Published : 05 May 2019 08:10 AM
Last Updated : 05 May 2019 08:10 AM

துயரம் தோய்ந்த ஒரு மறுவாசிப்பு

துயரம் தோய்ந்த ஒரு மறுவாசிப்பு

விக்டர் ஹ்யூகோ என்றதும் ‘லெஸ் மிஸெரபில்ஸ்’ (தமிழில் ‘ஏழை படும் பாடு’ என்ற பெயரில் வெளியானது) நாவல்தான் நினைவுக்கு வரும். ஆனால், பாரிஸின் புராதன தேவாலயமான நோத்ர தாமில் சமீபத்தில் நடந்த தீ விபத்தை அடுத்து, ‘தி ஹன்ச்பேக் ஆஃப் நோத்ர தாம்’ நாவல் கவனம் பெற்றிருக்கிறது. பல லட்சம் வாசகர்கள் இந்நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். புதிய பதிப்புகள் அச்சாகிக்கொண்டிருக்கின்றன. இந்நாவலை 1831-ல் மத்திய கால பாரிஸின் தேவாலய மணி அடிப்பவனுக்கும் நடனமாதுவுக்கும் இடையிலான காதல் கதையாக நோத்ர தாமைப் பின்னணியாகக் கொண்டு எழுதினார் விக்டர் ஹ்யூகோ. அதற்குப் பிறகுதான், சிதிலமுற்ற தேவாலயத்தின் மீது கவனம் ஏற்பட்டுப் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. பிரெஞ்சு மக்கள் தங்கள் கலாச்சாரச் சொத்தான தேவாலயத்தை நினைவுகூர்வதற்கு வழியாக விக்டர் ஹ்யூகோவின் நாவலைத் துணையாக்கிக்கொண்டுள்ளனர். நாவலின் விற்பனை லாபத்தை தேவாலயப் புனரமைப்புப் பணிகளுக்குக் கொடுப்பதாக அறிவித்துள்ளன பதிப்பகங்கள்.

எழுத்து என் பயத்தைக் குறைக்கிறது

லேய்ல ஸ்லிமனி (Leila Slimani) ஒரு பத்திரிகையாளராகவும் இருப்பதால் அவரது புனைவுகளுக்கான அகத் தூண்டுதல்களை உண்மைச் சம்பவங்களிலிருந்தே பெறுகிறார். நியூயார்க்கில் இரண்டு சிறு குழந்தைகளைச் செவிலித்தாய் கொன்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இவரது பிரெஞ்சு நாவல், அமெரிக்காவில் ‘தி பெர்ஃபெக்ட் நானி’ என்ற பெயரிலும், பிரிட்டனில் ‘லல்லபி’ என்ற பெயரிலும் வெளிவந்து சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றது. “நான் எது குறித்தெல்லாம் பயப்படுகிறேனோ அதைப் பற்றி எழுதுகிறேன். நிறைய பெண்களைப் போல எனக்கும் என் குழந்தைகளின் இறப்பு பற்றிய பயம் உண்டு. நான் பாலியல் வல்லுறுவுக்கு உள்ளாகிவிடுவதாக நினைத்தும் அச்சப்படுவதுண்டு. எழுதுவதால் எனது பயம் கொஞ்சம் குறைகிறது” என்கிறார் ஸ்லிமனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x