Published : 20 Jan 2019 08:52 AM
Last Updated : 20 Jan 2019 08:52 AM

சிறார் இலக்கியத்துக்கு அண்டரண்டப்பட்சியின் சிறகுகள் வேண்டும்!- யூமா வாசுகி பேட்டி

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் சுமங்களாவின் ‘பேரன்பின் பூக்கள்’ எனும் விரிவான கதைத் தொகுப்பு, தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான சமீபத்திய வரவாகியிருக்கிறது. இதை மொழிபெயர்த்த யூமா வாசுகி, சிறார்களுக்கான 50-க்கும் மேற்பட்ட முக்கியமான உலக, இந்தியப் புத்தகங்களைத் தமிழில் தந்தவர். ஓவியர், கவிஞர், நாவலாசிரியர் எனப் பல்வேறு முகங்கள் கொண்ட அவர், தமிழ்ச் சிறார் இலக்கியத்துக்கு அயல் மொழி வளங்களைக் கொண்டுசேர்க்கும் முதன்மை ஆளுமையாக இருக்கிறார். தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் முக்கியத்துவம், அதன் இன்றைய நிலை, எதிர்காலம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து…

சிறார் இலக்கிய உலகுக்குள் எந்தத் தருணத்தில் காலடி எடுத்து வைத்தீர்கள்?

சிறார் இலக்கியம் மிகவும் வளமாக இருந்த சூழலில்தான் என் பாலபருவம் நிகழ்ந்தது. மாயாஜாலக் கதைகள், படக்கதைகள், சிறார் நாவல்கள் என்று பல நூறு புத்தகங்கள் நண்பர்களிடையே கைமாறிப் பயணித்தன. நித்ய சைதன்ய யதியை, 90-களின் தொடக்கத்தில் ஜெயமோகன் எனக்கு அறிமுகப்படுத்தினார். யதி எழுதிய, ‘இத்திரி காரியம்’ (சின்ன விஷயம்) எனும் நூலைப் படிப்பதற்காக நான் மலையாளம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அரிச்சுவடி பழகிய பிறகு, சிறார் நூல்கள் வழியாக மலையாளம் இலகுவாகப் பிடிபடும் என்று தோன்றியது. அதனால், மலையாள சிறார் இலக்கியங்களைத் தேடிப் படிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் தமிழ் – மலையாளம் சிறார் இலக்கியங்களுக்கு இடையிலுள்ள மிகப் பெரிய இடைவெளி புரிந்தது. தற்காலச் சிறார் இலக்கிய வறட்சியில், மலையாள சிறார் நூல்கள் சிலவற்றை முன்மாதிரியாக வைக்க எண்ணி மொழிபெயர்க்கத் தொடங்கினேன். மொழிபெயர்த்த முதல் நூல், பேராசிரியர் சிவதாஸ் எழுதிய ‘உமா குட்டியின் அம்மாயி.’

தொடர்ச்சியாக சிறார் இலக்கிய மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்துவதற்குத் தனிப்பட்ட காரணம் ஏதும் உண்டா?

தற்போதைய தமிழ்ச் சிறார் இலக்கிய மெத்தனத்துக்கு - மொண்ணைக்கு மாற்றாக, என்னால் இயன்றவரையில் மொழிபெயர்ப்பின் வாயிலாக சிறந்த முன்மாதிரிகளை உருவாக்குகிறேன். நம் போதாமை குறித்த என் ஆதங்கம்தான் இந்தச் செயல்பாட்டுக்குக் காரணம்.

உங்கள் தொடர் செயல்பாடு இங்கே எத்தகைய தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது?

மீன்கள் இருக்கட்டும். சிறு பாசித்துணுக்கைக்கூட என் சிறு தூண்டில்கள் கொண்டுவரவில்லை. பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் சிறந்த படைப்புகள், தமிழ்ச் சிறார் இலக்கியப் படைப்பாளிகள் பெரும்பாலோரின் மனங்களில் எந்தத் தூண்டுதலையும் ஏற்படுத்தவில்லை. படைப்புரீதியாக அவர்களை சுயபரிசோதனைக்கு ஆட்படுத்தவில்லை. சிறார் இலக்கியம் என்பது, விட்டில் சிறகுகளை உதிர்த்து, அண்டரண்டப்பட்சியின் பெரும் சிறகுகள் கொண்டு கலையின் வானளாவ வேண்டும், உன்னதங்களை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இங்கே வலுப்பெறவில்லை.

