Last Updated : 07 Mar, 2018 09:15 AM

 

Published : 07 Mar 2018 09:15 AM
Last Updated : 07 Mar 2018 09:15 AM

எமதுள்ளம் சுடர் விடுக 32: விரிவு பெறும் அறநூல்!

மே

லாண்மை என்ற சொல், நிறுவனம் மற்றும் நிர்வாகத் திறன், திட்டமிடுதல், செயல்படுத்தல் போன்ற பல்வேறு திறமைகளோடும், திறமைகளை உருவாக்கிக் கொள்வது முதலான அம்சங்களோடும் தொடர்புடையது என்று புரிந்துகொள்ளலாம். இதை ஒரு விஞ்ஞானமாகவும் வித்தையாகவும் குளிரூட்டப்பட்ட அரங்குகளில் வகுப்பெடுப்பதும் கூட நடந்துகொண்டிருப்பதை நாம் அறிவோம்.

இது 20-ம் நூற்றாண்டின் இறுதியில் இறக்குமதி செய்யப்பட்ட கார்ப்பரேட் கடவுளின் வரம் என்று கூட விதந்தோதப் படுகிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உலகம் முழுவதும் இருந்த, இருக்கிற எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஞானிகள், தனி மனிதர்க்கும், தனி மனிதர்கள் குழுமிய சமூகத்துக்கும் அவர்களின் உள்ளார்ந்த மலர்ச்சிக்கும் முழுமைக்கும் சொல்லிய சிந்தனைத் திரட்டுகளில் மேலாண்மை குறித்த பல வெகுமதிகளை நாம் காணக் கூடும்.

பிரச்சினை என்னவென்றால், நவீன ஊடகம் மற்றும் அரங்குகளில் கோட் போட்டுக்கொண்டு பழைய மேதைகள் பேசியதில்லை. கோட் போட்டுக்கொண்டவர்கள் அதை நவீன விஞ்ஞானமாக்கினார்கள். என்றாலும் மேலாண்மையில் நவீன கோட்பாடுகளாகிய ஒருமித்த ஞானம், அதிகாரப் பிரிவு, பிக்மாலியன் விளைவு, பரிசோதனைச் சந்தை, தகுதிக்கு மீறிய பதவி உயர்வுகள், நச்சரிக்கும் மேலாண்மை, பர்க்கின்சன் விதி போன்றவைகளைத் தொகுத்து அவைகளுக்குப் பொருத்தமான இலக்கியச் சான்றுகளோடும், படிக்கத்தக்க சுவாரஸ்யமான மொழியில் தந்திருப்பவர் எழுத்தாளர் வெ.இறையன்பு.

அளவிலும் உள்ளடக்கத்திலும், எடுத்துக்கொண்ட பொருளுக்கு நியாயம் செய்யும் அடர்த்தியிலும் பெரிய அளவில் 600 பக்கங்களுக்கு மேலாக வெளிவந்திருக்கிறது, ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற பெயரில் வெ.இறையன்புவின் ஆய்வு நூல். ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ பதிப்பித்துள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் ஏராளமான புகைப்படங்கள், ஓவியங்கள், நூலின் உள்ளடக்கத்தோடு ஒன்றச்செய்கின்றன.

நேர்த்தியும் அழகும்

வணிகம், ஒரு சமூகப் பணி என்று கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அறம் என்ற ஒன்று வணிகத்துக்கும் இருந்தது. ‘நீ எந்தப் பொருளை வாங்க ஆசைப்படுகிறாயோ, அதையே அந்தத் தரத்தில் விற்பனை செய்’ என்பது தமிழ் அறம், வணிகத்துக்கு உணர்த்தியது.

வர்த்தகம் பற்றியே அதிகம் சிந்திக்கும் இந்த நூலும், ஊடாக மேன்மையான விழுமியங்களைப் பேசுகிற அற நூலாக விரிவு பெறுவது விந்தைதான். காரணம், ஒன்றை இன்னொருவருக்குப் பரிமாற்றம் செய்கிற பணியான வியாபாரத்துக்கு அற்புத தத்துவ விளக்கங்களால் மேன்மை செய்வதாக நூல் அமைந்துவிட்டது. இதுக்குக் காரணம் இறையன்புவின் மிகப் பரவலான வாசிப்பும், வாசிப்பைப் பொருத்தமான இடத்தில் வைத்துச் செல்கிற நேர்த்தியும்தான். யோசிக்கும்போது, எதில்தான் நேர்த்தியும் அழகும் இல்லை?

