Published : 19 May 2019 08:58 am

Updated : 19 May 2019 08:58 am

 

Published : 19 May 2019 08:58 AM
Last Updated : 19 May 2019 08:58 AM

நாடக உலா: கதிர்வேலன் கணக்கு

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழாவை கலகலக்க வைத்த நாடகங்கள் பற்றிய ஒரு பார்வை.

கதிர்வேலன் கணக்கு


கதிர்வேலனின் கணக்கை எழுதி, இயக்கியிருப்பது கார்த்திக் கவுரிசங்கர் என்ற இளைஞர்.

நடுவே உயரமான தூண். இரு பக்கமும் உட்கார்வதற்கு மேடைகள், பஸ்ஸ்டாண்ட். கதை வளரும்போது பிரதானமாக ஹால், இரு பக்க ஓரங்களிலும் சின்ன தட்டி, இந்தப் பக்கம் ஒரு கட்டில். ஹேங்கரில் தொங் கும் சட்டை. வீட்டுக்குள் வந்து போகும் வழி. மொத்தத்தில் மியூசியம் தியேட்டரில் நவீன நாடகம் பார்க்கும் உணர்வு.

வாழ்க்கையில் எல்லாம் ஒரு வடிவத்தில் அமைந்திருக்கிறது. அதுவொரு உயரிய சக்தியின் கணக்கு. அந்தக் கணக்கின் உள்ளே வாழும் மனிதனும் தன் வாழ்க்கையில் பல கணக்குகளை தீர்க்கப் பார்க்கிறான்.

அன்புக் கணக்கு, நன்றிக் கணக்கு, பாவக் கணக்கு, தர்ம கணக்கு, நியாயக் கணக்கு. இந்தக் கணக்குகளை உள்ளடக்கிய ஒரு நாடக வடிவமே ‘கதிர்வேலன் கணக்கு’. - இது டைரக்டர் கொடுத்திருக்கும் கதைச் சுருக்கம். கணக்குப் புரிகிறதா?

புரிந்தால், நீங்கள் ராமானுஜம்.

நாடகத்தின் நிகர லாபம், மற்ற சில நாடகங்களில் சின்ன ரோல்களில் நடித்துவந்த சூரஜ் என்பவரின் நடிப்பு விஸ்வரூபம்.

பஸ் ஸ்டாண்டில் பாட்டில் திறந்து குடித்துக்கொண்டே இருப்பவர், திடீரென்று மவுனம் கலைந்து, போதை தெளிந்து கொல்லணும்... என் அப்பாவைக் கொல்ல ணும் என்று வசனம் பேசி, அதற்கான காரணமாக தனது இளம் பருவத்தில் சந்திக்க நேரிட்ட அவமான அவஸ்தைகளை ஏற்ற இறக்கங்களுடன் நீள வசனமாகப் பேசியிருப்பது அருமை.

பள்ளி ஆசிரியரின் வேடத்தை டைரக்டர் கார்த்திக் கவுரி சங்கர் ஏற்றிருக்கிறார். தாடி வைத்த, கண்டிப்பான ஆசிரியராக இவரின் நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி. ஆனால், தனது கடந்தகாலப் பழிகளை சுமக்க நேரிடும் கடைசிக் கட்டங்களில் கொஞ்சம் திணறவே

செய்கிறார். பஸ் ஸ்டாண்டில் கதிராக அறிமுகமாகி நாடகத்தை நகர்த்திச் செல்பவராக சபரீஷ். வசனங் களைத் தெளிவாகப் பேசுவதில் இவருக்கு முதல் மார்க்.

லேடி ஆர்ட்டிஸ்ட் இல்லாத கதிர்வேலன் ஒரு வகையில் தமிழ் நாடக மேடைக்கு புது சிலபஸ்.

வலைக்குள் சிக்கிய மீன்

40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது டி.வி.ராதாகிருஷ்ணனின் சவும்யா தியேட்டர்ஸ் நாடகக் குழு. இக்குழுவினர் இதுவரை 26 நாடகங்களை மேடையேற்றியிருக்கிறார்கள். கண்மூடித் திறக்கும்முன் பொன்விழா வந்துவிடும். ஃபாத்திமா பாபு, ‘வலைக்குள் சிக்கிய மீன்’ நாடகத்தில் நடிப்புப் பிரிவின் லீடர். வனஜாவாக அம்மா வேடமேற்று முழு நாடகத்தையும் தோளில் சுமக்கிறார். கல்லூரி படிக்கும் மகளை செல்லம் கொடுத்து வளர்க்கும்போது பாசத்தையும், முகநூல் பழக்கம் காரணமாக அவள் ஆபத்தை சந்திக்கும்போது கோபத்தையும், போலீஸ் ஸ்டேஷன் வரை குடும்பம் போகநேரிட்டதும் ஆற்றாமையையும்.. இப்படி பல்வேறு உணர்ச்சிகளையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார் ஃபாத்திமா பாபு. செய்தி வாசிப்பாளரின் வசன உச்சரிப்பைப் பற்றி தனியாகக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் டி.வி.ராதாகிருஷ்ணன் இளைய சமுதாயம் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி, சிக்கி சீரழிவதை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்த வீட்டில் கல்லூரியில் படிக்கும் மகள் (ஹேமமாலினி) போனும் கையுமாகவே அலையும் நிகழ்கால உதாரணம். முகநூலில் பொழுதுபோக்கு விளையாட்டாக, ஒருவன் (ஆதித்யா) வலை விரிக்க, சிக்குகிறாள் மகள். அம்மாவும், வீட்டோடு மாமாவாக இருக்கும் அவரின் அண்ணனும் சிங்கப்பூருக்கும், மகன் பெங்களூருக்கும் சென்றுவிட, மகள் தனியாக இருக்கும் நேரம் அந்த பையன் வந்து....