மலையாளச் சிறார் படைப்பு ஒன்றில், கிராமத்திலுள்ள சில வீடுகள், இரவில் எல்லோரும் தூங்கிய பிறகு ஊருக்கு வெளியே சென்று கூடிப்பேசுகின்றன. இந்த வினோதத்தின் வழியாக மிகுசுவையாகப் பல விஷயங்கள் குழந்தைகளிடம் கடத்தப்படுகின்றன. இவை கற்பனையின், நம்பகத்தின், ஆத்மார்த்தத்தின் நிறைந்த அம்சங்களோடு கவித்துவமாக வெளிவருகின்றன. வெறுமனே உயிரினங்களைக் கதாபாத்திரங்களாக்கிப் பேசவைப்பதோ, கதைகளை நீதிபோதனைச் சட்டகங்களாக்குவதோ மிகப் பெரும்பாலும் இல்லை. கலை இலக்கியத்துக்கு மேற்பட்டு - பெண்ணியம், அறிவியல், தலித்தியம், அரசியல் இயக்கங்கள் முதலாக எந்தத் தளத்தைச் சேர்ந்தவர்களும் தங்களால் இயன்ற வழிகளில் இயன்ற துறைகளில் விருப்பார்வத்துடன் கடின உழைப்பைச் செலுத்தி குழந்தைகளுக்குப் பங்களிக்க அங்கே விரும்புகிறார்கள்.

தமிழ்ச் சிறார் இலக்கிய மொழிபெயர்ப்புகள் முன்பும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லையா?

ரஷ்யச் சிறார் இலக்கிய நூல்கள் வாயிலாக, தமிழ்ச் சிறார் இலக்கியத்துக்கு சமீப காலம்வரை ஊட்டம் கிடைத்துவந்துள்ளது. எல்லைகளைக் கடந்து உலகக் குழந்தைகளை ஈர்த்த ரஷ்யச் சிறார் பேரிலக்கியங்கள், நமக்குப் பெரிய அளவில் எளிதாக, மலிவாக, பரவலாகக் கிடைத்தன. அதை அந்தக் கால எழுத்தாளர்களும் சிறார்களும் பெருமளவில் படித்தார்கள். அந்த வளமும் பக்குவமும் கிடைத்தும்கூட, என்ன பெரிய நல்விளைவு தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் ஏற்பட்டுவிட்டது என்ற கேள்வியே எஞ்சுகிறது. அந்த அற்புதப் படைப்புகள் பல காலம் நம் செல்வமாக நிலைபெற்றிருந்தும்கூட, நம் மண்ணில் சிறார் இலக்கியம் சார்ந்து சேர்மானங்கள் கூடவில்லை. இப்படி நடை பழகுங்கள் என்று அந்த யானைகள் அணிவகுத்துக் காட்டின. ஆயினும், நாம் இன்றும் நடைவண்டியைக் கைவிடவில்லை.

ரஷ்யச் சிறார் இலக்கியங்கள் வருவதற்கு முன்னால் நேரடி முயற்சிகள் முக்கியமானதாக இல்லையா?

1950–60-களில் தொடங்கிய தமிழ்ச் சிறார் இலக்கிய முயற்சிகள் மிகப் பெரிய அற்புதங்களாக, ரசித்து அனுபவித்தவையாக, நம் மனத்துக்குள் என்றும் காத்துவைத்தவையாக இருந்திருக்கின்றன. குழந்தைகள் பேரார்வத்துடன் பின்தொடரும்படி கதைகள் சொல்லப்பட்டன. இப்படிப்பட்ட முயற்சிகளும் முனைப்புகளும் சிறுகச் சிறுகக் குறைந்து மிகவும் அபாயகரமான ஒரு கட்டத்துக்கு இப்போது வந்து சேர்ந்திருக்கிறோம். இது நம் சமூகத்தின் கூட்டுப் பிரக்ஞையின் அப்பட்டமான தோல்வி. மலினப்பட்ட, உணர்ச்சியும் விகசிப்பும் அற்ற ஒரு நெருக்கடியில் சிக்கிக்கொண்டு நம் சிறார் இலக்கியம் திசைக்குழப்பத்தில் தவிக்கிறது. சீராக சுவாசிக்கக்கூட  அதனால் முடியவில்லை. நல்ல சிறார் இதழ்கள், பதிப்புகள், முக்கியமான இலக்கியப் படைப்புகள், கதைசொல்லல்போன்று இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கின்றன. அவர்களெல்லாம் வணக்கத்துக்குரியவர்கள். ஆனால், அவை உடனடிப் பெருவிளைவை உருவாக்கும் சக்தியற்றவை.

இந்தத் தேக்க நிலைக்கு என்ன காரணம்?