வேளாண்மைக்கும் மேலாண்மை கூறுகள் அதிகம் பொருந்துகின்றன. இக்கருத்தைச் சொல்ல வந்த இறையன்பு, மிக அழகிய கம்ப வரிகளை உவமை காட்டுகிறார்: ‘சின்ன வயலைச் சொந்தம் கொண்ட ஒருவன், எத்தனைக் கவனமாக அந்த பூமியைப் பராமரிப்பான்? பயிரைப் பூச்சிகளிடம் இருந்து காப்பாற்றி கதிரை கண்விழித்து வளர்த்துப் பராமரிப்பது போல, தசரதன் தன் நாட்டையும் மக்களையும் போஷித்தான் என்பதில் மேலாண்மை இருக்கிறதா? இருக்கிறது. சரியான பயிரை சரியான நேரத்தில் விதைத்தல், நீர் மேலாண்மை, அறுவடைக்குப் பிறகு பாதுகாத்தல், உரிய விலை வரும் வரை இருப்பு வைத்தல்... எத்தனை?

தண்ணீர் மேலாண்மை

‘மூன்றாம் உலக யுத்தம், தண்ணீர் காரணமாகவே வரப்போகிறது’ என்கிறார்கள் உலக விஞ்ஞானிகள். காவேரி விவசாயிகள் பல்லாண்டுகள் முன்னமேயே இதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். புறநானூற்றுப் புலவர் ஒருவர் ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்று சொன்ன வரியை எடுத்துச் சொல்லும் இறையன்பு, விளைச்சலுக்கு உதவுபவர்கள் மக்களுக்கு உயிரும் உடலும் தருகிறவர்கள் என்ற தமிழரின் ‘நீர் மேலாண்மை’யை எடுத்துச் சொல்கிறார்.

அரசனைச் சுற்றி (இப்போது அமைச்சர்கள்) பொதுவாக ஜால்ராக் கூட்டமே பேரொலி செய்யும். ஓர் அசல் புலவன், மன்னனுக்கு, ‘அரசே, நீயும் உன் நாடும் நிலைத்திருக்க வேண்டும் என்றால், நீர் ஆதாரத்தை உருவாக்கு’ என்கிறான். பேராசிரியர் தொ.பரமசிவம் சொல்வது நினைவுக்கு வருகிறது. ‘நெல் பயிருக்கு ஊடு பயிராக அவரை, துவரை, கீரை, காய் என்று எத்தனை பயிர் செய்து நீரைச் சேமித்தார்கள் நம் மூதாதையர்கள்’ என்பார் அவர். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும்பொசியும் வகையே, தமிழ் நீர் மேலாண்மை.

தலைவர்கள், அரசுகள் எல்லோர்க்கும் நல்லவர்களாக நடந்துகொள்ளலாமா என்றால் கூடாது. திருடர்கள், புதுயுகத் திருடர்களான மணல் திருடர்கள், பாறைத் திருடர்கள், வங்கித் திருடர்கள், பல்கலைக்கழகத் திருடர்கள், நிலக் கொள்ளையர்கள் இவர்களின் நண்பர்களாக ஆட்சியாளர், இருக்க முடியுமா?

கன்பூசியஸின் கருத்து

இறையன்பு, சீனச் சிந்தனையாளர் கன்பூசியஸின் கருத்து ஒன்றைச் சொல்லி, தலைமைப் பண்பைத் திசை காட்டுகிறர்.

சீடன்: நகரத்தில் உங்களை வெறுத்தால்?

கன்பூசியஸ்: எல்லோரும் வெறுப்பது நல்லதல்ல.

சீடன்: உங்களை எல்லோரும் விரும்பினால்?

கன்பூசியஸ்: எல்லோரும் விரும்புவதும் நல்லதல்ல.

சீடன்: அப்படியென்றால்?

கன்பூசியஸ்: நல்லவர்கள் நம்மை நேசிக்க வேண்டும். கெட்டவர்கள் வெறுக்க வேண்டும். அதுவே சரியான வாழ்க்கை முறை.

ஆரம்பத்தில் அடக்கு

முள் மரம் இளமையாக இருக்கும்போதே, அதைவெட்டி எறிய வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதை ஒரு கதையின் மூலம் விவரிக்கிறார் ஆசிரியர்.

முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரம். 1918 செப்டம்பர் 28. டான்டே என்கிற பிரிட்டிஷ் வீரன் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தான். ஒரு பதுங்கு குழியில் கார்பரல் ஒருவன் குற்றுயிருடன், ரத்தம் வழியக் கிடந்தான். அன்று பல பேரைச் சுட்டுக் கொன்ற அவனுக்கு, அந்தக் கார்பரலைச் சுட்டுத் தள்ள 2 நிமிடங்கள் போதும். ஏனோ அவன் அதைச் செய்யவில்லை. 1940-ம் ஆண்டு ஒரு தொழிற்சாலைக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார் டான்டே. நாஜிப் படையினர் குண்டு போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த அழிவைக் கண்டு கண்ணீர் வடித்தார். அந்தக் கார்பரல் பிற்காலத்தில் என்ன ஆகப் போகிறான் என்பது அப்போதே தெரிந்திருந்தால், அவனை அன்றே கொன்றிருப்பேன் என்று நினைத்துக் கொண்டார். ஏனெனில், டான்டே பரிதாபப்பட்டு விட்டுவிட்ட அந்த கார்பரல்தான் ஹிட்லர்.

