Published : 10 Mar 2018 12:04 PM
Last Updated : 10 Mar 2018 12:04 PM

வழிகாட்டும் வாழ்க்கைப் பயணம்

க்களாட்சியின் மூன்று தூண்கள் என்று சட்டமியற்றும் அவை, அரசு நிர்வாகம் மற்றும் நீதித் துறை ஆகியவற்றைக் குறிப்பிடுவதுண்டு. மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றைத் தனது வாழ்க்கைப் பாதையாகத் தேர்வுசெய்வது வழக்கம். விதிவிலக்காக, இரண்டு துறைகளில் ஒருசேர முத்திரைகள் பதிப்பவர்கள் உண்டு. ரயில்வே துறை இணையமைச்சராகப் பதவி வகித்த அரங்க வேலு, அதற்கு முன்பு அரசு அதிகாரியாக நிர்வாகத்திலும் தனது முத்திரையைப் பதித்தவர். பணியிடையே சட்டப் படிப்பை யும் முடித்தவர். ஒவ்வொரு துறையிலும் அவர் கற்றதும் பெற்றதும் மற்றொரு துறையில் பங்களிப்பதற்கும் எவ்வாறு உதவியாக இருந்தன என்பதற்கு அவர் எழுதியிருக்கும் என் வாழ்க்கைப் பயணம் என்ற சுயசரிதை நூல் உதாரணம்.

உலகிலேயே அதிகத் தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனமான இந்திய ரயில்வே துறை நஷ்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த போது, இணையமைச்சராகப் பொறுப்பேற்ற அவரது துரித நடவடிக்கைகளும் வியூகங்களும் ரயில்வே துறையை நன்னம்பிக்கையின் திசைநோக்கிச் செலுத்தின. இந்த நிர்வாகத் திறனுக்கு அவரது ஆட்சிப் பணித் துறை அனுபவங்களும் காரணம். அந்த அனுபவங்கள், ஒவ்வொரு சிக்கலையும் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கின்றன. தென் மாவட்டங்களில் சாதி மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர் அரங்க வேலு. குக்கிராமத்தில் ஓர் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்த அவர், தனது ஒவ்வொரு வளர்ச்சிநிலையையும் உழைப்பாலேயே கடந்துவந்திருக்கிறார். ஆட்சிப்பணித் துறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இந்த சுயசரிதை ஊக்கமூட்டும் புத்தகமாகவும் அமைந்திருக்கிறது. இந்த சுயசரிதையை எழுதத் தூண்டியவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். பாம்பின் கால் பாம்பறி யும் என்பதுபோல, கல்வியறிவின் துணைகொண்டு கடும் உழைப்பால் மட்டுமே வளர்ந்தவர்களுக்குத்தானே அதன் வலிகளும் சுகமும் தெரியும்.

- இளவேனில்

என் வாழ்க்கைப் பயணம்,

அரங்க வேலு ஐ.ஏ.எஸ் (ஓய்வு),

படி வெளியீடு, சென்னை- 78

விலை ரூ.250

87545 07070

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x