பணியிடத்தில் கம்ப்யூட்டருக்கு ஈடுகொடுக்க முடியாமல் விஆர்எஸ் எழுதிக் கொடுத்துவிட்டு, வரும் 30 லட்ச ரூபாய் பணத்தை சேவிங் கணக்கில் போட்டுவிட்டு அடுத்த நாளேவா அண்ணனுடன் விமானம் ஏறிவிடுவது? வங்கிப் பணம் அபேஸ் ஆனதும், சைபர் கிரைம் போலீஸில் புகார், விசாரணை, குற்றவாளி பிடிபடல் என்று எல்லாமே மாமூல்.

இன்றைய முக்கியமானதொரு பிரச்சினையை மைய மாகக் கொண்டிருப்பதில் நாடகாசிரியர் - டைரக்டரின் சமூக அக்கறை தெரிகிறது. ஆனால், சம்பவங்கள் எல்லாமே முன்கூட்டியே ஊகிக்கக் கூடியதாக உள்ளன.

அதேபோல் ‘இதுதான் பிரச்சினை, இதுவே தீர்வு’ என்பது பாடப் புத்தகம் மாதிரி விவரிக்கப்படுகிறது. நாடகச் சுவை மிஸ்ஸிங்.

ரயில் சிநேகம்

எட்டு வருடங்களாக ரயிலே ஓடாத, வைகுந்தபுரம் கிராமத்து ரயிலடியை மேடையில் கண்முன் நிறுத்திய கலை இயக்குநர் மோகன் பாபுக்கு வந்தனம். பிளாட்ஃபாரம், உட்கார சிறுமேடை, தண்டவாளம், கற்கள், ஓரத்தில் மாரியம்மன் கோயில் எல்லாமே அச்சு அசல். ரயில்வே ஸ்டேஷனை தத்ரூபமாக காட்டிவிட்டாலே முக்கால் கிணறு தாண்டிவிடலாம் என்று கதை - வசனம் எழுதி இயக்கியிருக்கும் விவேக் சங்கர் நினைத்துவிட்டது போல் தெரிகிறது.

நாடகத்தில் ஏகத்துக்கு கிளைக் கதைகள். அதைவிட அதிகமாக முடிச்சுகள். ஒரு கட்டத்தில், அவசர அவசரமாக முடிச்சுகள் அவிழ்க்கப்பட, சிடுக்குகள் நிறைந்த நூல்கண்டு நம்மை சிறைப்படுத்துகிறது!

டி.டி.சுந்தரராஜன், விஸ்வநாதன் ரமேஷ், கிரீஷ் அய்யாபத் என்ற நடிப்பு பில்லர்கள் மூவரும், ஏற்கும் பாத்திரத்துக்கு வஞ்சகம் செய்யாதவர்கள்.

ஒவ்வொரு நாளும் ரயில் போவதும் வருவதும் தன்னால் மட்டுமே என்ற நினைப்பில் குறிப்பிட்ட நேரத்தில் பிளாட்ஃபாரம் வந்து, மணியடித்து, வளையத்துக்குள் சாவி வைத்துக் கொடுத்து, கொடியசைத்து.. வராத ரயிலுக்கு இத்தனை உற்சாக ஆர்பாட் டம் செய்யும் ஸ்டேஷன் மாஸ்டராக கிரீஷ், மனநிலை பிழன்ற இப்பாத்திரத்தில் பிரமாதப்படுத்துகிறார். கடைசிக் காட்சியில் பிளாட்ஃபாரத்தை ரயில் நிஜமாகவே கடந்து செல்வதாக நினைத்து கொடியசைத்துக் கொண்டே இப்பக்கமும் அப்பக்கமுமாக கழுத்தை அவர் திருப்புவது கவித்துவம்!

போகும் வழியில் கார் டயர் பஞ்சராகிவிட்டதால் உதவி கேட்டு பிளாட்பாரத்துக்கு வரும் இளைஞரும் இளைஞியும் அந்தக் கிராமத்துடன் இரண்டறக் கலந்துவிடுவதும்.. தொழிலதி பரும் அவர் மகனும் கிராமத்து வளர்ச்சியில் ஈடுபடுவதும்...

