Published : 10 Mar 2019 08:08 AM
Last Updated : 10 Mar 2019 08:08 AM

360: தஞ்சை தமிழ்ப் பல்கலையில் நவீன நாடகக் கலை விழா

2000-ம் ஆண்டில் 3 நாட்கள் நாடக விழாவை நடத்தியது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறை. பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த விழா, அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடரவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாடகங்களின் மீது கவனம்செலுத்தத் தொடங்கியிருக்கிறது தமிழ்ப் பல்கலைக்கழகம். வருகின்ற மார்ச் 18-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை ஆறு நாட்களுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நவீன நாடகக் கலைவிழா நடக்க உள்ளது. இவ்விழாவில் 14 நாடகங்கள் மேடையேற உள்ளன. சமகால தமிழ் நவீன நாடக ஆளுமைகளான பிரளயன், குமரன் வளவன், செல்லா செல்லம், வ.ஆறுமுகம், சுப்பையா, மு.ஜீவா, ச.முருகபூபதி, விஜயகுமார், திலீப்குமார், அ.மங்கை, ரெஜின் ரோஸ், கி.பார்த்திபராஜா, கே.எஸ்.கருணா பிரசாத், இரா.இராசு ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

திருப்பரங்குன்றத்தின் இன்னொரு முகம்

மதுரை டி.வி.எஸ். மெட்ரிக் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி இ.ரெப்லின் ஒரு காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. குன்று, கோயில், கடைத்தெருக்கள் என்று திருப்பரங்குன்றத்தைச் சுற்றி 6,000 புகைப்படங்களை எடுத்திருக்கிறார் ரெப்லின். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 225 படங்கள் ‘அதர் பேஸ் ஆப் திருப்பரங்குன்றம்’ என்ற தலைப்பில் புத்தகமாயிருக்கிறது. இந்த மாணவி புகைப்படக் கலைஞர் மட்டுமல்ல, எழுத்தாளரும்கூட.

‘தி ரெஸ்ட்லெஸ் பேட்ஸ்’ என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பையும் ‘தி வெஞ்சசம்’ செவன் என்ற தலைப்பில் நாவலும்கூட எழுதியிருக்கிறார். பன்முகத் திறமையாளர் ரெப்லினுக்கு வாழ்த்துகள்!

கல்வெட்டு ஆய்வில் உவேசா நூலகர்

சென்னையின் முக்கிய நூலகங்களில் உவேசா நூல்நிலையமும் ஒன்று. அதன் காப்பாட்சியர் கோ.உத்திராடத்தை  நூலகராகவே பலரும் அறிந்திருப்பார்கள். அவருக்குக் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஆர்வம் உண்டு. தனது ஆய்வுத் தோழர்கள் ப.பூபாலன், ரெங்கையா முருகன் ஆகியோருடன் ஆய்வுப் பயணங்களை நடத்திக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் இந்த ஆய்வுக் குழு வந்தவாசி அருகே உள்ள மழவங்கரணை அருகே பாழடைந்த நிலையில் இருந்த ஒரு சிவன் கோயிலில் விக்கிரமசோழன் கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கி.பி.12-ம்  நூற்றாண்டில்  வெட்டப்பட்ட  இக்கல்வெட்டில் நிலம் விற்பனை செய்யப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரலில் மலர்கிறது நிலவெளி

பத்தாண்டுகளுக்கு மேலாகப் புத்தக விற்பனையிலும் பதிப்பிலும் ஈடுபட்டுவரும் டிஸ்கவரி புக்பேலஸ் நிறுவனம், இப்போது இலக்கிய இதழ் ஒன்றைக் கொண்டுவர உள்ளது. வரும் ஏப்ரலில் இருந்து வெளிவரும் மாத இதழுக்கு ‘நிலவெளி’ எனப் பெயரிட்டிருப்பதாக பதிப்பாளர் வேடியப்பன் அறிவித்திருக்கிறார். டிஸ்கவரி ஏற்கெனவே ‘அயல் சினிமா’ என்ற பெயரில் சினிமா இதழ் ஒன்றைக் கொண்டுவருகிறது.

தடை பல தாண்டி வெளிவந்த புத்தகம்

வழக்கறிஞர் தி.லஜபதிராய் எழுதிய ‘நாடார்களின் வரலாறு கறுப்பா? காவியா?’ புத்தக வெளியீட்டு விழா நேற்று மாலை மதுரை உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. நாடார் சமூகத்தினர் ஆலய நுழைவுப் போராட்டம், தோள் சீலைப் போராட்டம், அதுதொடர்பான வழக்குகள், பின்னணி அடங்கிய புத்தகம் இது. அரசியல் தலையீடு காரணமாக, விழாவுக்கு வழங்கிய அனுமதியை உலகத் தமிழ்ச் சங்கம் திடீரென ரத்துசெய்தது. இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றார், நூலாசிரியர். ஆனாலும், புத்தக வெளியீட்டன்று திடீரென உவரியைச் சேர்ந்த மற்றொருவர் புத்தகத்துக்கே தடை கோரி பொது நல வழக்குத் தொடர்ந்தார். உடனடியாக அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புத்தகத்துக்கும் வெளியீட்டு விழாவுக்கும் தடையில்லை என்று கூறியது. இதைத் தொடர்ந்து மாலையில் புத்தக வெளியீட்டு விழா போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. மக்களவைத் தேர்தல் நேரம் என்பதால், இந்த நூல் சமூக, அரசியல் தளத்திலும் அதிர்வை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

தொகுப்பு - கே.கே.மகேஷ், ஜெய்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x