Published : 02 Mar 2019 10:13 am

Updated : 02 Mar 2019 10:13 am

 

Published : 02 Mar 2019 10:13 AM
Last Updated : 02 Mar 2019 10:13 AM

360: கேமரோவோடு ஒரு கவிஞர்...

360

புதுகையில் இலக்கிய ‘நிகழ்’வு!

புதுக்கோட்டையில் கலை, இலக்கிய நிகழ்வுகளுக்கான புதிய மேடையாக உருவாகியிருக்கிறது ‘நிகழ்’ எனும் புதிய அமைப்பு. பிப்ரவரி 3-ல் நடந்த முதல் நிகழ்ச்சியில் யாழியின் ‘இரு நிழல்களின் ஒப்பனை’, சுரேஷ் மான்யாவின் ‘கல்நாகம்’, யியற்கை எழுதிய ‘கடைசி தூரதேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை’ ஆகிய நூல்கள் குறித்து வாசிப்பனுபவங்கள் முன்வைக்கப்பட்டன. மார்ச் 3 காலை 10 மணிக்கு நடக்கவிருக்கும் அடுத்த நிகழ்வில் மெளனன் யாத்ரீகாவின் ‘புத்தர் வைத்திருந்த தானியம்’ நூல் குறித்து கஸ்தூரி ரங்கனும், இதயா ஏசுராஜின் ‘வருகைக்கான ஆயத்தங்கள்’ குறித்து பா.தென்றலும் பேசுகிறார்கள். ‘உலகத் திரையில் நிகழ்காலத் தமிழ்’ எனும் தலைப்பில் புதுகை செல்வா பேசுகிறார். கவிஞரும் புகைப்படக் கலைஞருமான சுரேஷ் சூர்யாவின் முன்னெடுப்பு இது.


உயிர்த்தெழும் தொல்லியல் துறை

பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக த.உதயச்சந்திரன் பொறுப்பேற்றிருந்தபோது, அறுபதுகள் தொடங்கி எண்பதுகள் வரை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்ட 700-க்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழிணைய நூலகத்தில் வெளியிட்டார். மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் அரியதொரு களஞ்சியமாக அம்முயற்சி அமைந்திருந்தது. தற்போது தொல்லியல் துறை ஆணையராகப் பொறுப்பேற்றிருக்கும் அவர், தென்னிந்திய தொல்லியல் துறை இதுவரை வெளியிட்டுள்ள கல்வெட்டியல், சுவடியியல் தொடர்பான அனைத்து நூல்களையும் தமிழிணைய நூலகத்தில் இடம்பெறச் செய்திருக்கிறார். கூடவே, அறநிலையத் துறையும் தனது சேகரிப்பில் உள்ள புத்தகங்களை இணையவெளியில் பகிர்ந்துகொண்டுள்ளது. தொல்லியல் துறையின் ஒரு பகுதியாகக் கீழ்த் திசை சுவடிகள் நூலகத்தைப் புனரமைக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. கல்லூரிகளுடன் இணைந்து கல்வெட்டியல், சுவடியியல் பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்பட்டுவருகின்றன.

திசையெங்கும் ஒலித்த கிராமத்துக் குயில்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ‘கலை இரவு’ மேடைகளில் கடந்த 30 ஆண்டுகளாக ஒலித்த வையம்பட்டி முத்துச்சாமியின் குரலை இனி கேட்க முடியாது. உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்தவர், கடந்த பிப்.27-ல் காலமானார். வையம்பட்டி அருகேயுள்ள மின்னாம்பள்ளி எனும் கிராமத்தில் பிறந்த முத்துச்சாமி, 1980-ல் ஓசூர் சிப்காட்டிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணியில் சேர்ந்தவர். உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கை, அவர்களது போராட்டங்கள், இன்ப-துன்பங்கள் என அனைத்தையும் 1,000-க்கும் மேற்பட்ட பாடல்களின் வழியாகப் பதிவுசெய்தவர். ‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா..?’, ‘பொண்ணு பொறந்த சேதியக் கேட்டு கண்ணு கலங்காதே...’ என்று தனது பாடல்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பார் முத்துச்சாமி.

வேலூர் புத்தகக்காட்சி தொடங்கியது

வேலூர் காட்பாடியில் சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ நாராயணா திருமண மண்டபத்தில் பிப்ரவரி 28 தொடங்கி மார்ச் 8 வரையிலும் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் இப்புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ பங்கேற்கிறது. ஸ்டால் எண் 15.

இந்து குழும வெளியீடுகள் அனைத்தும் 10% தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

கேமரோவோடு ஒரு கவிஞர்...

சென்னையிலும் கோவையிலும் எந்த இலக்கிய நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கே கையில் கேமரோவோடு ஆஜராகிவிடுகிறார் கவிஞர் அய்யப்ப மாதவன். கவிதைகள் மீதிருந்த ஆர்வம் குறைந்து இப்போது புகைப்படக் கலையில் தீவிரமாகிவிட்டார். இலக்கியவாதிகளைத் தேடித் தேடி அவர்களை வெவ்வேறு கோணங்களில் படம் எடுத்துத் தள்ளுகிறார். தமிழிலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர்களுக்கு நல்ல புகைப்படங்கள் கூட இல்லை. மோகன்தாஸ் வடகரா, புதுவை இளவேனில், அய்யப்ப மாதவன் போன்ற புகைப்படக் கலைஞர்களால் நிச்சயமாக அந்தக் குறை அடுத்தத் தலைமுறைக்கு வந்துசேராது.

- தொகுப்பு: மு.மு, ஜெய்Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x