அகல ரயில் பாதையாக மாற்றுவதை காரணமாக்கி ரயில் அந்த ஊருக்கு வருவதை அதிகாரவர்க்கம் நிறுத்திவிட்டதாக சொல்வதும், அங்கே வரும் ரயில்வே மந்திரி, ரயிலை மறுபடியும் ஓட வைப்பதாக உறுதியளிப்பதும், ‘நாங்கள் இப்படியே இருந்துவிடுகிறோம்’ என்று ஊர் மக்கள் மறுப்பதும், தூக்கத்தில் நடக்கும் வியாதியுடைய தொழிலதிபர் ஏதோ விரக்தியில் இளைஞனின் கழுத்தை நெரிப்பதும்...

இத்தனைக் கதை போதுமா? ஸ்டேஷன் மாஸ்டர் பாத் திரத்தை மட்டும் பிரதானமாக்கி, நாடகத்தை உணர்ச்சி மேலிடச் செய்வதை விவேக் சங்கர் ஏனோ விரும்பவில்லை.

இப்போதைய வடிவத்தில் ரயிலுடன் சிநேகம் கொள்ள வாய்ப்பு கம்மி. ‘டூ’ விடவே மனம் விரும்புகிறது!

திருவடி சரணம்

‘ஞானத்துக்கும் ஆணவத்துக்கும் ஓர் நூலிழைதான் வித்தியாசம். நம்மிடம் ஏதுமில்லை என்பது ஞானம். நம்மைத் தவிர ஏதுமில்லை என்பது ஆணவம். அகந்தையை உதறிவிடு. சரணாகதி அடைந்துவிடு..’ என நாடகத்தின் முடிவில் தத்துவம் சொல்கிறார்கள்.

கலைவாணி குழுவுக்காக பூவைமணி கதை - வசனம் எழுத, சி.வி.சந்திரமோகன் இயக்கியுள்ளார்.

ஆனந்த விகடன் விருது வழங்கும் விழாவில் வெற்றிகர தொழி லதிபராக நம்பிக்கை விருது பெறுகிறார் வைதேகி, ஆணவம் நிரம்பியவர். முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்ள எதுவும் செய்யக் கூடியவர். மோசமான பெண்மணி. இப்படிப்பட்டவர் நம்பிக்கை விருது பெறுவதாகக் காட்டுவது முரண்.

எம்.பி.ஏ. படித்த இளைஞர் திவாகரன், வைதேகியின் தன் னம்பிக்கையால் கவரப்பட்டு அவரிடம் பணியில் சேர்கிறார். படிக்காமல் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போடுகிறார். புத்திசாலி இளைஞன் தன்னை முந்திவிடக்கூடாது என்று இளை ஞருக்கு பைசா பயனில்லாத வேலையை கொடுக்கிறார் வைதேகி. நம்பி என்கிற பெரியவர், திவாகரனை மூளைச் சலவை செய்து தன்னிடம் சரணடையச் செய்கிறார். பெரியவர் சொன்னதையெல்லாம் செய்கிறான். நம்பி யார்? வைதேகியுடன் அவருக்கு என்ன பகை? தொழிலதிபரின் ஆணவம் மடிகிறதா என்பன போன்ற விவரங்கள் அறிய, நாடகத்தைப் பார்க்கவும்.

திமிர்த்தனத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்க வேண் டிய பாத்திரத்தில் நன்கு சோபிக்கிறார் கவுதமி வேம்பு நாதன். நயவஞ்சகம் வெளியில் தெரியாமல் பசுத்தோல் போர்த் திக்கொண்டு ‘கலா நிலையம்’ சந்துரு இயல்பாக நடித்திருக் கிறார். ஆனால் இறுதியில் சாயம் வெளுக்கும்போது கொடுக்கப் பட வேண்டிய ரியாக் ஷன் இவருக்கு வசப்படவில்லை.

திவாகரனாக ஆதித்யாவும், மீராவாக ஹேமமாலினியும் நடிப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பெங்களூரு வில் இவர்களின் முதல் சந்திப்பின்போது இளையராஜாவின் ‘யமுனை ஆற்றிலே..’ பாடலை ஒலிக்க வைத்திருப்பது ஜோர். தொழிலதிபர் வசிப்பது அவரது வீடா அல்லது ஆபீஸ் - கம் - வீடா அல்லது ஆபீஸ் மட்டுமா? எதுவாக இருப்பினும் அதில் பணக்காரத்தனம் துளியும் இல்லை.

சில சினிமாக்கள் நாடகத்தனமாக இருக்கும். சில நாடகங்கள் சினிமாத்தனமாக இருக்கும். ‘திருவடி சரணம்’ இரண்டாவது ரகம்.Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x