பெரும் சிரமங்கள், வலிந்து திணித்தல், கண்டிப்பு என்ற பெயரில் ஒடுக்குதல் ஆகியனவெல்லாம் தேவையில்லாமல், நல்ல கலை இலக்கியங்கள் சிறாரின் ஆன்மாவோடு கரைந்து, அவர்களின் ஆளுமையை பூ மலர்வதுபோல அவ்வளவு இயல்பாக மலர்த்தக்கூடியவை. ஆனால், இது நம் சமூகத்துக்குப் புரியவில்லை.

சிறார் கலை இலக்கியம் என்பது அரசியல், சமூக மாற்றத்தைக் குறித்தான முக்கியச் செயல்பாடுமாகும். சிறார் இலக்கியம் குறித்தான விமர்சனமும் கலந்துரையாடலும் எடிட்டிங்கும் நம்மிடையே இல்லை. ஒரு படைப்பைக் குறித்து கருத்துப் பகிர்தல், அர்ப்பணிப்பு, படைப்பு – தான் உருவாகிக்கொள்வதற்குக் கோரும் கடின உழைப்பு ஆகியவை பெரும்பாலும் சிறார் எழுத்தாளர்களிடையே காணப்படுவதில்லை. தற்கால சிறார் எழுத்தாளர்கள் பெரும்பாலோருக்குக் குழந்தைகளின் மீதான கனிவு இல்லை. அவர்களின் கற்பனை வெளி கனன்று வெடிப்புற்றுக் கிடக்கிறது. எழுத்தின் நுட்பமோ தேர்ந்த சொல்முறையோ அவர்களுக்குக் கைவரவில்லை. மொழி அவர்களிடத்தில் அந்நியப்பட்டுக் கிடக்கிறது. சிறார் எழுத்தின் பல்வேறு பரிமாணங்கள் பற்றியோ, பரீட்சார்த்த முயற்சிகள் குறித்தோ கவனம் கொள்வதில்லை. சிறார் இலக்கியம் படைப்போரில் 10-ல் 8 பேர் தற்புகழ்ச்சி வேட்கையுடனும், அங்கீகாரம், விருதை நோக்கிய திட்டமிட்ட முயற்சியாகவும் சிறார் இலக்கியத்தைக் கையாள்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளுக்கான உணவு, உடை, படிப்பு ஆகியவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பகுதியை, சிறார் கலை இலக்கியத்துக்கும் நாம் கொடுக்க வேண்டும். நம்மையறியாமலேயே சிறாரின் எல்லையற்ற படைப்பூக்கத்தை இல்லாமற்செய்து – அவர்கள் இயல்பின் மகிமைகளை நாம் அழித்துவிடுகிறோம். தமிழ் மொழி, இலக்கியம் சார்ந்து பல நிகழ்ச்சிகளுக்கு, செயல்திட்டங்களுக்கு, மாநாடுகளுக்குக் கோடிகோடியாகப் பணம் செலவிடப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இருக்கும் ஒரே சிறார் இலக்கிய அரசு நிறுவனமான, கேரளத்தின் ‘பாலசாகித்ய இன்ஸ்டிட்யூட்’போல நமக்கு ஏன் ஒரு சிறார் இலக்கிய அரசு நிறுவனம் இல்லை? தனிநபர் செயல்பாடுகளைத் தாண்டி சிறார் கலை இலக்கியம், சிறார் மேம்பாடு குறித்த விரிவான முயற்சிகளை அரசுதான் முன்னெடுக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் நவீன இலக்கியம், சிறார் கலை இலக்கியம் முக்கிய பாடப்பகுதிகளில் ஒன்றாக மாற வேண்டும். அதை நடத்துவதற்கு ஆசிரியர்கள் தகுதி பெற பயிற்சி வகுப்புகள் தேவை. அப்போது ஒவ்வொரு குழந்தையின் வீட்டிலும் ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம் இருக்க வேண்டும் என்பதை ஒருக்காலும் தவிர்க்க முடியாது. இப்படியான செயல்பாடுகளினூடேதான் சிறார் கலை இலக்கியம் அவற்றுக்குரிய முக்கியத்துவத்தைப் பெறும். வாசிப்பு என்பது வெறும் மதிப்பெண் சமாச்சாம் அல்ல. அது அன்புக்கும் சக மனித உறவுக்கும் சமூக, பிரபஞ்சப் புரிதலுக்குமான தோற்றுவாய். அரசியல், சுற்றுச்சூழல், இலக்கியம், மனித வாழ்க்கை என அனைத்திலும் ஊடாடி, செல்வாக்கு செலுத்தக்கூடியது. எல்லையற்று வளரும் சாத்தியம் கொண்டது.

- ஆதி வள்ளியப்பன்

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x