கவிதை கற்றுத் தரும் துறவி

‘ஜப்பானியக் கவிதையை எப்படி எழுதுவது?’ என்ற கேள்விக்கு பதில் சொல்லும் ஒரு துறவி, சீனக் கவிதையை உதாரணம் காட்டுகிறார். ‘ஒரு கவிதைக்கு நான்கு வரிகள் என்றால், முதல் வரி தொடக்கம். 2-ம் வரி தொடர்ச்சி. 3-வது வரி விளக்கம். 4-வது வரி அனைத்தையும் இணைக்கும் கவிதை.

‘க்யோடோவின் பட்டுவியாபாரிக்கு இரண்டு பெண்கள்

பெரியவள் இருபது சிறியவள் பதினெட்டு

சிப்பாய் தன் வாளால் வதைப்பான்

அப்பெண்களின் வாள்கள் அவர்கள் கண்கள்!’

நிர்வாகம் முட்டாள்களைத் தேடக்கூடாது என்பதற்கு ஒரு சுவாரசியமான கதை சொல்கிறார் ஆசிரியர். மாமன்னர் அக்பர் ஆயிரக்கணக்கான புறாக்கள், மான்களை வளர்த்தவர். அவற்றோடு பழகியவர். மாமன்னர் என்ற பெருமை இல்லாமல் பழகுவதற்கென்றே பீர்பாலைத் துணையாகக் கொண்டவர்.

ஒரு நாள் பீர்பாலிடம் அக்பர், ‘‘நம் நாட்டில் நிறைய முட்டாள்கள் இருக்கிறார்களாமே. இன்றைக்கு நாம் நாலு பேரையாவது பார்த்துவிடுவோம்’’ என்றாராம். (ஆட்சியாளர்கள் அவர்கள் ஆண்ட மக்களைப் பற்றிச் சரியாகவே எடை போடுகிறார்கள் இன்று வரைக்கும்)

அப்போது ஒரு மனிதன் குதிரை மேல் சவாரி செய்துகொண்டு வந்தான். அவன் தலையில் ஒரு கட்டு விறகு இருந்தது. பீர்பால் ‘‘ஏன் தலையில் விறகு சுமக்கிறாய்?’’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘‘இதுவிலை உயர்ந்த குதிரை. என்னையும் சுமந்து விறகையும் சுமந்தால் அதிக சுமையாக அல்லவா ஆகிவிடும்?’’ என்றான். பீர்பால் அக்பரிடம், ‘‘இதோ முதல் ஆள்’’ என்றார். அடுத்து, சாலையில் தொலைத்த நாணயத்தை தேடிக்கொண்டிருந்தான் ஒருவன். ‘‘எங்கு தொலைத்தாய்?’’ என்றார் பீர்பால். ‘‘அங்கே தொலைத்தேன்’’ என்றவனிடம், ‘‘அப்புறம் ஏன் இங்கே தேடுகிறாய்?’’ என்றார் பீர்பால். ‘‘இங்கேதானே வெளிச்சம் இருக்கிறது’’ என்றான் அவன்.

‘‘இரண்டாவது ஆளையும் பார்த்துவிட்டோம் மன்னா!’’

‘‘சரி. 3-வது ஆள்?’’

‘முட்டாள்களைத் தேடி இத்தனை நேரம் அலைந்த நான்தான் அந்த 3-வது முட்டாள்!’’

‘‘அப்புறம். அந்த நான்காவது முட்டாள்!’’

‘‘என்னோடு சேர்ந்து முட்டாளைத் தேடிய நீங்கள்தான் அந்த 4-வது முட்டாள்!’’ என்று பீர்பால் சொன்னதைக் கேட்டு அக்பர் சிரித்தாரராம்.

மேலாண்மையில் எத்தனை வகைகள் உண்டோ, உள்ளடக்கம் உண்டோ அத்தனையையும் விளக்கிச் சான்றுகள் காட்டி, உலக இலக்கிய மேற்கோள்களோடு இறையன்பு எழுதி இருக்கும் இந்தப் புத்தகம் துறை சார்ந்தோர்க்கு மட்டும் இன்றி, வாசிப்பின் சுவை அறிந்த அனைவருக்கும் மகிழ்ச்சி தரும்

- இன்னும் சுடர்விடும்...

எண்ணங்களைப்பகிர: writerprapanchan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x