். இதுவரை 80-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருப்பதோடு,

30-க்கும் மேற்பட்ட நூல்கள் பல்வேறு விருதுகளை யும் பரிசுகளையும் பெற்றுள்ளது இன்னொரு சிறப்பாகும்.

“எனது பதிப்பகத்தின் மூலமாக இதுவரை நான்கு மாற்றுத்திறனாளிகளின் நூல்களை வெளியிட்டிருக் கிறேன். மேலும், எனது புத்தகத் தயாரிப்புப் பணியை இரண்டு மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு வழங்கி வருகிறேன். பதிப்பகத் தொழிலால் எனக்குப் பொருளாதாரச் சிக்கல்கள் உண்டானாலும், நல்ல புத்தகங்களை வெளியிடுவதில் மனதளவில் ஒரு நிறைவு” என்று சொல்லும் ஏகலைவன், வரும் மே மாதத்தில் ஒரே மேடையில் 15 நூல்களை அதிரடியாக வெளியிட உள்ளார். அடிச்சுக் கிளப்புங்கள் ஏகலைவன்!

யூடியூப் விமர்சகி

கோவில்பட்டியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி யான அபிநயா ஸ்ரீகாந்த், படிக்கிற நாட்களிலேயே புத்தக வாசிப்பில் ஆர்வமாகி, கவிதைகளும் எழுதத் தொடங்கினார். திருமணத்துக்குப் பிறகு துபாய் சென்றவர், பல இதழ்களில் கவிதைகளையும் ஊடகங்களில் நூல் அறிமுகங்களையும் செய்துவந்தார். தற்போது சென்னைக்கே வந்துவிட்ட பிறகு, தான் வாசித்த நல்ல புத்தகங்களைப் பலரும் அறியும்வகையில், ‘யூடியூ’பில் அறிமுகம் செய்துவருகிறார். “இதுவரை 20-க்கும் மேற்பட்ட கவிதை, கட்டுரை, சிறுகதை, சிறுவர் இலக்கிய நூல்களை அறிமுகம் செய்திருக்கிறேன். இன்னமும் தொடர்ந்துசெய்வேன். புத்தக வாசிப்பு எனக்கு சுவாசிப்பு மாதிரி...” என்று கவிதையாய்ச் சொல்கிறார் அபிநயா ஸ்ரீகாந்த்.

வாசிப்பை வளர்க்கும் போட்டி

தேனியில் தொடர்ந்து நூல் அறிமுகக் கூட்டங்களையும், வளரும் படைப்பாளிகளுக்கும், சமூகச் செயல்பாட்டாளர்களுக்கும் விருதுகளை வழங்கி உற்சாகப்படுத்திவரும் தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை அமைப்பு, புத்தக வாசிப்பை அதிகரிக்கவும் இலக்கியம் சார்ந்த கவனக்குவிப்பினை ஊக்கப்படுத்தும் வகையிலும் புதுமையான போட்டி ஒன்றினை அறிவித்துள்ளது. “நாவல், சிறுகதை, கவிதை நூல்கள் தலா 7 மற்றும் 4 கட்டுரை நூல்கள் என மொத்தம் 25 நூல்களைப் படித்துவிட்டோ, அதேபோல் 25 நாவல்களைப் படித்துவிட்டோ, அல்லது மூலதனம் நூலின் முதல் பாகத்தைப் படித்துவிட்டோ கட்டுரை எழுத வேண்டும். போட்டிகளுக்கான கால அளவு 100 நாட்கள் மட்டுமே. இந்த மூன்று பிரிவுகளிலும் தேர்ந்தெடுக்கப்படும் 50 பேருக்கும் போட்டிக்கான நூல்கள் இலவசமாகவே அனுப்பிவைக்கப்படும். நூல்களை முழுமையாக வாசித்துவிட்டுக் கட்டுரை அனுப்பும் அனைவருக்குமே பரிசு உண்டு. கட்டுரையின் தன்மைக்கு ஏற்ப சிறப்புப் பரிசுகளும் உண்டு” என்கிறார், அமைப்பின் பொதுச்செயலாளரான விசாகன். போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள், panmugamedai@gmail.com எனும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

கொச்சி புத்தக அனுபவம்

சென்னையிலும் வாய்க்குமா?

கொச்சி சர்வதேசப் புத்தகத் திருவிழாவைத் தமிழகத் தில் நடைபெறும் எந்தவொரு புத்தகத் திருவிழாவோடும் ஒப்பிட முடியாது. புத்தகங்களை வாங்குவதைத் தாண்டி, வாசகர்களுக்கு ஓர் இனிமை யான அனுபவத்தைத் தரும் வகையில் நடத்தப்படுகிறது கொச்சி புத்தகத் திருவிழா. நுழைவுக் கட்டணம் இல்லை. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இடத்தில் ஏறத்தாழ 200 அரங்குகள் அமைத்திருந்தனர். தனித்தனிப் பிரிவுகளாய் புத்தக அரங்குகளைப் பிரித்துள்ளனர். குழந்தைகள் பிரிவு, இலக்கியம், இடதுசாரிப் புத்தகங்கள், பொதுப் புத்தகங்கள் என அரங்குகள் இருந்தன. பெரும்பாலும் பதிப்பாளர்கள் மட்டுமே அரங்கமைத்துள்ளனர். அதனால் சென்னைப் புத்தகக் காட்சி போல 800 அரங்குகளைச் சுற்றிவருவதன் சோர்வை அங்கு உணர முடிவதில்லை.

அரங்கின் நடுவே கிட்டத்தட்ட 200 பேர் அமர்ந்து ரசிக்கக்கூடிய புத்தக விமர்சனக் கூட்டம் அல்லது எழுத்தாளர் சந்திப்புகள் என சர்வேதேசப் புத்தகக் காட்சிகளில் மட்டுமே காணக்கிடைக்கக்கூடிய இவற்றை மிகப் பிரமாதமாய் நடத்துகின்றனர். அரங்கு நெடுகிலும் பல எழுத்தாளர்களுடைய புகைப்படங்களைப் பார்க்க முடிந்தது மகிழ்ச்சியளித்தது.

பல அரங்குகளில் ஓவியர்கள் ஓவியங்களை வரைந்துகொண்டிருந்ததையும் காண முடிந்தது. கேரளத்தில் ஒரு கும்பலால் கொலைசெய்யப்பட்ட பழங்குடி வாலிபர் மதுவைப் பல ஓவியங்களில் பார்க்க முடிந்தது, சமகால அரசியலோடு அவர்கள் பயணிப்பதை உணர்த்தியது. உணவரங்கு தனியே விசாலமாய் நியாமான விலையில் இருந்தது. சென்னையில் இதைப் போன்ற ஒரு புத்தகக் காட்சியை நடத்த பபாசி திட்டமிட வேண்டும்.

-அனுஷ், பதிப்பாளர்.

தொகுப்பு: மு.மு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x