Published : 26 May 2019 09:05 AM
Last Updated : 26 May 2019 09:05 AM

மிஷெல் ஒபாமாவைப் பின்தள்ளிய சாலி ரூனி

ஐரிஷ் எழுத்தாளர் சாலி ரூனியின் இரண்டாவது நாவலான ‘நார்மல் பீப்பிள்’ அவருக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ‘புத்தக உலகத்தின் பாஃப்டா விருது’ என்று அழைக்கப்படும் ‘நிப்பிஸ்’ பரிசு அவருக்குக் கிடைத்திருக்கிறது. மிஷெல் ஒபாமாவின் புத்தகத்தை முந்திக்கொண்டு இந்தப் புத்தகத்துக்கு பரிசு கிடைத்திருக்கிறது. சாலி ரூனிக்கு வயது 28-தான். அதற்குள் மிகப் பெரிய இலக்கிய ஆளுமையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார். 21-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக அவர் உருவெடுப்பார் என்று இலக்கிய விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

காலத்தில் கரைந்த வைனைனா

கென்ய எழுத்தாளரும் முக்கியமான எல்ஜிபிடி செயல்பாட்டாளருமான பின்யவாங்கா வைனைனா கடந்த மே 22 அன்று தனது 48-வயதில் காலமானது இலக்கிய உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 2014-ல் உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் ‘டைம்’ இதழ் இவரது பெயரை இணைத்திருந்தது குறிப்பிடத் தகுந்தது. நியூயார்க் டைம்ஸ், கார்டியன் இதழ்களில் கட்டுரைகள் எழுதியவர். விதவிதமான தோற்றங்களில் காட்சியளிப்பதில் பெருவிருப்பம் கொண்டவர் பின்யவாங்கா. இலக்கியச் செயல்பாட்டைத் தாண்டி ஆப்பிரிக்கா முழுவதும் 13 ஆயிரம் வகையான சமையல் குறிப்புகளைச் சேகரித்தவர் அவர் என்பது சுவாரசியமான விஷயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x